

புதுடெல்லி: மத்திய ரிசர்வ் வங்கி தங்கப் பத்திர விற்பனையை ஜூன் 20-ம் தேதி அன்று தொடங்கியுள்ளது. 24-ம் தேதியுடன் விற்பனை முடிவடைகிறது.
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவர்கள் ஆபரணத்துக்கு மாற்றாக முதலீடு செய்யும் வாய்ப்பாக தங்கப் பத்திரங்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் சீரிஸ் தங்க பத்திரம் விற்பனை ஜூன் 20-ம் தேதி அன்று தொடங்கியது. இன்னும் 5 நாட்கள் இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். தபால் நிலையங்கள், மற்றும் அனைத்து துணை தபால் நிலையங்களிலும், வங்கிகளிலும் தங்க பத்திரங்கள் விற்பனை நடைபெறும்.
தங்க பத்திரம் வாங்குபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பான் கார்டு நகலை தர வேண்டும். ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் கொடுத்து அனைத்து தபால் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்
அன்றைய விலையில் ஒரு கிராம் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ, அதே விலையில் இந்தத் தங்கக் கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.
ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு கிராமில் இருந்து 4 கிலோ வரை தங்கக் கடன் பத்திரங்களாக வாங்க முடியும். தங்கம் விற்பனைக்கு ஆவணமாக பத்திரமாக வழங்கப்படும். இதனை டீமேட் கணக்கிலும் வாங்கிக் கொள்ளலாம்.
டீமேட் கணக்கு வைத்திருப்பவர்களாக இருந்தால் பங்குத் தரகர்கள் மூலமாகவே இந்தத் தங்கக் கடன் பத்திரங்கள் வாங்க விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் மற்றும் ஆன்லைன் பேமண்ட் வசதிகள் கொண்டு பணம் செலுத்துபவர்களுக்குக் கிராமிற்கு 50 ரூபாய் தள்ளுபடியும் உண்டு. இந்தத் தங்கக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில் செய்கூலி, சேதாரம் எதுவும் இல்லை. ஆனால் இதனை நேரடியாக தங்கமாக வாங்க முடியாது.
இப்படி வாங்கப்படும் தங்கக் கடன் பத்திரம் முதிர்வடையும் காலம் 8 ஆண்டுகள். கடன் பத்திரத்தை வாங்கி 8 ஆண்டுகள் கழித்தே அந்தக் கடன் பத்திரத்தைக் கொடுத்து, அன்றைய தேதியில் தங்கம் என்ன விலையில் விற்கிறதோ அந்த விலையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்வதில் பல்வேறு பலன்கள் உள்ளன. 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடைந்த பிறகு கிடைக்கும் நீண்ட கால முதலீட்டு வருவாய்க்கு வரி கிடையாது. அதே போல இந்தத் தங்க முதலீட்டுப் பத்திரத்தை வைத்திருக்கும்போது வருடத்திற்கு 2.5 சதவிகிதம் அளவிற்கு, 6 மாதத்திற்கு ஒரு முறை வட்டி வழங்கப்படுகிறது.
முதிர்வடையும் காலத்திற்கு முன்பாக விற்க வேண்டும் என்றால் பங்குத் தரகர்கள் மூலமாக அங்கு நாம் விற்பனை செய்துகொள்ள முடியும். இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் ஆண்டுக்கு இருமுறை நமக்குக் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கிடையாது.