தொழில் கடன் | எந்தச் சூழல்களில் ஒரு கணக்கு, வாராக் கடனாக மாறும்? - ஒரு தெளிவுப் பார்வை

தொழில் கடன் | எந்தச் சூழல்களில் ஒரு கணக்கு, வாராக் கடனாக மாறும்? - ஒரு தெளிவுப் பார்வை
Updated on
5 min read

வாராக்கடன், வங்கி குறித்த உரையாடல்களில், கடன் தள்ளுபடி போன்ற செய்திகளில் அதிகமாக இந்த வார்த்தையைக் கேட்டிருக்கலாம். கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாக கடன்கள் வாராக்கடன்கள் என எளிதில் புரிந்து கொள்ள முடிந்தாலும் ஏன் ஒரு கடன் வாராக்கடனாக மாறுகிறது. எந்தெந்த சூழ்நிலைகளில் எதன் அடிப்படையில் ஒரு கடன் கணக்கு வாராக்கடனாக மாற்றப்படுகிறது. அதனால் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் என்ன மாதிரியான சிக்கல் ஏற்படும் என்பது குறித்து தெளிவாக விளக்குகிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொதுமேலாளருமான "குறள் இனிது" சோம. வீரப்பன்...

வங்கிக்கடன் குறித்து பேசும் போது Non-Performing Asset (NPA) என்ற ஒன்றும் சொல்லப்படும். தமிழில் அதனை வாராக்கடன் என மொழிபெயர்த்திருக்கிறார்கள். அந்த வார்த்தை அதன் உட்பொருளை அழகாக எடுத்துச் சொல்கிறது. அது என்ன "வாராக்கடன்" என்றால், வங்கியால் கொடுக்கப்பட்டு வசூலாகாத கடன் என்று அர்த்தம். இது குறித்து கடன் வாங்கும் வாடிக்கையாளர் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் வாடிக்கையாளர் வாங்கிய கடன் ஒரு முறை வாராக்கடனாக மாறிவிட்டால், அவர் மற்ற வங்கிகளிலும் கடன் வாங்க முடியாது. கடன் வாங்கியிருக்கும் வங்கியிலும் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும். தேர்வில் தோல்வியடைந்தது போல என்று சொல்லலாம்.

வாராக்கடன்: முதலில் வாராக்கடன் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் வங்கியில் வாங்கும் கடன்கள் இரண்டு வகைப்படும்.

1. கேஷ் கிரெடிட் ஓவர் டிராஃப்ட் (cash credit) போல ஆப்ரேட்டிங் அக்வுண்டஸ். இந்த வகைக் கடன்களில் வாடிக்கையாளர் காசோலை வழங்கலாம், பணத்தைக் கட்டலாம், வங்கியிலிருந்து தேவைப்படும் போது பணத்தை எடுக்கலாம்.

2. டேர்ம் லோன், டிமாண்ட் லோன் வகையைச் சேர்ந்தது. இதில், வாடிக்கையாளர் ஒருமுறை வங்கியில் கடனை வாங்கி, குறிப்பிட்ட காலத்திற்குள் அதனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துவார்.

வாராக்கடனைப் பொறுத்த வரையில், கேஷ் கிரெடிட் ஓவர் டிராஃப்ட் வகைக் கடன்களில் "டிராயிங்க் பவர்" (Drawing Power) என்ற ஒன்று உண்டு. அதற்கு என்ன அர்த்தம் என்றால், வாடிக்கையாளர் ஒருவர், கேஷ் கிரெடிட் ஓவர் டிராஃப்ட் கடன் பெறும் போது, அவருக்கு வங்கி வழங்கிய ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு ஏற்ப, மொத்தக் கடன் தொகையில் கடன் பெறுவரின் பங்களிப்பான மார்ஜின் போக, மீதமிருக்கும் தொகையை இது குறிக்கும், அதாவது, தொழில்முனைவோர் ஒருவர் கேஷ் கிரெடிட் ஓவர் டிராஃப்ட் மூலமாக, ரூ.10 லட்சம் கடன் பெறுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். அவரிடம், ரூ.15 லட்சத்திற்கான பொருள்கள் இருப்பில் இருக்கிறது. இதில், 30 சதவீதம் மார்ஜின் என வைத்துக் கொள்வோம்.

இப்போது, ரூ.15 லட்சத்தில் 30 சதவீதமான 4,50,000 போனால், மீதம் உள்ள, 10,50,000 டிராயிங்க் பவர். ஆனால் கடன் தொகையைத் தாண்டி டிராயிங்க் பவர் இருக்க முடியாது, கூடாது என்பதனால், அந்த வாடிக்கையாளர் எடுக்கக்கூடிய கடன் தொகை, ரூ 10 லட்சம்.

இதே ரூ.10 லட்சம் கடன் தொகை. பொருள் கையிருப்பு ரூ.12 லட்சம், 30 சதவீதம் மார்ஜின் என்றால், அவர் எடுக்கக்கூடிய தொகை ரூ.8,40,000 தான் டிராயிங்க் பவர். கடன் எடுக்கும் அளவு அதிகமாக இருந்தாலும், கையிருப்பு குறைவாக இருப்பதால் மார்ஜின் கழித்தது போக மீதமுள்ள தொகையைதான் எடுக்க முடியும். இதனை வாடிக்கையாளர் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வகைக் கடன்களில், ஒரு கடன் கணக்கு செயல்படாமல் இருக்கக் கூடாது (out of order) கடன் தொகைக்கான லிமிட்டில், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தப்படிருக்க வேண்டிய தொகைகள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

டேர்ம் லோன் (Term Loan): டேர்ம் லோன், டிமாண்ட் லோன் வகைக் கடன்களைப் பொறுத்த வரையில், மூன்று மாதங்களுக்கு மேல், அதாவது 90 நாட்களுக்கு அதிகமாக ஓவர் டியூ (Over Due) ஆகி இருக்கக்கூடாது. இங்கு டியூ, ஓவர் டியூ என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் வங்கியில் ரூ.10 லட்சம் லிமிட்டில் கடன் வாங்கி இருக்கிறார் என்றால் அவர் வங்கிக்கு கட்ட வேண்டிய பணம், ரூ.10 லட்சம். அது டியூ. டேர்ம் லோனில், ஒரு கோடி வாங்கியிருக்கிறீர்கள், அதில் ரூ. 5 லட்சம் கட்டிவிட்டீர்கள் மீதம் கட்ட வேண்டிய தொகை ரூ.95 லட்சம் அது டியூ. ஓவர் டியூ என்பது வாடிக்கையாளர் குறிப்பிட்ட தேதியில் செலுத்தியிருக்க வேண்டிய தொகையை விட, உண்மையில் செலுத்திய தொகை அதிமாக இருந்தால் அது ஓவர் டியூ. உதராணமாக வாடிக்கையாளருக்கு கடன் அளவு ரூ.10 லட்சம். ஆனால் அவரது வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையாக கணக்கில் ரூ.10 லட்சத்து, 20 ஆயிரம் இருக்கிறது என்றால், ஓவர் டியூ தொகை ரூ.20 ஆயிரம். நீங்கள் உண்மையில் செலுத்தவேண்டிய தொகையை விட அதிமாக கணக்கில் இருக்கும் தொகைய ஓவர் டியூ எனப்படும்.

எப்போது வாராக்கடன் உருவாகும்: ஒரு வங்கியின் கடன் கணக்கு நீண்ட நாட்களாக செயல்படுத்தப்படாமல், அதில் எந்த பரிமாற்றங்களும் நடைபெறாமல் இருந்தால் அந்த கணக்கு என்பிஏ அல்லது வாராக்கடன் கணக்காக கருதப்படும். அந்த நீண்ட நாள் என்பது எவ்வளவு நாள் என்று கேட்டால், 91 வது நாள். 90 நாட்களாக ஒரு வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இல்லை என்றால் அந்த கணக்கு NPA ஆகிவிடும். வாடிக்கையாளர் 90 நாட்களுக்கு கடன் அல்லது வட்டித் தொகையை செலுத்தி விட்டார் என்றால் அவரது கணக்கு வராக்கடனாக மாறாது. இதனால் தான் வங்கியிலிருந்து வாடிக்கையாளருக்கு அடிக்கடி செய்தி அனுப்பப்படும், கணக்கு வராக்கடன் கணக்காக ஆகிவிடும், பணத்தை விரைவில் கட்டி விடுங்கள் என்று சொல்வார்கள்.

வாடிக்கையாளர்கள் இதை முக்கியமான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பணம் செலுத்துவதற்கான கடைசி நாள் வரை காத்திருக்காமல், பணம் கிடைக்கும் போது எல்லாம் கடனைக் கட்டி விடலாம். இதனால் சிபில் ஸ்கோர் பாதிப்பிலிருந்தும் தப்பிக்கலாம். எனவே வாடிக்கையாளர்கள் தவணைத் தேதி 5 நாட்களுக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கணக்கு ஒரு முறை வாராக்கடனாக மாறி விட்டால், அதற்கு பின்னர் வாராக்கடன் தொகைக்கும் சேர்த்து வட்டி வசூலிக்கப்படும். அதனால் அதனைத் தவிர்க்க கடைசி நாள் வரைக் காத்திருக்காமல் முன்னதாகவே பணத்தைச் செலுத்தி விடுவது நல்லது.

ஒப்புதல் காலம் (Sanction Period): கடனுக்கான ஒப்புதல் காலமும் ஓவர் டியூவாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தாலும் அந்தக் கடன் கணக்கு வாராக் கடனாக மாற்றப்படும். அதாவது கேஷ் கிரெடிட் போன்ற கடன் ஒப்புதல் காலம் ஒருவருடத்திற்கு கொடுக்கப்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் கடனுக்காக 01.01.2021 அன்று ஒப்புதல் வாங்கியிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த ஒப்புதல் காலம் 31.12.2021 அன்று முடிவடைந்து விடும். அதற்கு அடுத்த நாள் அதாவது, 01.01.2022 அன்று அந்த ஒப்புதல் காலம் ஓவர் டியூவாக கருதப்படும். பணி மூலதனத்திற்கான ஒப்புதல், கேஷ் கிரெடிட் போன்றவைகளுக்கான ஒப்புதல் எல்லாம் பொதுவாக ஒரு வருடத்திற்கு வழங்கப்படும்.

இதற்காக வாடிக்கையாளரின் ஆண்டு இறுதிக் கணக்கு, தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு இறுதி கணக்கு, உத்தேச விற்பனை, அந்த ஆண்டு விற்பனை போன்ற இன்ன பிற தகவல்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்படுகிறது. சில சமயங்களில் தணிக்கைச் செய்யப்பட்ட ஆண்டு இறுதிக் கணக்கு அல்லது பிற ஆவணங்களை கொடுக்க முடியவில்லை என்றால், வங்கிகள் அதற்காக ரிவியூவ் என்ற ஒரு நடைமுறையை வைத்திருக்கின்றன. அதன்படி, வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து, இந்த கணக்குகள் ஏற்புடையதே என்று முடிவெடுத்து ஒரு வருடத்திற்கு வழங்க வேண்டிய ஒப்புதல் கடிதத்தை, மூன்று மாதம், 4 மாதம், 6 மாதம் என வழங்குவார்கள்.

வங்கி தீர்மானிக்கும்: இந்த ஒப்புதலும், ரிவியூவ் என்று சொல்லப்படும் ஆய்வும் 6 மாதங்களுக்கு மேல் ஓவர் டியூவாக இருக்கக்கூடாது. அதாவது ஏற்கனவே பார்த்த உதாரணம் போல, 01.01.2021 அன்று கேஷ் கிரெடிட்க்காக வாங்கப்பட்ட ஒப்புதல், 31.12.2021 அன்று முடிவடைந்து விடும். இந்த நிலையில் அந்த கடன் கணக்கை, 01.01.22 அன்றோ அதற்கு முன்பாகவோ ரிவியூவ் செய்திருக்கிறார்கள் என்றால் அதாவது 20.12.2021 அன்று மூன்று மாதங்களுக்கு ரிவியூவ் செய்திருக்கிறார்கள் என்றால் அந்த கணக்கின் ஒப்புதல் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு, 20.03.2022 வரை செல்லுபடியாகும். இதில் வாடிக்கையாளர் புரிந்து கொள்ள வேண்டிய விசயம், ஓவர் டியூவிற்கு 90 நாள் கால அவகாசம் வழங்கப்படுவது போல, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரு கணக்கை வாராக்கடன் கணக்காக அறிவிப்பதற்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. மேலே சொன்ன உதாரணத்தின் படி, ஒரு வருடம் பொதுவான ஒப்புதல் வழங்கிய கணக்கினை ஆய்வு செய்து மேலும் மூன்று மாதம் ஒப்புதல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 12+3 என மொத்தம் 15 மாதங்கள். அதனுடன் 6 மாத கால அவகாசம் என, 21 மாதங்கள் வரையில் அந்த குறிப்பிட்ட கடன் கணக்கு வாராக்கடன் கணக்காக மாறாது.

எதற்காக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது என்று கேட்டால், வெறுமனே பணம் கட்டச் சொல்லுவதை விட வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட தொகை சரியான வகைக்காக தான் வழங்கப்பட்டுள்ளதா, அவ்வளவு பெரிய தொகையை வாடிக்கையாளரை நம்பி கொடுக்கலாமா என வங்கி முடிவு எடுப்பதற்காக இந்த நடைமுறை உள்ளது.

சரக்கு கையிருப்பு அறிக்கை (Stock Balance Report): ஒப்புதல் கடிதம் வைத்து ஒரு கணக்கை வாராக்கடன் கணக்காக அறிவிப்பது போல, வணிகத்தில் இருக்கும் சரக்கு கையிருப்பை வைத்தும் ஒரு கணக்கு வாராக்கடன் கணக்காக அறிவிக்கப்படும். சரக்கு இருப்பை வைத்து எப்படி கணக்கை வாராக்கடனாக அறிவிக்க முடியும் என்ற கேள்வி வரலாம். அதாவது, வணிகக்கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் மாதாமாதம் அவரது சரக்கு கையிருப்பை வங்கிக்கு தரவேண்டும் என்று வைத்துக் கொள்வோம். ஒரு மூன்று மாதங்களுக்கு வாடிக்கையாளர் தொடர்ந்து அவரது சரக்கு கையிருப்பு அறிக்கையை தரவில்லை என்றால் பழைய அறிக்கையின் அடிப்பையில் வங்கி ஒப்புதல் வழங்காது. அந்த கடன் கணக்கை வாராக்கடனாக அறிவித்து விடும்.

வாடிக்கையாளர் பொறுப்பு: அப்படியானால் ஒரு கேஷ் கிரெடிட் கடன் கணக்கு வாராக்கடனாக மாறாமல் இருக்க மாதாமாதம் முறையாக வட்டி, தவணைத் தொகையை கட்ட வேண்டும். ஒப்புதலை புதுப்பித்து வைத்துக் கொள்ளவேண்டும், சரக்கு கையிருப்பு அறிக்கையும் பழையதாக இல்லாமல் அந்தந்த மாதத்திற்குரியதாக இருக்க வேண்டும்.

இவை தவிர சில வாடிக்கையாளர்கள், நான் ரூ.10 லட்சம் வரை லிமிட் வாங்கியிருக்கிறேன். அதில் ரூ. 5 லட்சம் தான் எடுத்திருக்கிறேன். மீதி பணம் கணக்கில் அப்படியே தான் இருக்கின்றது. அதனால் எனது கணக்கை வாராக்கடனாக அறிவிக்கக்கூடாது என்பார்கள். வங்கி விதிகள் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டி உள்ளிட்ட இன்னபிற கட்டணங்களை மூன்று மாதங்களுக்கு மேல் கட்டாமல் இருந்தால், உங்கள் கணக்கில் போதிய பணம் இருந்தும் அந்த கடன் கணக்கு மூன்று மாதங்களுக்கு எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாமல் இருந்தால் அந்த கணக்கு வாராக் கடன்கணக்காக எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட கடன் அளவை முழுவதுமாக பயன்படுத்தவில்லை என்றாலும் கடனுக்கான வட்டி, பிற கட்டணங்களையாவது வாடிக்கையாளர் முறையாக கட்டியிருக்க வேண்டும்.

வாராக்கடன் கவனம்: மேலே சொன்ன காரணங்களால் நான் பர்ஃபாமிங் அசட் எனப்படும் என்பிஏ மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் வாராக்கடனாக மாறிய ஒரு கணக்கில் இருந்து வரும் வட்டியை வங்கி கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அது வங்கியின் இருப்பு நிலைக்குறிப்பைப் பாதிக்கும். அது தவற கடன் கணக்கு, ஓவர் டியூ ஆன கால அளவைப் பொறுத்து சஸ்பெண்ட்டட், டவுட் ஃபுல், லாஸ் என பிரிக்கப்படும் தன்மைக்கேற்ப சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். ஒரு கணக்கில் ரூ.100 ஓவர் டியூ, அதற்கு 12 சதவீதம் வட்டி என வைத்துக் கொண்டால், அந்த ரூ.12 வட்டியை வங்கி வருமானமாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. தவிர எதிர்கால நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் ரூ.10-யை முன்னேற்பாடாக ஒதுக்கி வைக்க வேண்டும்.

அதனால்தான் வங்கி வாடிக்கையாளரிடம் கடன் கணக்கை வாராக்கடனாக மாற விடவேண்டாம் எனச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். வாடிக்கையாளரும் அவரது கடன் கணக்கை சரியான முறையில் பராமரித்து தவணைகளையும் வட்டியையும் கட்டி வந்தால் எதிர்காலத்தில் அது நல்ல பலனளிக்கும். ஒருவேளை பணத்தை சரியான முறையில் கட்டமுடியாது போனால், அதற்கான காரணத்தை வங்கியில் தெரிவித்து வங்கி அந்த காரணத்தை ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில், கடனுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியும். அதனால் வாராக்கடன் என்பது மிகவும் முக்கியமான ஒன்று வாடிக்கையாளர் தனது கணக்கை வாராக்கடனாக மாறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in