செலவுகளை எதிர்கொள்ள முதியவர்களுக்கு உதவும் மறு அடமான கடன் திட்டம்: அடிப்படை தகவல்கள்

செலவுகளை எதிர்கொள்ள முதியவர்களுக்கு உதவும் மறு அடமான கடன் திட்டம்: அடிப்படை தகவல்கள்
Updated on
3 min read

தற்போதைய காலங்களில் ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை மிக குறைவு. அரசு பணிகளில் கூட 2004-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்பவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் 60 வயதுக்கு பிறகு அதிகமான மருத்துவ செலவு, வாழ்க்கை செலவுகளை சந்திக்கும் மூத்த குடிமக்கள் பலர் உள்ளனர்.

இவர்களுக்கு வருவாய் இல்லாததால் வங்கிகளில் கடன் வாங்கி தங்கள் செலவுகளை எதிர்கொள்ள முடியாது. நிரந்த வருவாய் இருப்பவர்கள் மட்டுமே தனிநபர் கடன், மருத்துவ கடன், வீட்டுக்கடன் போன்றவை பெற முடியும். இதனால் பெரிய அளவில் மூத்த குடிமக்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

இதற்கு ஒரு தீர்வாக கடந்த 2008-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டம் தான் மறு அடமான கடன் திட்டம். ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் (reverse mortgage scheme) என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற்று முதியவர்கள் தங்களது செலவுகளை எதிர்கொள்ள முடியும். இதற்கு ஒரே முக்கிய நிபந்தனை இந்த திட்டத்தின் கீழ் கடன் கோரும் நபருக்கு எந்த சர்ச்சையும் இல்லாத வகையில் சொந்த வீடு இருக்க வேண்டும்.

ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன்

பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்நாளில் ஈட்டிய பொருளின் பெரும் பகுதியை சொந்த வீடு வாங்குவதில் முதலீடு செய்கின்றனர். அவர்கள் முதியவர்களாக ஆன பிறகு வருவாய் இல்லாத சூழலில் தங்கள் வசம் உள்ள வீட்டை வைத்து கடன் பெறுவதே இந்ததிட்டம். வருவாய் குறைவாக இருக்கும் மூத்த குடிமக்கள் பயன் பெறும் வகையில் இருக்கும் கடன் திட்டம் தான் மறு அடமான கடன் திட்டம்.

அதாவது வீட்டுக்கடனை ரிவர்ஸில் பெறுவது. வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியதற்கு பதிலாக வீட்டை காட்டி கடன் பெறலாம். வீடு வாங்க மாதா மாதம் நாம் கடன் செலுத்திய காலம் போய், வீடு நமக்காக ஒவ்வொரு மாதமும் பணம் தருவது தான் ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் அல்லது மறு அடமானக் கடன்.

தகுதி என்ன?

60 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்கள் இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெற முடியும். அவரது பெயரில் சொந்தமாக வீடு இருக்க வேண்டும். அந்த வீடு கடன் கோரும் தகுதி நிலைக்குட்பட்டதாக இருக்க வேண்டும். தம்பதியரில் இருவரில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற தகுதியுடையவர் ஆவார்.

இவ்வகை கடன் திட்டத்தில் தங்களுடைய வீட்டின் மதிப்பீடு செய்து வங்கிகள் தரக் கூடிய தொகையை மொத்தமாகவோ அல்லது மாதா மாதம் ஒரு தொகையாகவோ பெற முடியும். இந்த கடன் தொகையை மற்ற வீட்டுக்கடன் போல மாத மாதம் இஎம்ஐ எனப்படும் மாதாந்திர தவணையாக அடைக்க வேண்டிய அவசியம் இல்லை.

வாங்கும் தொகையை வேண்டுமானால் மாதா மாதம் என தவணையாக பெற்றுக் கொள்ள முடியும். வீ்ட்டை விற்பனை செய்யும்போது கடன் தொகையை கழித்துக் கொள்ளலாம். அதாவது வீட்டுக்கடனில் மொத்தமாக தொகையை பெற்றுக் கொண்டு மாதா மாதம் வட்டியுடன் தவணையை செலுத்த வேண்டும். இந்த மறு அடமானக் கடனில் மாதம் தோறும் ஒரு தொகையை கடனாக பெற்றுக் கொள்ளலாம். அடைக்கும்போது மொத்தமாக பிறகு அடைக்கலாம் அல்லது வீட்டை விற்று கடனை அடைத்துக் கொள்ளலாம்.

வீட்டின் மதிப்புக்குட்பட்டு எந்த ஆண்டுகள் முடியுமோ அதுவரை தொகையை பெறலாம். வீட்டை காட்டி கடன் பெற்றாலும் அந்த வீட்டில் அவர்கள் வசித்துக் கொள்ளலாம். அதேசமயம் அந்த வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டு விட்டு அந்த வீட்டின் பெயரில் கடன் கோர முடியாது.

வசிக்கும் வீட்டை பாதுகாத்து, வரி முதலிய செலவுகளை ஏற்று பராமரித்தல் அவசியமான ஒன்றாகும். இதற்கான நிபந்தனைகளும் ஏறக்குறைய வீட்டுக்கடனுக்கான நிபந்தனைகளை போன்றே இருக்கின்றன.

அதிகப்பட்சமாக 15 வருடங்கள் வரை மாதா மாதம் கடன் தொகையை தொடர்ச்சியாக பெற முடியும். இதற்கு வீட்டின் ஆயுட்காலம் குறைந்தது 20 வருடங்களாவது இருத்தல் அவசியம். 15 வருடங்கள் கழிந்த பின் மாதத் தொகையை கடனாகப் பெற இயலாது. கடன் பெற்றவர் இறந்த பிறகோ அல்லது வீட்டை விற்க முற்படும் போதோ கடன் தொகையை திருப்பிச் செலுத்தினால் போதும்.

கடன் பெறுவோரின் வயது, சொத்தின் சந்தை மதிப்பு, சந்தை வட்டி விகிதம் மற்றும் நாம் தேர்ந்தெடுக்கும் கடன் முறையின் அடிப்படையில் கடன் தொகை வேறுபடும். வில்லங்கம் இல்லாத தெளிவான பத்திரங்களைக் கொண்ட சொத்தாக இருத்தல் அவசியம்.

கணவன் மனைவி இணைந்தும் மறு அடமானக் கடன் வசதியைப் பெற முடியும். அப்படி செய்யும் போது, இருவரின் வயது வரம்பு தொடர்பான விஷயங்களை அந்தந்த வங்கிகள் தீர்மானிக்கும். இருவரில் ஒருவராவது, 60 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் அவசியம்.

ஒருவேளை கடன் பெற்றவர் இறந்துபோனால் கடன் பெற அடமானம் வைத்த வீடு தொடர்பான விவரங்களை வாரிசுகள் முடிவு செய்யலாம். அவர்கள் சொத்தை விற்க வேண்டும் என்று விரும்பினால், அதனை விற்று கடன் மற்றும் வட்டி தொகையை அடைக்கலாம். மீதமுள்ள தொகையை வாரிசுதாரர் பெற்றுக் கொள்ளலாம்.

அதேசமயம் வீட்டை அவர் விற்பனை செய்ய விரும்பவில்லை என்றால் கடன் மற்றும் வட்டித் தொகையை அவர் வங்கிக்கு செலுத்த வேண்டும். அதன் பிறகு அந்த வீடு அவருக்கு உரிமையாகும். இந்த கடன் வழங்க சில கூடுதல் நிபந்தனைகள் உள்ளன. அதன்படி இதுபோன்ற கடன் கோரும் முதியவர்கள் வீட்டைப் பராமரிக்க, விரிவுபடுத்த இந்த தொகையை பயன்படுத்தலாம்.

வீடு காப்பீடு செலுத்த பயன்படுத்தலாம். அவசர மருத்துவ செலவுகளுக்குப் பயன்படுத்தலாம். ஓய்வூதியத்திற்கு துணையாக இத்தொகையை வைத்து தினசரி தேவைகளுக்கு செலவு செய்து கொள்ளலாம்.அத்தியாவசியமான பிற தேவைகளுக்கு இத்தொகையைப் பயன்படுத்தலாம். மற்ற செலவுகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற முடியாது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in