Published : 01 Jul 2022 03:18 PM
Last Updated : 01 Jul 2022 03:18 PM

ராஜினாமா செய்த இரண்டு நாட்களிலேயே பணிப் பலன்கள்: புதிய தொழிலாளர் விதியில் வழிவகை

பணியில் இருந்து ஒரு நபர் ராஜினாமா செய்த இரண்டு நாட்களுக்குள் அவருடைய சம்பளம் மற்றும் இன்னும் பிற பணிப் பலன்களை தந்துவிடும் வகையில் புதிய தொழிலாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பிஹார், இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்த வரைவு கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனாலும் இன்னும் பல மாநிலங்கள் இதற்கு இசைவு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், புதிய தொழிலாளர் விதிகளின் அண்மை திருத்தம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு ஊழியர் பணியில் இருந்து ராஜினாமா செய்தாலோ, நீக்கப்பட்டாலோ அல்லது பணி ஓய்வு பெற்றாலோ அவருக்கான அனைத்து பலன்களும் இரண்டே நாட்களுக்குள் கிடைக்கும்படி செய்யப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் இந்த பணி பலன்களானது ஒருவர் பணியில் இருந்து விடுபட்ட 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் வழங்கப்பட்டுவிடுகிறது. சில நேரங்களில் 90 நாட்கள் கூட ஆகிறது. இந்நிலையில் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தத்தில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொழிலாளர் ஒருவர் ஓய்வு பெற்றாலோ, ராஜினாமா செய்தாலோ, பணி நீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது நிறுவனம் மூடப்பட்டதால் பணி இழந்தாலோ உடனடியாக பலன் களைப் பெறும் என்ற சட்டத்திருத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட 4 முக்கிய திருத்தங்களின் படி வாரத்திற்கு 4 நாட்கள் வேலை, அன்றாட பணி நேரத்தை 8ல் இருந்து 12 மணி நேரமாக அதிகரித்தல், பிஎஃப் தொகைக்கான பங்களிப்பை அதிகரித்தல், ஒரு தனிநபரின் அடிப்படை சம்பளத்தை 50% அதிகரித்தல் ஆகியன பட்டியலிடப்பட்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x