Published : 17 Apr 2014 11:06 AM
Last Updated : 17 Apr 2014 11:06 AM

சிவப்பழகு கிரீம் விற்பனை அமோகம்: ரூ. 2,600 கோடிக்கு விற்பனை

பெரும்பாலான திருமண விளம்பரங்களில் சிகப்பான பெண் தேவை என்பது பொதுவாக இடம் பெறுகிறது. இந்தியர்களுக்கு பொதுவாக சிகப்பு மீது ஒரு அதீத ஆசை என்றே கூறலாம். இதனாலேயே மேனி அழகை சிகப்பாக்கும் கிரீம்களின் விற்பனை இங்கு அமோகமாக இருக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை.

ஓரளவு மாநிறமாக இருப்பவர் மற்றும் கருப்பாக இருப்பவர்களும் தங்களது தோற்றத்தை சிகப்பாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டுதானிருக்கின்றனர். இதனாலேயே 2010-ம் ஆண்டில் மட்டும் சிகப்பழகு கிரீம்கள் விற்பனை ரூ. 2,600 கோடியைத் தொட்டுள்ளது. 2012-ம் ஆண்டில் இந்தியர்கள் பயன்படுத்திய மேனியை சிகப்பாக்க பயன்படும் கிரீம்களின் அளவு 233 டன்னாக உயர்ந்துள்ளது.

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இப்போது சிகப்பழகு கிரீம்களை அதிகம் வாங்கத் தொடங்கிவிட்டனர். இதனால் இத்தகைய கிரீம் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதாக ஏசி நீல்சன் நடத்திய சந்தை கணக்கெடுப்பு ஆய்வு தெரிவிக்கிறுது.

சிகப்பாக இல்லாத பெண்களுக்கு திருமணம் ஆகாது என்ற நிலை இங்கு அதிகரித்து வருவதும் இதற்கு முக்கியக் காரணம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

டி.வி. ஊடகம் வந்தபிறகு சிகப்பாக இருப்பவர்கள் கூட இத்தகைய கிரீமை பயன்படுத்துவதாக விளம்பரம் செய்கின்றன. இதுவும் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்று ஸ்கென்டோர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மிட்டல் தெரிவித்துள்ளார்.

முதுமையைத் தடுக்க உதவும் கிரீம்களின் விற்பனையும் தற்போது அதிகம் விற்பனையாகிறது. மேனியை சிகப்பாக்கும் கிரீம்களின் சந்தை விற்பனை 56 சதவீத அளவுக்கு உள்ளதாக மிட்டல் கூறியுள்ளார்.

கிரீம்கள் பயன்படுத்துவதில் குறிப்பிட்ட வயதினர் என்றில்லை. இளம் பெண்கள் முதல் நடுத்தர வயது பெண்கள் வரை இத்தகைய கிரீம்களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.

தங்களது அழகு நிலையத் துக்கு வரும் பெண்களில் பெரும் பாலானவர்கள் தங்களது நிறத்தை சிவப்பாக்குவதற்கான சிகிச்சை யைத் தொடருமாறு கேட்பதாக நேச்சுரல் சலூன் நிறுவனர் வீனா குமாரவேல் தெரிவித்துள்ளார். ஆனால் ஒருவரை முற்றிலுமாக சிகப்பாக்க முடியாது. மேலும் ரசாயன கலவைகள் பயன்படுத் தாமல், தோலின் நிறத்தை சற்று மாற்றி அதை பளபளப்பாக இருக்கும்படி செய்கிறோம் என்று அவர் கூறினார்.

பெரும்பாலான பெண்களுக்கு பேஷியல் எனப்படும் முகத்தை சற்று பளபளப்பாகக் காட்டும் சிகிச்சைதான் தரப்படுகிறது. 90 சதவீத பெண்கள் 20 வயதுக்கும் குறைவானவர்கள். இவர்கள் திருமணத்துக்கு முன்பாக இத்தகைய பேஷியல் செய்து கொள்கின்றனர்.

தென்னிந்தியாவில் பெண்க ளின் சருமம் அவ்வளவாக உலர்ந்த தன்மையுடன் இருக்கும். மேலும் இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையில் பெரும் மாற்றம் இருக்காது. இதனால் ஈரத் தன்மை கொண்ட பேஷியல் அவர்களுக்குத் தேவை.

வட மாநிலங்களில் பெரும்பாலான சமயங்களில் குளிர் நிலவுவதால் அங்கிருப்பவர்களுக்கு ஈரப்பதம் இருப்பதால், விசேஷ காலங்களில் மட்டும் பேஷியல் செய்து கொள்வர். ஆனால் அவர்களுக்கு சிகப்பழகாக்க வேண்டிய தேவை இருக்காது.

பேஷியல் செய்து கொள்வதற்கு கட்டணம் ரூ. 600 முதல் உள்ளது. ஃபோட்டோபேஷியல் செய்து கொள்ள ரூ. 5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பெரும்பாலான சிகப்பழகு கிரீம்களில் பிளீச்சிங் ரசாயனம் இருப்பதால் இவை ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இத்தகைய ரசாயன கிரீம்கள் சருமத்துக்குக் கேடு விளைவிக்கின்றன. சில கிரீம்கள் ஸ்டீராய்ட் எனப்படும் ஊக்குவிப்பான்களைக் கொண்டுள்ளன. இத்தகையவை நீண்ட காலத்தில் தோலில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே சிகப்பழகு கிரீம்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று மிட்டல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x