Published : 18 Jun 2022 08:07 PM
Last Updated : 18 Jun 2022 08:07 PM

இந்தியா டூ குவைத் - ஏற்றுமதியாகும் 192 மெட்ரிக் டன் மாட்டுச் சாணம்

ஜெய்ப்பூர்: இயற்கை விவசாயத்துக்காக, இந்தியாவிலிருந்து சுமார் 192 மெட்ரிக் டன் நாட்டு மாட்டுச் சாணம் குவைத் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

இது குறித்து இந்திய இயற்கை உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் அதுல் குப்தா அளித்த பேட்டி ஒன்றில், “ஜெய்ப்பூரை சேர்ந்த சன்ரைஸ் அக்ரிலாண்ட் என்ற நிறுவனம் குவைத் நாட்டிடமிருந்து இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. 2020-21-ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து 27,155,56 கோடி ரூபாய் மதிப்புள்ள விலங்குகள் சம்பந்தமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இது தவிர உலகளவில் கரிம உரத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நாடுகள் நாட்டு மாடுகளின் சாணத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டு மாடுகளின் சாணங்கள் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கடுமையான நோய்களிலிருந்து மனிதர்களை விடுவிக்க முடியும் என்று ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குவைத்தில் உள்ள விவசாய விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியில் நாட்டு மாடுகளின் சாணத்தை பயன்படுத்துவதன் மூலம் பழங்களின் அளவு அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.

சன்ரைஸ் அக்ரிலாண்ட் நிறுவனத்தின் இயக்குநர் பிரசாத் சதுர்வேதி அளித்த பேட்டியில், “இந்தியாவில் உள்ள நாட்டு மாடுகளின் சாணம் குவைத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை. சாணங்களை பேக்கிங் செய்து கன்டெய்னர்களுக்கு அனுப்பும் பணி மேற்பார்வையாளர்கள் தலைமையில் நடந்து வருகிறது. முதல் சரக்கு ஜூன் 15-ம் தேதி கனகபுரா ரயில் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தியா நாட்டு மாடுகளின் சாணத்தை மாலத்தீவுகள், அமெரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

குவைத்தை பொறுத்தவரை அந்நாடு பிற வளைகுடா நாடுகளைப் போலவே உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது. மேலும், தட்ப வெப்பநிலை, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குவைத்தில் பாரம்பரிய விவசாயம் என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x