

வருமான வரி என்பது வருமானங்களுக்காக அல்லது வருமானத்தின் மீது செலுத்தப்படும் வரியே வருமான வரி என்பது நம் அனைவருக்கும் தெரியும். சரி அப்படியென்றால், வரி செலுத்துவதற்கான வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது, எவை எல்லாம் வருமானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்ற கேள்வி நம் எல்லோருக்கும் வருவது இயல்பே. வருமானம் என்பது என்ன? வருமானம் குறித்து வருமான வரிச் சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து விவரிக்கிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் பணி அல்லது சேவை செய்ததற்காக தனிநபர் அல்லது நிறுவனம் பெறும் பணம் அல்லது அதற்கு சமமான மதிப்பே வருமானம் எனப்படும். எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், வேலை செய்ததற்காக ஒருவரது கைக்கு வந்த பணத்தை வருமானம் என வைத்துக் கொள்ளலாம். அப்படியென்றால், ஒருவருக்கு பணம் வர வேண்டியது இருக்கிறது இன்னும் கைக்கு வரவில்லை, அதுவும் வருமானத்தில் சேருமா, கைக்கு வரும் அனைத்தும் வருமானமாக எடுத்துக் கொள்ளப்படுமா, அதற்கு ஏதாவது கழிவுகள் உண்டா போன்ற கேள்விகளும் இயல்பாகவே எழும்.
ஐந்து வகை வருமானம்: பொதுவாக வருமானம் ஐந்து வகைகளாக பிரிக்கப்படுகிறது. ஒன்று மாத ஊதியம். இரண்டாவது வீடு, இடம் மூலமாக வரும் வாடகை வருமானம். மூன்றாவது ஒருவரிடம் உள்ள அசையும், அசையா சொத்துக்களை விற்பதன் மூலமாக வரும் வருமானம். இது மூலதன ஆதாயம் எனப்படும். ஒருவேளை இழப்பு ஏற்பட்டால் அது மூலதன இழப்பு. நான்காவது ஒருவர் செய்யும் வியாபாரம் அல்லது தொழில் மூலமாக வரும் வருமானம். ஐந்தாவதாக, இவை எதிலும் சேராமல் உள்ள பிறவகை வருமானம். வங்கியில் வைத்திருக்கும் நிரந்தர வைப்புத் தொகைக்கு வரும் வட்டி, பங்குகளுக்கு வரும் டிவைடண்ட் இந்த வகை வருமானத்திற்கு உதாரணம். இந்த ஐந்தும் வருமானத்தின் வகைகள் அல்லது வருமானம் வருவதற்கான வழிவகைகள். அப்படியென்றால் வருமானம் என்றால் என்ன...
ஊதிய வருமானம்: ஏற்கனவே வந்த, இனி வர இருக்கிற பணம் இரண்டும் சேர்ந்தது தான் வருமானம் எனப்படும். பொதுவாக சம்பளத்தைப் பொறுத்த வரையில் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி இரண்டும் தான் மாத ஊதியமாக எடுத்துக் கொள்ளப்படும். வருமான வரித் துறையை பொறுத்த வரையில் இந்த இரண்டுடன் சேர்த்து பல விஷயங்களும் வருமானத்தின் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. அடிப்படைச் சம்பளம், பஞ்சப் படி, பயணப் படி, வீட்டுவாடகை படி உள்ளிட்டவைகளுடன் சம்பள விடுப்புத் தொகையையும் சம்பளமாகவே வருமான வரித் துறை எடுத்துக் கொள்கிறது.
அரசாங்கத்தில் பணி புரிபவர்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. அவர் விடுப்பு எடுத்துக் கொள்ளாமல், அந்த விடுப்பை ஒப்படைத்து விட்டு தனது விடுப்பை பணமாக மாற்றிக் கொள்ள முடியும். இந்தத் தொகை வருமான வரித் துறையால் சம்பளமாகவே கருத்தப்படுகிறது. அதேபோல ஓவர் டைம் எனப்படும் கூடுதல் நேரம் வேலை செய்வதற்காக வழங்கப்படும் தொகையையும் வருமான வரித் துறை சம்பளமாகவே கருதும். மருத்துவச் செலவுக்காக வழங்கப்படும் படியும், குழந்தைகளின் கல்வி செலவுக்காக வழங்கப்படும் தொகையும் வருமானமாகவே கருதப்படும்.
அதாவது வேலை செய்யும் ஒருவர் தான் வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து பணமாகவே, பணத்தின் மதிப்பாகவோ பெரும் அனைத்தும் வருமானமாகவே வருமான வரித் துறையால் கருதப்படும். முக்கியமாக போனஸும் வருமானமாகவே கருதப்படும். அதாவது வருமான வரிச் சட்டத்தின் படி தொழிலாளரிடமிருந்து தொழிலாளிக்கு பணமாகவோ பணத்தின் மதிப்பாகவோ என்ன வந்தாலும் அவைகள் வருமானமாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதில் முக்கியமானது பெர்க்ஸ் (PERKS) எனப்படும் பிறவகைப் பலன்கள்.
பணத்தின் மதிப்பாக வருவது: அடுத்ததாக, ஒரு ஆதாயம் பணமாக பெறப்படாமல், பணத்தின் மதிப்பாக பெறப்பட்டிருந்தால் அதனையும் வருமானமாகவே வருமான வரித் துறை எடுத்துக்கொள்கிறது. அது என்ன பணத்தின் மதிப்பாக பெறுவது? சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வசிக்கும் வீடுகளுக்கான வாடகையை அவைகளே செலுத்தி விடுகின்றன. அதே போல, உயர் பதவிகளில் இருக்கும் ஊழியர்கள், அரசு அதிகாரிகளுக்கு நிறுவனம் சார்பாக வாகனம், அதற்கான எரிபொருளும் வழங்கப்படும். இவைகளுக்கான பணம் நேரடியாக ஊழியருக்கு வழங்கப்படாமல், ஊழியரின் சார்பாக உரியவர்களுக்கு வழங்கப்படும். இப்படி பணமாக இல்லாமல், பணத்திற்குரிய பலனாக பெறப்படும் விஷயங்களை மதிப்பிட்டு அதனையும் வருமானமாக வருமான வரித் துறை கணக்கிட்டுக் கொள்கிறது. அதாவது, ஊழியர் சார்பாக அவர் வேலை செய்யும் நிறுவனம் ஏதாவது பணம் செலுத்தி இருந்தால், அதில் அந்த ஊழியரின் பங்காக ஒரு குறிப்பிட்ட தொகை கணக்கிடப்பட்டு அந்த தொகை ஊழியரின் வருமானமாக எடுத்துக் கொள்ளப்படும்.
மூலதன ஆதாயம்: ஒரு அசையும் அல்லது அசையா சொத்துக்களை விற்கும் போது கிடைக்கும் ஆதாயம் வருமானமாக எடுத்துக்கொள்ளப்படும். இதனை மூலதன ஆதாயம் என்று சொல்வார்கள். சொத்துக்களை விற்கும் போது எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழும். அதாவது, ஒருவர் பத்து வருடங்களுக்கு முன்பாக ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய சொத்து ஒன்றை தற்போது ரூ.15 லட்சத்திற்கு விற்பனை செய்கிறார். அவர் வாங்கிய விலையில் இருந்து விற்ற விலையை கழித்தால் வரும் ரூ.14 லட்சம் அவருக்கு ஆதாயம். இப்போது இந்த ரூ.14 லட்சத்திற்கும் வரி கட்ட வேண்டுமா என்பது அந்த சந்தேகம். அப்படி வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் சொத்து வாங்கிய போது இருந்த பண மதிப்பும், விற்கும் போது இருக்கும் பண மதிப்பும் நிச்சயம் வேறுபட்டிருக்கும். அதனால், சொத்து வாங்கும் போது இருந்த பண மதிப்பு தற்போது என்னவாக இருக்கிறது என்று கணக்கிட்டு புதிய மதிப்பிற்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசமே வருமானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சரி அந்த மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்றால் வருமானவரித்துறை அதற்காக ஒரு அட்டவணை வெளியிட்டுள்ளது. விலைக்குறிப்புகள் (Cost Index) என்று அழைக்கப்படும். அதில் எல்லா வருடங்களுக்குமான பண மதிப்பு குறிப்பிடப் பட்டிருக்கும். அதன்படி சொத்து வாங்கப்பட்ட போது இருந்த விலைக்கு தற்போதைய மதிப்பு என்ன என்பது கணக்கிடப்பட்டு அந்த விலையில் இருந்து விற்பனை விலை கழிக்கப்பட்டு மீதம் வருமானமாக எடுத்துக் கொள்ளப்படும்.
வாடகை வருமானம்: வருமானத்தின் ஒரு வகையினமான வாடகை வருமானத்தைப் பொறுத்த வரையில், வாடகையில் வரும் தொகை அனைத்தையுமே வருமானமாக எடுத்துக் கொள்ளப்படும். வழக்கம் போல இந்த வருமானத்திலும் நமக்குள் ஒருசில கேள்விகள் எழும். நிலத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும். ஆனால் கட்டடங்களைப் பொறுத்த வரையில் இந்த விஷயம் அப்படியே தலைகீழானது. ஒவ்வொரு ஆண்டும் கட்டடத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வரும். அப்படியானால் இதில் எப்படி வருமானம் கணக்கிடப்படும்.
இதற்கு வருமானவரித்துறைச் சட்டம் விளக்கம் அளிக்கிறது. அதன்படி வாடகை மூலமாக பெறப்படும் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கை (1/6) தேய்மானமாக கழித்து மீதமுள்ள தொகையை வருமானமாக காட்டினால் போதும். இதிலும், அந்த சொத்தின் மீது அரசாங்கத்திற்கு ஏதாவது வரி செலுத்தியிருந்தால் அதனையும் நாம் கழித்துக் கொள்ளலாம்.
பிறவகை வருமானம்: நிரந்தர வைப்புகளின் மீது வரும் வட்டி, பங்குகளுக்காக வழங்கப்படும் டிவைடண்ட் இரண்டும் பிற வகை வருமானமாகும். பொதுவாக இதற்கு கழிவுகள் எதுவும் கிடையாது என்றாலும், சேமிப்பை ஊக்குவிப்பற்காக சில கழிவுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, அரசாங்கத்தில் சேமிக்கும் போது, தற்போதைய கணக்கு படி, வருடத்தின் மொத்த சேமிப்பில், ரூ.1.5 லட்சம் வரையில் கழிவாக எடுத்துக்கொள்ளலாம் என்று வருமானவரித்துறை அனுமதிக்கிறது. இன்னொரு வகையில், நிரந்தர வைப்பு மீது வரும் வட்டியில், ஒரு குறிப்பிட்டத் தொகையை கழிவாக எடுத்துக் கொள்ள வருமானவரித்துறை அனுமதிக்கிறது. உதாரணமாக, நிரந்தர வைப்புகள் மூலமாக வரும் வட்டியில் ரூ.50 ஆயிரம் வரைக்கும் வட்டி செலுத்த வேண்டியது இல்லை என சட்டம் அனுமதிக்கிறது. அதற்கு மேல் வரும் தொகைக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும்.
ஒருவரது கைக்கு வரும் அல்லது வரவேண்டிய பணம் அனைத்தும் வருமானமாக எடுத்துக் கொண்டாலும் அவைகளில் உரிய கழிவுகள் போக மீதமுள்ள தொகைக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும்.