Published : 30 May 2016 09:58 AM
Last Updated : 30 May 2016 09:58 AM

பி நோட்ஸ் விதிகளில் மாற்றம்: கருப்பு பணத்துக்கான இடம் இந்தியா அல்ல- செபி அமைப்பு திட்டவட்டம்

பி நோட்ஸ் முறையிலான முதலீடு தவறாக பயன்படுத்தப்படுவதால் செபி கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் யூகே சின்ஹா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இந்தியர்கள் இதுபோல வெளிநாட்டு முதலீட்டு முறைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுத்த முடியாது. கருப்பு பணத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கான (பிநோட்ஸ்) விதியில் செபி மாற்றம் செய்துவருகிறது. விரைவில் இவை இறுதி செய்யப்படும்.

இந்தியா நீண்ட கால முதலீட்டை எதிர்பார்க்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்யலாம், அதில் எந்த தடையும் இல்லை. பி நோட்ஸ் மூலமாக முறையான முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

பி நோட்ஸ் முதலீடுகளுக்கு எந்த சிறப்பு சலுகையும் கிடையாது. ஹெட்ஜ் பண்ட்ஸ் உள்ளிட்ட எந்த முதலீட்டுக்கும் சிறப்பு சலுகை கிடையாது. சில முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீட்டை தொடங்கும் போது இந்த பிநோட்ஸ் மூலமாக வரலாம். ஆனால் அவர்கள் முழுமையாக கேஒய்சி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து முறைகேடாக வெளிநாடுகளுக்கு செல்லும் கருப்பு பணம், பி நோட்ஸ் மூலமாக இந்தியாவில் மீண்டும் முதலீடு செய்யப்பட்டது. சமயங்களில் தங்களுடைய சொந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு செயற்கையாக பங்குகளின் விலையும் உயர்த்தப் பட்டது. கடந்த 2007-08-ம் ஆண்டுகளில் இதுபோன்ற சில முறைகேடுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தோம்.

இப்போது இந்தியர்கள் இந்த முறையை நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுத்த முடியாது. இதேபோல சில ஹெட்ஜ் பண்ட் நிறுவனங்களும் தங்களது அடையாளத்தை மறைத்து பி நோட்ஸ் மூலமாக இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.

தற்போது பி நோட்ஸ் மூலமான முதலீடு 2.12 லட்சம் கோடி ரூபாய். ஒட்டுமொத்த அந்நிய முதலீட்டில் இது 9.3 சதவீதம் மட்டுமே. ஆனால் கடந்த 2007-ம் ஆண்டு ஒட்டு மொத்த அந்நிய முதலீட்டில் பி நோட்ஸ் மூலமான முதலீடு 55 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது என்று சின்ஹா கூறினார்.

பிஏசிஎல் சொத்துகளை விற்க முயற்சி

சிறுமுதலீட்டாளர்களிடம் இருந்து முறைகேடாக திரட்டிய 60,000 கோடி ரூபாயை மீட்க பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துகளை விற்க செபி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த குழுமத்தின் சொத்துகளை செபி பறிமுதல் செய்திருக்கிறது. இந்த சொத்துகள் வரும் ஜூலை 5-ம் தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும். இரண்டு சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சொத்தின் அடிப்படை ஏலம் 29.59 கோடி ரூபாய். இன்னொன்றின் அடிப்படை ஏலம் 90 லட்ச ரூபாய்.

விருப்பம் இருக்கும் முதலீட்டாளர்கள் இந்த சொத்துகளை வரும் ஜூன் 9-ம் தேதி பார்வையிடலாம். சொத்தின் ஆரம்ப விலையில் 10 சதவீத தொகையை வரும் ஜூன் 27-ம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x