

புதுடெல்லி: எளிதில் தொழில் தொடங்குவதற் கான சூழலைக் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தயார் செய்துள்ளது. இந்தப் பட்டியல் ஜூன் 30 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களிடையே தொழிற் போட்டியை ஊக்குவிக்கும் நோக்கிலும் அதன் வழியாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும், எளிதில் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலை, எளிய விதிமுறைகள் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. கட்டுமானத்துக்கான அனுமதி, தொழிலாளர் விதிமுறைகள், சுற்றுச்சூழல் பதிவு, தொழில் தொடங்குவதற்கு ஏற்றவகையில் இடம் இருத்தல், ஒற்றைச் சாரள முறை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
இறுதியாக 2020 செப்டம்பர் மாதம் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஆந்திரப் பிரதேசம் முதல்இடம் பிடித்தது. உத்தரப் பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.