

புதுடெல்லி: பருவநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாட்டிலிருந்து மரபுசாரா எரிசக்தியை நோக்கி நகர்ந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக உலக அளவில் மின் வாகனங்களை நோக்கிய நகர்வு வேகமடைந்துள்ளது. இந்தியாவிலும், மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
எனினும், மின் வாகனங்கள் விலை பெட்ரோல் வாகனங்களின் விலையைவிட 25 சதவீதத்துக்கு மேல் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ஓராண்டுக்குள் மின் வாகனங்களின் விலை, பெட்ரோல் வாகனங்களுக்கு நிகராக குறையும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் கட்கரி கூறுகையில், ‘மத்திய அரசு சாலை விரிவாக்கத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 2014-ல் தேசிய நெடுஞ்சாலை 91,000 கிலோ மீட்டராக இருந்தது.
தற்போது 1.45 லட்சம் கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 2025-க்குள் தேசிய நெடுஞ்சாலை 2 லட்சம் கிலோ மீட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும்’ என்றார்.