

சூரிச்: கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் நிதி ஆதாரம் உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2021) இறுதியில் இந்தியர்களின் நிதி சுமார் ரூ.30,500 கோடிக்கு மேல் இருக்கலாம் என சுவிட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கியின் (Federal Bank) வருடாந்திர தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17-ஆம் நூற்றாண்டு முதலே சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் முதலீடு மற்றும் நிதி சார்ந்த விவரங்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக சர்வதேச நாடுகளை சார்ந்த பணம் படைத்த மக்கள் சுவிஸ் வங்கிகளில் கணக்குகளை வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்தியாவைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளதோடு முதலீடு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்களின் விவரங்கள் மூன்று பட்டியலாக இந்திய அரசிடம் சுவிட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கி ஒப்படைத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவை சார்ந்த தனிநபர் மற்றும் நிறுவனங்களின் நிதி ஆதாரம் தங்கள் நாட்டு வங்கிகளில் ரூ.30,500 கோடிக்கு மேல் இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 இறுதியில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் நிதி ஆதாரம் மொத்தமாக ரூ.20,700 கோடி இருந்ததாகவும், தற்போது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த நிதி அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 வாக்கில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் நிதி ரூ.23,000 கோடி. அதன்பிறகு இந்திய நிதி ஆதாரம் சில ஆண்டுகள் சரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இடையில் 2011, 2013, 2017, 2020 மற்றும் 2021 வாக்கில் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 2016-இல் இந்தியர்களின் நிதி சுவிஸ் வங்கிகளில் மிகவும் குறைந்த நிலையில் இருந்துள்ளது.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் செய்யப்பட்டுள்ள வங்கி கணக்கு டெபாசிட், பங்குகள், செக்யூரிட்டிஸ் மற்றும் இதர நிதி ஆதாரங்கள் என அனைத்தும் இதில் அடங்கும் எனவும் தெரிகிறது. சுமார் 50 சதவீதம் வரை முதலீடுகளில் ஏற்றம் கண்டது இதற்கு காரணம் என தெரிகிறது. மேலும், இது கருப்பு பண பதுக்கல் கணக்கில் சேராது எனவும் சுவிஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.