‘‘கோதுமை, பூண்டுக்கு பதில் சொந்த வீடு’’- வாடிக்கையாளர்களை கவர இப்படியும் விளம்பரம் செய்யும் சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்

‘‘கோதுமை, பூண்டுக்கு பதில் சொந்த வீடு’’- வாடிக்கையாளர்களை கவர இப்படியும் விளம்பரம் செய்யும் சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்
Updated on
3 min read

பெய்ஜிங்: சொந்த வீடு வாங்கும் மவுசு கொண்ட சீனாவில் கரோனா காரணமாக ரியல் எஸ்டேட் சந்தை பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனையடுத்து பண்ட மாற்று போல விவசாயிகளிடம் வீடுகளை விற்பனை செய்ய கோதுமை, பூண்டுக்கு பதில் வீடு என கவர்ச்சிகரமாக சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்கின்றன.

உலக அளவில் சொந்த வீட்டில் வசிக்கும் மோகம் இந்தியாவை போலவே சீனாவிலும் அதிகம். மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்வது என பாரம்பரிய பழக்கம் சீனாவிலும் தொடர்ந்து வருகிறது.

பெண் கிடைப்பது கடினம்

சீன சமூகத்தில் சொந்த வீடு இல்லாத மணமகனுக்கு பெண் கிடைப்பதும் கடினம். இதனால் இந்தியாவை போலவே பெரும்பாலான இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்து சம்பாதித்து ஈட்டிய வருவாயில் குறிப்பிட்ட தொகையை சேர்த்து ஒரு சில ஆண்டுகளிலேயே சொந்த வீடு வாங்கும் பழக்கம் அதிகம் உள்ளது.

இதனால் சீனாவில் வீடு கட்டி விற்கும் பிரிவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு பெரும் வரவேற்பு எப்போதும் உண்டு. பெரும் பணம் புழங்கும் தொழிலாக சீன ரியல் எஸ்டேட் துறை உள்ளது. இந்தநிலையில் சீனாவில் கரோனா பரவலுக்கு பிறகு பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் வீழ்ச்சி

குறிப்பாக தற்போது சீனாவில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒமைக்கரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி வருகிறது. அதேபோல், ஆங்காங்கே தீவிர லாக்டவுன்களையும் சீனா அமல்படுத்தி வருகிறது.

இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் முடங்கியுள்ளது. சீனாவில் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாமல் உள்ளன. ஆசிய நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தியில் கால் பகுதியைக் கொண்ட சீனாவில் ரியல் எஸ்டேட் சந்தை, ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் பெரும் சரிவைக் கண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெய்ஜிங், ஷாங்காய் உட்பட பல நகரங்களில் மட்டுமின்றி இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் இதுவே நிலையாக உள்ளது. இந்த நகரங்களில் ஏராளமான வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளன. இதனையடுத்து சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முதலீட்டாளர்களை ஈர்க்க பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

கவர்ச்சி விளம்பரங்கள்

இலவச வாகன நிறுத்துமிடங்கள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு புதுப்பித்தல் செலவு, சிறிய அளவிலான முன்பணம், மானியங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு கூடுதல் சலுகைகள் என வாரி வழங்கி வருகின்றன.

அந்த வகையில் சொந்த வீடு வாங்குபவர்களை கவரும் வகையில் ஒரு புதுமையான விளம்பரத்தை சீன ரியல் எஸ்டேட் நிறுவனம் செய்துள்ளது. ஹெனானை தளமாகக் கொண்ட மத்திய சீனா ரியல் எஸ்டேட் நிறுவனம் ‘‘கோதுமைக்கு பதில் வீடு’’ என விளம்பரம் செய்துள்ளது.

அதன்படி ‘‘கோதுமை மற்றும் பூண்டை முன்பணம் செலுத்தி வீட்டை பதிவு செய்து கொள்ளலாம். வங்கிக் கடனுக்கு மாதந்திர தவணைத் தொகை மட்டும் செலுத்தினால் போதும்’’ என விளம்பரம் செய்துள்ளது. ஹெனான் பகுதியில் அதிகஅளவில் விவசாயிகள் உள்ளனர். இவர்கள் கோதுமை அல்லது பூண்டு பயிரிடுவது வழக்கம்.

அந்த பகுதியில் தற்போது அறுவடை நடைபெறும் நிலையில் வங்கி கடனில் வீடு வாங்கும்போது முதலில் செலுத்த வேண்டிய முன் பணத்திற்கு பதில் விவசாயிகள் கோதுமை அல்லது பூண்டை அப்படியே கொடுத்தால் போதும் என்பதே அந்த விளம்பரமாகும்.

கோதுமை, பூண்டு

ஒரு யூனிட் பூண்டு 2 யுவான் என்ற விலையில் விற்பனையாகிறது. அதன் அடிப்படையில் 500 கிராம் எடையுள்ள பூண்டு சீனாவில் ஒரு யூனிட் ஆக கருதப்படுகிறது. அதன்படி 160,000 யுவான் (23,900.22 டாலர்) முன்பணம் செலுத்த தேவையான பூண்டை கொடுத்தால் போதுமானது.

இதுகுறித்து மத்திய சீன ரியல் எஸ்டேட் விற்பனை முகவர் ஒருவர் கூறுகையில் ‘‘முக்கியமாக இப்பகுதியில் உள்ள விவசாயிகளை இலக்காகக் கொண்ட இந்த சலுகையை அறிவித்துள்ளோம். சலுகை சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. ஜூலை 10-ம் தேதி அன்று முடிவடையும். பூண்டு விளம்பரம் செய்யப்பட்ட 16 நாட்களில் 852 பேர் இந்த திட்டத்தின் கீழ் வீடுகளை முன் பதிவு செய்துள்ளனர்.

30 பேர் வீட்டை வாங்கியுள்ளனர். இதன் மூலம் மொத்தமாக 860,000 யூனிட் பூண்டுகள் சேர்ந்துள்ளன. அதோடு கோதுமையும் சேர்ந்துள்ளது. பூண்டு மற்றும் கோதுமை இரண்டின் மொத்த சந்தை விலை 500 கிராமுக்கு 1.5 யுவான் என்ற அடிப்படையில் சராசரியாக வாங்கிக் கொள்ளப்படுகிறது’’ என்று கூறினார்.

மத்திய மாகாணமான ஹெனானில் சுமார் 600,000 யுவான் வரை வீடுகளின் விலையாக உள்ளன. வேறு சில நிறுவனங்கள் ஒரு யூனிட் பூண்டுக்கு 5 யுவான் என்ற அளவில் கூட விலையை நிர்ணயம் செய்ய தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in