Last Updated : 25 Jun, 2022 09:35 PM

 

Published : 25 Jun 2022 09:35 PM
Last Updated : 25 Jun 2022 09:35 PM

கோவை சிட்ராவில் ரூ.25 கோடியில் ஜவுளிப் பொருட்களை சோதனையிட நவீன வசதி: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

படம்:ஜெ.மனோகரன்.

கோவை: "ஆயத்த ஆடை உற்பத்தியில் நாட்டில் முதலிடம் வகிக்கும் தமிழகம், ஜவுளி உற்பத்தியிலும் இரண்டாம் இடம் வகிக்கிறது" என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும், “கோவை சிட்ராவில் ரூ.25 கோடியில் ஜவுளிப் பொருட்களை சோதனையிட நவீன வசதி ஏற்படுத்தப்படும்” என்றார்.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் 13-வது ஜவுளி இயந்திரங்கள், உதிரி பாகங்கள் கண்காட்சி கோவை கொடிசியாவில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. இந்தக் கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் இரண்டாவது அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

மொத்த மின்சார உற்பத்தியில், காற்றலை வாயிலாக அதிக பங்களிப்பை வழங்குவதில் தமிழகம் உலக அளவில் ஒன்பதாம் இடத்திலும், கார் உற்பத்தியிலும் உலகின் பத்து பெரிய உற்பத்தி மையங்களில் ஒன்றாகவும் தமிழகம் திகழ்கிறது. வாகன உற்பத்தி, மருந்து, ஜவுளி, தோல் மற்றும் ரசாயன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தியிலும் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.

நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் மூன்றில் ஒரு பகுதி நிறுவனங்கள் அமைந்திருப்பதன் மூலம் தமிழகம், இந்தியாவின் ஜவுளி பள்ளத்தாக்காகவும், மொத்த நூல் உற்பத்தியில் 40 சதவீதத்தை பெற்றிருப்பதன் மூலம் இந்தியாவின் நூல் கிண்ணமாகவும் திகழ்கிறது.

இந்தியாவில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பாதி அளவுக்கு (13,000-ல் 6,500) தமிழகத்தில் இருப்பதுடன், ஆயத்த ஆடை உற்பத்தியில் முதலிடத்திலும், ஜவுளி உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் தமிழகம் இருக்கிறது. 35 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில் துறை திகழ்ந்து வருகிறது.

புத்தெழுச்சி பெறும் ஜவுளித் தொழில்: ஜவுளித் தொழில் துறை கோவிட் நெருக்கடியை வாய்ப்பாக மாற்றி, 3 மாத காலத்திற்குள் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. கோவிட் பாதிப்புக்கு பிந்தைய காலத்தில், ஜவுளி ஏற்றுமதி சாதனை அளவாக 44 பில்லியன் டாலரை எட்டியுள்ள நிலையில், 2025-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலரை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியாவுக்கு மிக முக்கியமாக திகழும் ஜவுளித்துறை, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்கள்: ஜவுளித் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை: எம்எம்எஃப் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு ரூ.10,683 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் ஆறு நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.964 கோடி முதலீடும், 12 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்பும், ரூ.14,600 கோடி விற்று வரவும், ரூ. 360 கோடி அளவுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மித்ரா பூங்காக்கள்: பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்த ஆடை (PM MITRA) பூங்கா திட்டத்தின் கீழ் 7 பூங்காக்களை உலக தரம் வாய்ந்த கட்டமைப்புடன், ரூ. 4 ஆயிரத்து 45 கோடி மதிப்பீட்டில், 2027 - 2028 -க்குள் அமைக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் விருதுநகரில் பிரதமரின் மித்ரா பூங்காவை அமைக்க தமிழக அரசு திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஒருங்கிணைந்த ஜவுளித் தொழில் பூங்கா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ரூ.740 கோடி செலவில் 8 பூங்காக்களை அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் 4 பூங்காக்களின் பணிகள் முடிவடைந்துள்ளது. 4 இடங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

தமிழகத்தின் கொலப்பலூரில் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவையில் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம் SITRA சார்பில் மெடிடெக் உயர் சிறப்பு மையமும், பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் இந்து டெக் உயர் சிறப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் ரூ.8,024 கோடி நிதியுதவி மற்றும் ரூ.595 கோடி மான்ய உதவியுடன், சுமார் 6 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக, மொத்தம் 1405 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமர்த் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2 லட்சம் பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, இதுவரை 1.71 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவும், இங்கிருந்து பொருட்களை வாங்கவும் ஆர்வமாக உள்ளன. எனவே, வெளிநாட்டு சந்தைவாய்ப்புகள், ஏற்றுமதியில் போட்டியிட உதவும் வகையில் ஏற்கெனவே ஐக்கிய அரபு நாடுகள் (யுஏஇ), ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (எஃப்டிஏ) மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், இஸ்ரேல் ஆகியவற்றுடன் ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பீளமேட்டில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்தில் (சிட்ரா) சானிடரி நாப்கின்கள் தயாரிக்கும் வசதியை பார்வையிட்டேன். நாட்டில் உள்ள அனைத்து இளம் பெண்களுக்கும் சானிடரி நாப்கின்களை மத்திய அரசின் மக்கள் மருந்ததங்கள் மூலம் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிட்ராவில் உள்ள இயந்திரங்கள் மூலம் தமிழகத்துக்கு தேவையான நாப்கின்களை தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய தர நிர்ணய அமைவனத்துடன் (பிஐஎஸ்) இணைந்து, அனைத்துவித ஜவுளிப் பொருட்களையும் சோதனையிட ரூ.25 கோடியில் சிட்ராவில் நவீன பரிசோதனை வசதி ஏற்படுத்தப்படும். இதன்மூலம் ஜவுளி பொருட்களை சோதனையிட வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான பஞ்சாலைகளை லாபத்தில் இயக்க முடியுமா என ஆராய்ந்து வருகிறோம். தற்போதைய நிலையில் அவை லாபகரமாக இயங்கவில்லை. தேசிய பஞ்சாலைகழகத்துக்கு சொந்தமான சொத்துகளை தனியாருடன் இணைந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சைமா தலைவர் ரவிசாம், துணைத் தலைவர் எஸ்.கே.சுந்தரராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x