Published : 28 Jun 2022 06:07 PM
Last Updated : 28 Jun 2022 06:07 PM

ரிலையன்ஸ் 3-வது தலைமுறை: மகனுக்கு வழி விட்டார் முகேஷ் அம்பானி: ஜியோ தலைவராக ஆகாஷ் நியமனம்

ஆகாஷ் அம்பானியுடன் முகேஷ் அம்பானி

மும்பை: நாட்டின் முன்னணி தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தில் அடுத்தடுது்து மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் திருபாய் அம்பானி தொடங்கி 3-வது தலைமுறை தொழில் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்திய பொருளாதார சந்தையில் அதிக பங்கு வகிக்கும் தொழில்களான எண்ணெய், எரிவாயு மற்றும் டெலிகாம் ஆகியவற்றில் கோலோச்சும் இந்தியாவின் பெரும்பணக்காரர் அம்பானி. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் பலவற்றிலும் தொழில்கள் தொடங்கி வெற்றிகரமாக செய்து வருகிறார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி காலத்தில் அவரது மூத்த மகன் முகேஷ் அம்பானி தனது குடும்ப வணிகத்தில் இணைந்தார். பல்வேறு நிறுவனங்களிலும் பல்வகையான பொறுப்புகளை ஏற்று பணிபுரிந்தார். கடந்த 2002 இல் திருபாய் அம்பானி காலமான பிறகு முகேஷ் மற்றும் அவரது சகோதரர் அனில் ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தலைமைப் பொறுப்பை ஏற்றனர். இருப்பினும், சிறிது காலத்திற்குப் பிறகு, சகோதரர்கள் போட்டியிட ரிலையன்ஸின் சொத்துக்களைப் பிரித்துக் கொண்டனர். இதன் பிறகு முகேஷ் அம்பானியின் வர்த்தகம் பெருகியது. அதேசமயம் அனில் அம்பானி கடன்காரர் ஆனார்.

பேரனுடன் முகேஷ் அம்பானி

அம்பானியின் சொத்து மதிப்பு சராசரியாக 104.7 பில்லியன் டாலர் ஆகும். அம்பானியின் சொத்து மதிப்பு பெரிய அளவில் ஏறாமல் உச்சம் தொட்டு பின்னர் அப்படியே நிற்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் அவர் தனது தொழிலை வேறு வகையில் விரிவுபடுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. தொழில் உச்சம், கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் நிலையில் ரிலையன்ஸ் புதிய வர்த்தக வியூகத்தை கையில் எடுத்துள்ளது. தனது வர்த்தகத்தை வேறு துறைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

62 வயதை எட்டிவிட்ட அம்பானி 2028ஆம் ஆண்டுக்குள் பெரும்பாலான தொழில்களை இளைய தலைமுறையின் வசம் ஒப்படைக்கப்போவதாகக் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜியோ நிறுவன இயக்குநர் பதவியில் இருந்து அவர் நேற்று (ஜூன் 27) ராஜினாமா செய்துள்ளார். அதற்கு பதில் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஜியோ சார்பில் செபிக்கு அளித்த அளித்த அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.

ஜூன் 27ஆம் தேதி முதல் முகேஷ் அம்பானி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் மாற்றம் செய்வதற்கான கூட்டம் ஜூன் 27ஆம் தேதி நடைபெற்றது.

ரமிந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கேவி சவுத்ரியை கூடுதல் இயக்குநர்களாக நியமிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்கள். நிர்வாக இயக்குநரான பங்கஜ் மோகன் பவாரின் பதவிக் காலமும் 5 ஆண்டுகள் இருக்கும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ் அம்பானி

முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவராக தற்போது உள்ளார். ஆகாஷ் அம்பானி, பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தவர். இவரது மனைவியாகியுள்ள ஸ்லோக் மேத்தா மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியின் மகள் ஆவார்.

ஆகாஷ் மொபைல் மட்டுமின்றி அனைத்து விதமான தொலைத்தொடர்பு சாதனங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஜியோ மொபைல், ஜியோ ஹாட்ஸ்பாட், ஜியோ பைபர் என ரிலையன்ஸ் ஜியோவின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அகாஷ் அம்பானி தவிர இஷா அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகிய இரு குழந்தைகளும் முகேஷ் அம்பானிக்கு உண்டு. இதில் ஆகாஷ் அம்பானியுடன் இரட்டை குழந்தையாக பிறந்த மூத்த சகோதாரி இஷா அம்பானி ஆவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x