Published : 23 Jun 2022 06:37 AM
Last Updated : 23 Jun 2022 06:37 AM

ரூ.34,615 கோடி மோசடி | கபில் மற்றும் தீரஜ் வாத்வான் மீது சிபிஐ வழக்குப் பதிவு - 12 இடங்களில் சோதனை

மும்பை: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட 17 வங்கிகளிடமிருந்து கடன் பெற்று ரூ.34,615 கோடி மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குநர்கள் கபில் வாத்வான் மற்றும் தீரஜ் வாத்வான் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இவர்கள் தவிர்த்து, இம்மோசடியில் பங்குவகித்தாக மேலும் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதையடுத்து மும்பை யில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சிபிஐ நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டது.

வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான திவான் ஹவுசிங் பைனான்ஸ் ரூ.31,000 கோடி அளவில் முறைகேடாக கடன் வழங்கியதாக 2019-ம் ஆண்டு 'கோப்ரா போஸ்ட்' செய்தி வெளியிட்டது. அதையடுத்து அந்நிறுவனம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. 2015 முதல் 2018 வரையில் பல்வேறு போலி நிறுவனங்களுக்கு உரிய ஆவணங்கள் இன்றி திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்கியது அந்த விசாரணையில் உறுதியானது.

அதையடுத்து யெஸ் வங்கி மோசடியிலும் கபில் மற்றும் தீரஜ் வாத்வானுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் 2020-ம் ஆண்டு அமலாக்கத் துறை இவர்கள் இருவரையும் கைது செய்தது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, தங்கள் வங்கி உட்பட17 வங்கிகளிடமிருந்து கடன் பெற்று ரூ.34,615 கோடி மோசடி செய்ததாக வாத்வான் சகோதரர்கள் மற்றும் மேலும் சிலர் மீது சிபிஐயிடம் புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையிலேயே சிபிஐ தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x