Published : 30 Jun 2022 09:30 PM
Last Updated : 30 Jun 2022 09:30 PM

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை: மாற்று வழிக்கு FMCG பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ரெடியா? - ஒரு ரவுண்ட் அப்

இந்தியாவில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ‘சிங்கிள் யூஸ்’ பிளாஸ்டிக் என்ற பயன்பாட்டில் உள்ள பொருட்களில் சில நாளை (ஜூலை 1, 2022) முதல் பயன்படுத்த தடை செய்யப்படுகிறது. சுமார் 22 பொருட்கள் அடங்கியுள்ள இந்த பட்டியலில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களும் இடம் பெற்றுள்ளன. அதனால் FMCG பொருட்களை தயாரித்து வரும் நிறுவனங்கள் இந்த தடையை எதிர்கொள்ள தங்கள் கைவசம் வைத்துள்ள மாற்று வழி என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

இந்திய நாட்டில் ஆண்டுக்கு சுமார் 6 பில்லியன் என்ற எண்ணிக்கையில் பழச்சாறு மற்றும் மில்க் ஷேக் பேக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் டாபர் (ரியல்), பார்லே அக்ரோ (ஃப்ரூட்டி), கொக்க கோலா (மாஸா பிராண்ட்), பெப்சி கோ (டிராபிகானா பிராண்ட்), அமுல் போன்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் சுமார் 60 சதவீதத்தை சிறிய அளவிலான டெட்ரா பேக்குகளில் விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் தடையை அரசு பிளாஸ்டிக் கழிவு உருவாவதை தடுக்கும் நோக்கில் கொண்டு வந்துள்ளது. இருந்தாலும் இது மேற்கூறிய நிறுவனங்களுக்கு சவாலானதாக இருக்கும் என தெரிகிறது. ஏனெனில் 10 ரூபாய் பழச்சாறு பேக்குகளுடன் இந்நிறுவனங்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை வைத்து விற்பனை செய்து வருகின்றன. அந்த ஸ்ட்ராவை கொண்டு தான் இந்த பழச்சாறுகள் பருகப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

தடையை எதிர்கொண்டுள்ள பொருட்கள்: பிளாஸ்டிக் குச்சிகளை கொண்டுள்ள இயர் பட்ஸ், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன் (தெர்மாகோல்), பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் கிளாஸ், ஃபோர்க், ஸ்பூன், கத்திகள், ஸ்ட்ரா, ட்ரே, ஸ்வீட் பாக்ஸ், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகளில் சுற்றப்பட்டு வரும் பிளாஸ்டிக் கவர், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் இதில் அடங்கியுள்ளன.

இந்த பொருட்கள் தயாரிப்பது, விநியோகிப்பது, விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் தேசிய மற்றும் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும் என சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடை குறித்த அறிவிப்பு கடந்த 2021 ஆகஸ்ட் மாத வாக்கில் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இந்த தடையை சிறிது காலம் தள்ளி வைக்குமாறு பல்வேறு நிறுவனங்கள் இந்திய அரசுடன் வேண்டுகோள் விடுத்தன. ஆனால் அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது.

மாற்று வழிக்கு தயாராகி விட்டதா FMCG பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள்?

"அரசின் விதிமுறைகளை நிறைவேற்ற தங்கள் நிறுவனம் உறுதி கொண்டுள்ளதாகவும். அனைத்து பேக்குகளும் காகித ஸ்ட்ராக்களுடன் உற்பத்தி செய்து, வெளிவருவதை உறுதி செய்வோம்" என தெரிவித்துள்ளார் டாபர் இந்தியாவின் செயல் இயக்குனர் ஷாருக் கான்.

"இப்போது தங்கள் நிறுவனம் மக்கும் வகையிலான ஸ்ட்ராக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இது காகித ஸ்ட்ராக்களை விடவும் மலிவானது. நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 லட்சம் ஸ்ட்ராக்கள் தேவைப்படுகிறது. முதற்கட்டமாக இதனை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம். அதற்கான பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சோதி.

"தடையினால் விற்பனையில் பாதிப்பு ஏதும் இருக்காது. ஆனால் இறக்குமதி மற்றும் மக்கும் வகையிலான ஸ்ட்ராக்களுக்கு பிடிக்கும் செலவுகள் காரணமாக நிறுவனத்தின் செலவீனத்தில் தாக்கம் இருக்கும்" என பார்லே அக்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி Schauna சவுகான் தெரிவித்துள்ளார்.

மக்கும் வகையிலான ஸ்ட்ராக்கள் மற்றும் காகித ஸ்ட்ராக்களால் 10 ரூபாய் பேக்குகளின் விலையில் மாற்றம் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஸ்ட்ரா இல்லாமல் இந்த பொருட்களை விற்பனை செய்தால் அது நுகர்வோர்களுக்கு சங்கடங்களை கொடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்திய அளவில் சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் பயன்பாட்டில் FMCG நிறுவனங்களின் பங்கு வெறும் 0.05 சதவீதம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x