

அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் ஹெச் 1பி விசா விண்ணப்பத்துக்கு வழக்கமான கட்டணத்தை விட தற்போது 4,000 டாலர்கள் கூடுதலாக இந்திய ஐடி நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பெடரல் ஏஜென்சி இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. புதிதாக திருத்தப்பட்டுள்ள விசா விதிமுறைகள்படி கடந்த டிசம்பர் மாதம் முதல் இது அமலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளது.
இது தவிர எல்-1 விசாவுக்கான விண்ணப்பக் கட்டணமாக 4500 டாலர்களாக புதிய விதிமுறைகள்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அமெரிக்க நிறுவனங்களுக்கும் இந்த புதிய சட்டம் பொருந்தும். 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்த சட்டம் செயல்பாட்டில் இருக்கும்.
ஹெச் 1பி விசா அமெரிக்காவில் தங்கி பணிபுரிய அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை அழைத்து வருவதற்கு அளிக்கப்படுவதாகும். அமெரிக்கா தவிர வெளிநாடுகளிலும் செயல்பட்டு வரும் நிறுவன பணியாளர்களுக்கு அளிக்கப்படும் விசா எல்-1 விசாவாகும்.
இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 400 மில்லியன் டாலர் வரை கூடுதல் சுமை என்றும், இது பாரபட்சமானது என்றும் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த உயர்வு அதிகபட்சமான அளவு என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சேவைகள் (USCIS) இணைய தளத்தில் புதிய விதிமுறைகள் மற்றும் புதிய கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.