

வருமான வரி என்று சொன்ன உடன் சாமானியர்களின் மனதில் உடனடியாக தோன்றும் விஷயங்களாக ஆடிட்டர் என்றழைக்கப்படும் கணக்குத் தணிக்கையாளரும், தலையணை அளவு கணக்குக் புத்தகங்களும் வருவதை தவிர்க்க முடியாது. கணக்கு புத்தகங்களின் இடத்தை இன்று கணினிகள் பிடித்து விட்டாலும், ஆடிட்டர் அப்படியே தான் இருக்கிறார்கள். காவல்துறை நடவடிக்கையின் போது வழக்கறிஞர்கள் ஆஜராவது போல, வருமான வரித் துறை சோதனைகளின் போது ஆடிட்டர்களை ஆஜர்படுத்தி அவர்கள் குறித்த ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது தற்கால சினிமா.
பெரிய அளவில் முதல் போட்டு நடக்கும் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு ஆடிட்டர்கள், அக்கவுண்ட்ஸ் எல்லாம் சரியாக வரும், வாய்க்கும் கைக்குமாக வியாபாரம் செய்யும் சிறிய நிறுவனங்கள் கடைகள் வைத்திருப்பவர்கள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்விகளுக்கும், சிறிய பெரிய நிறுவனங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், முடிந்த அளவிற்கு கணக்குகளை எப்படி பராமரிப்பது, ஒரு வணிகம் சார்ந்து இயங்கும் போது ஆடிட்டர் ஏன் தேவை என்பது குறித்து விளக்குகிறார் நிதி ஆலோசகர், பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி...
வருமான வரி பற்றி பேசும் போது நமக்கு நாமே ஒரு கேள்விக்கு, மிகச்சரியாக சொல்வதென்றால் இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு நாம் பதில் தேடியாக வேண்டும். நாம் எல்லோருக்கும் இந்த கேள்விகள் இருக்கலாம். என்னைச் சந்திக்கும் நிறைய பேர் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். சரி அப்படி என்ன கேள்விகள் என்றீர்களா.... 1. தனியாக ஆடிட்டர் வைத்துக் கொள்ள வேண்டுமா, 2. புக்ஸ் ஆப் அக்கவுண்ட் எனப்படும் கணக்கு புத்தகங்களை பராமரிக்க வேண்டுமா, கணக்குகளை எழுதி வைத்துக் கொள்ள வேண்டுமா என்ற இந்த இரண்டு கேள்விகளும் முக்கியமானவை.
ஆடிட்டர்: இங்கு நாம் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கணக்குத் தணிக்கையாளர் அல்லது ஆடிட்டர் என்பவரது வேலை வருமான வரி தாக்கல் செய்வது மட்டுமே கிடையாது. ஒரு ஆடிட்டர், நமது கணக்கு வழக்குகளைப் பார்த்து அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். அது மட்டும் இல்லாமால் ஆலோசனையும் வழங்குவார். நீங்கள் இந்த செலவை அதிகமாக செய்திருக்கிறீர்கள், இந்த செலவு வேண்டாம், இந்தச் செலவை கொஞ்சம் அதிகப்படுத்தலாம். இந்த செலவுகளை எல்லாம் தவிர்த்திடுங்கள், இந்த முதலீடு நல்லது, இப்போதைக்கு இந்த முதலீடு வேண்டாம் போன்ற பல ஆலோசனைகளையும் ஒரு ஆடிட்டர் வழங்குவார்.
பலர் நினைப்பது போல ஆடிட்டர்கள் வெறும் கணக்கெழுதி விட்டு, வருமானவரி தாக்கல் செய்வபவர் மட்டும் அவர் வேலை இல்லை. நிதியைப் பொறுத்தவரையில், நிதி பரிவர்த்தனைகள் குறித்து முழுவதுமாக தெரிந்து வைத்திருக்கக் கூடியவர் யார் என்றால் "சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்" அல்லது "ஆடிட்டர்" எனப்படும் கணக்குத் தணிக்கையாளர்களே. அவர்கள் அதற்கென பிரத்தியேகமாக படித்தவர்கள். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்களைப் போல ஆடிட்டர்களும் நிதித் தொடர்பான தொழில்முறை படிப்பை முடித்துவிட்டு வருபவர்கள். அதனால் நிதித் தொடர்பான அனைத்து விஷயங்களும் அவர்களுக்கு நன்றாக தெரியும்.
உதாரணமாக, நாம் ரூ.10 லட்சம் கடன் தேவைப்படுகிறது என்றால் அதனை எங்கே வாங்குவது, இப்போதைக்கு அவ்வளவு கடன் வாங்கலாமா, வாங்கினால் எவ்வளவு வட்டி கொடுக்க வேண்டும், கடனுக்கு கொடுக்கும் வட்டி அதிகமா, எப்போது வாங்கலாம், பணத்தை எங்கு எப்போது முதலீடு செய்யலாம் போன்ற நிதி தொடர்பான அனைத்து விஷயங்களும் அவர்களுக்கு தெரிந்து வைத்திருப்பதோடு மட்டும் இல்லாமல், அது குறித்த ஆலோசனைகளையும் வழங்குபவர்களே ஆடிட்டர்கள்.
நிதி ஆலோசகர்கள்: இப்படிபட்ட ஆடிட்டர்களை வெறும் கணக்கு வழக்கு பார்த்து வருமான வரி மட்டும் தாக்கல் செய்யப் பயன்படுத்துவது என்பது நம்முடைய தவறு. நீங்கள் சிறிய அளவில் ஒரு தொழில் நடத்துவபவராக இருந்தால் வருமான வரித் தாக்கல் செய்ய மட்டும் இல்லாமல், தொழில் சார்ந்த அனைத்து நிதி ஆலோசனைகளுக்கும் ஆடிட்டர்களை நீங்கள் அணுகலாம்.
இப்போது இங்கே, ஆடிட்டர் வேண்டுமா வேண்டாமா என்று இன்னுமொரு கேள்வி வரலாம். அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. ஆடிட்டர் இல்லாமல் கூட வருமான வரியை தாக்கல் செய்யலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு ஆடிட்டர் வைத்திருப்பது நல்லதா, இல்லை என்று கேட்டால், பதில் ஆடிட்டர் இருப்பது நிச்சயமாக நல்லது.
சிறிய அளவிலான தொழில் நடத்துவபவர்களும் தொழில் சார்ந்து நிறைய செலவுகள் செய்ய வேண்டியவர்களாக இருப்பார்கள். தனியாக ஆடிட்டர் வைத்திருக்கும் போது வருடத்திற்கு ஒரு முறை அவருக்காக சிறிய அளவிலான ஒரு தொகை செலவு செய்ய வேண்டியது இருக்கும். அதனால் என்ன ஆதாயம் என்று கேட்டால், தொழில் தொடர்பாக குறிப்பாக நிதி சார்ந்து ஏதாவது சந்தேகம் ஆலோசனை தேவைப்படும் போது அதற்கான ஆட்களைத் தேடாமல், ஆடிட்டரிடம் கேட்கும் போது அவர்கள் உரிய ஆலோசனை வழங்குவார்கள். அது சார்ந்த படிப்பு மற்றும் பயிற்சியில் தொடர்ந்து இருப்பதால் அவரால் உரிய ஆலோசனைகளை, தக்க சமயத்தில் வழங்க முடியும்.
ஆடிட்டர் அவசியம்: ஒரு ஆடிட்டரை நாம் வெறும் கணக்கராக மட்டும் பார்க்காமல், ஆலோசகராகவும் பார்க்கும் பட்சத்தில் சிறிய தொழிலாக இருந்தாலும் ஒரு ஆடிட்டரின் தேவை அவசியம் என்பதை நம்மால் உணர முடியும். ஆடிட்டர் ஒருவருக்கு கணக்குகள் தவிர, நிதி தொடர்பான விஷயங்கள் தெரியும், வங்கித் தொடர்பான தகவல்கள் தெரியும், சந்தை பற்றி தெரியும், நிதி தொடர்பாக இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது, இனி என்ன நடக்கலாம் என்பன போன்ற விஷயங்கள் தெரியும் என்பதால் ஆடிட்டர் ஒருவரை வைத்துக் கொள்வது எப்போதும் நல்லது. குடும்ப மருத்துவர் போல சிறிய வணிகமாக இருந்தாலும் ஆடிட்டர் ஒருவரை வைத்துக் கொள்வது சிறந்தது.
கணக்கு புத்தகங்கள்: ஒரு வணிகத்திற்கு ஆடிட்டர் ஒருவர் தேவை என்பதைப் போல, சிறிய வணிகத்திற்கும் கணக்கு புத்தகங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழும். ஒருவர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார், அவர் வியாபாரத்தை கவனிப்பாரா, கணக்குகளை எழுதிக் கொண்டிருப்பாரா என்று அந்த வியாபாரி கேட்கலாம். அப்படி கேட்டால் அதில் தவறொன்றும் கிடையாது. ரொக்கத்திற்கோ, கடனுக்கோ சரக்கு வாங்கி அதனை விற்பனை செய்து வியாபாரம் செய்யும் அந்த வியாபாரிக்கு கணக்குகளை முறையாக எழுதி வைக்க நேரமும் இல்லை, அது எப்படி முறையாக செய்வது என்பது தெரியாது என்பதையும் நாம் தவிர்த்து விட முடியாது.
இந்த சூழ்நிலையில் ஆடிட்டிங் செய்யும் போது கணக்கு வழக்குகளை கொடுங்கள் என்று கேட்டால் அந்த வியாபாரி எங்கிருந்து கொடுப்பார். இந்த சந்தேகம் மிகவும் நியாயமானது. கணக்கு எழுதி வைத்துக் கொள்வது என்பதனை நாம் இரண்டு வகையாக அணுகலாம்.
ஒன்று முறையாக கணக்குகளை எழுதி கணக்கு புத்தகங்களை பராமரிப்பது. மற்றொன்று ஏதோ ஒருவகையில் வரவு செலவுகளை எழுதி வைத்துக் கொள்வது. உதாரணமாக, ஒரு டீ கடை வைத்திருப்பவர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் வாங்குகிறோம், சர்க்கரை, டீ தூள் வாங்கி இருக்கிறோம். அதில் எவ்வளவு டீ விற்பனையாகி இருக்கிறது என்பதை மேலோட்டமாக புரியும் படியாக எழுதி வைத்திருந்தாலே போதுமானது. இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகிறது. லாபம் அல்லது நஷ்டம் எவ்வளவு என்பது நாம் தெரிந்துகொள்ள முடியும்.
உங்களுக்காக எழுதுங்கள்: இந்த வகையில் பார்த்தால் கணக்கு எழுதி வைத்துக் கொள்ளவது என்பது, வருமான வரித் துறையோ, வணிக வரித் துறையிலிருந்து, ஜிஎஸ்டியில் இருந்து கேட்கப்படுகிறது என்பதற்காக கணக்குகளை பராமரிப்பது என்பது வேறு. அதைத் தவிர்த்து வியாபாரத்தின் லாப நஷ்டங்களைத் தெரிந்து கொள்வதற்காக அன்றாட வரவு செலவுகளை எழுதி வைத்துக் கொள்வது எல்லா வகையிலும் நல்லது. அதனால், கணக்கு புத்தகம் பராமரிப்பது என்பதை சட்டத்திற்காக வேண்டி கசப்பாக செய்யாமல் வியாபாரத்திற்காக செய்வது எப்போதும் நம்மையைத் தரும்.
வசதியும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், கணக்குகளைப் பராமரிப்பதற்கு தனியாக ஒரு ஆளை நியமிக்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த வியாபாரியே கொஞ்சம் தெளிவான முறையில் வரவு செலவுகளை எழுதி வைக்கலாம். இது எதுவும் முடியவில்லை என்றால் வீட்டில் உள்ளவர்களிடம் அன்றைய கொள்முதல், விற்பனை செலவுகளைச் சொல்லி எழுதி வைத்துக் கொள்வது எப்போதும் பயன்படும், பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.