Published : 23 Jun 2022 11:52 PM
Last Updated : 23 Jun 2022 11:52 PM
டிஜிட்டல் தங்கம்: நேரடியாகத் தங்கம் வாங்கும்போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என்ற பல்வேறு செலவினங்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது பெரும் சவாலான ஒன்றாகும். சுத்த தங்கம் அல்லாமல் ஆபரணத் தங்கத்தை வாங்கும்போது தரம் குறித்த கேள்வியும், மீண்டும் விற்கும்போது கேள்விகளை எழுப்புகிறது. இதனால் நேரடியாக தங்கமாக அல்லாமல் டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைப்பதில் தற்போது ஆர்வம் அதிகரித்து வருகிறது.
ஆன்லைனில் டிமேட் கணக்கு தொடங்கி ஏராளமானோர் தங்கம் வாங்கி வருகின்றனர். இதேபோன்று மாற்று முறையில் தங்கம் வாங்கும் திட்டமே தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bond) ஆகும். இதில் தங்கத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினை இல்லை. செய்கூலி, சேதார பிரச்சினையும் இல்லை.
தங்கக் கடன் பத்திரம்: மத்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுபவையே தங்கக் கடன் பத்திரங்கள் ஆகும். அன்றைய விலையில் ஒரு கிராம் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ, அதே விலையில் இந்தத் தங்கக் கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.
முதலீட்டுக்காகத் தங்கம் வாங்குபவர்கள் நேரடி தங்கத்திற்குப் பதிலாக தங்கக் கடன் பத்திரங்களை வாங்கிக்கொள்ளலாம். இந்தப் பத்திரங்களில் குறிப்பிடப்படுவது 24 கேரட் சுத்தத் தங்கம் ஆகும். ஆனால், இவற்றை வாங்குவது மற்றும் விற்பதில் சில விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு கிராமில் இருந்து 4 கிலோ வரை தங்கக் கடன் பத்திரங்களாக வாங்க முடியும். தங்கம் விற்பனைக்கு ஆவணமாக பத்திரமாக வழங்கப்படும். இதனை டிமேட் கணக்கிலும் வாங்கிக் கொள்ளலாம்.
செய்கூலி, சேதாரம் இல்லை: டிமேட் கணக்கு வைத்திருப்பவர்களாக இருந்தால் பங்குத் தரகர்கள் மூலமாகவே இந்தத் தங்கக் கடன் பத்திரங்கள் வாங்க விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் மற்றும் ஆன்லைன் பேமண்ட் வசதிகள் கொண்டு பணம் செலுத்துபவர்களுக்குக் கிராமிற்கு 50 ரூபாய் தள்ளுபடியும் உண்டு. இந்தத் தங்கக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில் செய்கூலி, சேதாரம் எதுவும் இல்லை. ஆனால் இதனை நேரடியாக தங்கமாக வாங்க முடியாது.
இப்படி வாங்கப்படும் தங்கக் கடன் பத்திரம் முதிர்வடையும் காலம் 8 ஆண்டுகள். கடன் பத்திரத்தை வாங்கி 8 ஆண்டுகள் கழித்தே அந்தக் கடன் பத்திரத்தைக் கொடுத்து, அன்றைய தேதியில் தங்கம் என்ன விலையில் விற்கிறதோ அந்த விலையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
வரி கிடையாது: இந்தத் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்வதில் பல்வேறு நலன்கள் உள்ளன. 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடைந்த பிறகு கிடைக்கும் நீண்ட கால முதலீட்டு வருவாய்க்கு வரி கிடையாது. அதே போல இந்தத் தங்க முதலீட்டுப் பத்திரத்தை வைத்திருக்கும்போது வருடத்திற்கு 2.5 சதவிகிதம் அளவிற்கு, 6 மாதத்திற்கு ஒரு முறை வட்டி வழங்கப்படுகிறது.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT