Published : 01 Jul 2022 07:34 PM
Last Updated : 01 Jul 2022 07:34 PM

‘பொட்டல’ அரிசி, பருப்புக்கு 5% ஜிஎஸ்டி... “சிறு வணிகர்களுக்கும் ஏழைகளுக்கும் பெரும் பாதிப்பு!”

பொட்டலங்களில் (அ) பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு, பொரி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக ஜிஎஸ்டி வரி விதிப்பதால் சிறு வணிகர்களும், ஏழை மக்களும் பாதிக்கப்படுவர் என்று வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், "ஜிஎஸ்டியால் வணிகர்களுக்கும் பயன் இல்லை, மாநில அரசுக்கும் பயனில்லை. பொதுமக்களுக்கும் பயனில்லை” என்ற புலம்பலும் தொடர்கிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 47-வதுகூட்டம் சண்டீகரில் நடந்தது. இக்கூட்டத்தில் சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்த முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அதில் குறிப்பாக, எல்இடி விளக்குகள், மின் விளக்குகள், பிரின்டிங் மை, பேனா மை, கத்தி, பிளேடு போன்ற பொருட்களுக்கு வரி 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வணிக முத்திரையற்ற பொட்டலங்களில் (அ) பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு, பொரி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு வணிகர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வரி விதிப்பினால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பதிக்கப்படுவார்கள். இதனால் இந்த வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறித்து தமிழக வணிக சங்க பேரவையின் மாநில கூடுதல் செயலாளர் மணி கூறும்போது, ”தமிழ்நாடு பொது விற்பனைச் சட்டம் இருக்கும்போது, அதைப் பற்றிய புரிதலும் எங்களுக்கு எளிமையாக இருந்தது. அதனைத் தொடர்ந்து மதிப்புக் கூட்டு வரியாக அது மாற்றப்பட்டது. வணிகர்கள் இதனை எளிதில் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தோம். ஆனால் அதனை கற்றுக்கொள்வதற்கே எங்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்த வரிகளை பற்றிய புரிதல் வந்த பிறகு, ‘அந்த வரி சட்டங்களில் ஓட்டை உள்ளது. இனி தவறே நடக்காது’ என்று ஜிஎஸ்டியை மத்திய அரசு அமல்படுத்தியது. ஜிஎஸ்டியை அமல்படுத்தியபோது வணிகர்கள் யாருமே தவறு செய்ய முடியாது என்று கூறினார்கள். ஜிஎஸ்டியை புரிந்துகொள்ள முடியவில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனே இன்று கூறியிருக்கிறார். இந்த வரி உயர்வு முடிவுகளை ஜிஎஸ்டி கவுன்சில்தான் எடுக்கிறதா அல்லது மத்திய அரசு எடுக்கிறதா புரியவில்லை என்று அவர் கேட்கிறார்.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகு இன்றும் எங்கள் வணிகத் தகவல்களை ஜிஎஸ்டி இணையப் பக்கத்தில் பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. அதிகாரிகளுக்கும் இதுகுறித்த புரிதல் இல்லை. இவ்வாறு ஐந்து ஆண்டுகளாக படித்தவர்களால் கூட பின்பற்ற முடியாத நிலையில்தான் ஜிஎஸ்டி உள்ளது.

மணி

ஜிஎஸ்டினால் வணிகர்களுக்கும் பயன் இல்லை, மாநில அரசுக்கும் பயனில்லை, பொதுமக்களுக்கும் பயனில்லை. ஆகவே ஜிஎஸ்டி போன்ற குழப்பான வரி விதிப்பு முறை நமது இந்திய தேசத்திற்கு ஒத்து வராது. கிட்டதட்ட 98 முறை ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றி அமைத்திருக்கிறார்கள். இதிலிருந்து அவர்களே புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இந்தச் சூழலில் சண்டீகரில் நடந்த 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ளது. அரிசிக்கு கூட வரி விதித்திருக்கிறார்கள். நல்ல தரமான பொருட்களை கொடு என்று கூறிவிட்டு, அவ்வாறு கொடுத்தால் அதற்கும் 5% வரி விதித்திருக்கிறார்கள் என்றால், இதில் என்ன நியாயம் இருக்கிறது?

கடந்த இரு ஆண்டுகளாக கரோனா காரணமாக ஏற்கெனவே பலர் தொழில் வணிகத்தில் சிரமத்தை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசின் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பினால் வணிகர்கள் தொழிலை விடும் சூழலில் உள்ளனர். வணிகர்கள் லாபம் வராத சூழலில், நாங்கள் அரசாங்கத்துக்கு சம்பாதித்துக் கொடுத்து கொண்டிருக்கிறோம். இதில் ஒரு பங்கை கூட நாங்கள் வீட்டுக்கு எடுத்து போவதில்லை. இவ்விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை.

ஜிஎஸ்டி வரியை கூட்ட கூட்ட, ஏமாற்றுதல்தான் அதிகம் நடக்கும். பில் போடாத சூழல்கள் உருவாகும். கையூட்டுகளும் தவறுகளும் ஏற்படும். அதிகாரிகளே பாதி பொருட்களுக்கு பில் போடு, பாதி பொருட்களுக்கு பில் போடாதே என்று கூறும் சூழல் ஏற்படும். வரியை எவ்வளவு எளிமையாக்குகிறீர்களோ, அவ்வளவு வெளிப்படத்தன்மை இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை இங்கு வரிகளை குறைத்து பொது மக்களின் வாங்கும் சக்தியைதான் அரசு அதிகரிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் ஜிஎஸ்டி வெற்றி பெறும். இந்த வரி விதிப்பினால் கடுமையாக பாதிக்கப்படப்போவது கடை நிலையில் உள்ள பொதுமக்கள்தான்” என்றார்.

மேலும், மதுரையில் நடக்க இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 48-வது கூட்டத்தை எதிர்த்து தமிழக வணிகர் சங்க கூட்டமைப்பு மிகப் பெரிய போராட்டத்தை கையில் எடுக்கும் என்றும், இது தொடர்பாக தமிழக முழுவதும் உள்ள விற்பனையாளர்கள், நுகர்வோர்களை திரட்ட வணிக சங்க தலைவர் விக்கிரம ராஜா ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய முடிவுகளால் வரி உயரும் பொருட்கள் விவரம்:

  • எல்இடி விளக்குகள், மின் விளக்குகள் தொடர்பான உதிரி பாகங்கள், பிரின்டிங் மை, பேனா மை, கத்தி, பிளேடு ஆகியவற்றின் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
  • கிரைண்டருக்கு ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
  • மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந்திரங்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
  • வணிக பெயரில் அல்லாத பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு, பொரி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
  • சூரியசக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர்கள், பதப்படுத்தப்பட்ட தோல் மற்றும் காலணி தயாரிப்பு தொடர்பான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
  • காசோலை புத்தகத்துக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
  • மின்னணு கழிவுகளுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
  • ரூ.1,000-த்துக்கு குறைவான ஓட்டல் அறை வாடகைக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
  • சாலை, ரயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், சுடுகாடு உள்ளிட்டவை தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப் படுகிறது.
  • உணவுப் பொருட்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் டெட்ரா பேக் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x