

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை சமாளிக்க விதிக்கப்படும் செஸ் வரி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு வரை தொடரும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கான அரசாணையை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ஒருமுக வரி விதிப்பு முறையாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு அளிக்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இதன்படி 2022 ஜூலை மாதம் வரை இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாக ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மாநில அரசுகள் கடனாக திரட்டிக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ஜிஎஸ்டி இழப்பீடை ஈடு செய்வதற்காக சில பொருள்கள் மீது செஸ் (கூடுதல் வரி) விதிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதனிடையே வரி வருவாய் குறைந்ததால் ஜிஎஸ்டி வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் வலியுறுத்தத் தொடங்கின. இது தொடர்பாக அடுத்து வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கடுமையான விவாதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இது தொடர்பாக மத்திய அரசு உறுதியான பதில் எதையும் தரவில்லை. செஸ் மூலம் கிடைக்கும் வருவாய், இழப்பீடாக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.