Published : 17 Jun 2022 01:52 PM
Last Updated : 17 Jun 2022 01:52 PM

‘‘கோதுமை வேண்டுமா? பாமாயில் தாங்க’’- இந்தோனேசியாவுடன் ஒப்பந்தம் செய்கிறது இந்தியா: சமையல் எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு

புதுடெல்லி: இந்தியாவில் சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்ந்த நிலையில் இந்தோனேசியாவுக்கு கோதுமையை தந்து அதற்கு பதிலாக பாமாயிலை வாங்கிக் கொள்ள மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்தது. மலேசியோ, இந்தோனேசியா என பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய பாமாயிலை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடான இந்தோனேசியா, உள்நாட்டில் அதிகரித்து வரும் பாமாயிலின் விலையை கட்டுப்படுத்த ஏப்ரல் 28 அன்று ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

சமையல் எண்ணெய் விலை உயர்வு

இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்பட்டது. இதன் பாதிப்பும் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும் கடுமையாக எதிரொலிக்கிறது. பெருமளவு பாமாயில் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

எனினும் இந்தோனேசிய பாமாயிலுக்கு மாற்றாக வேறு பல நாடுகளில் இருந்து இந்தியா சமையல் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. மலேசியா, தாய்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகஅளவு பாமாயில் இறக்குமதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்தோனேசியா ஏற்றுமதி தடையை நீக்கி விட்டபோதிலும் அந்நாடு கட்டுப்பாட்டுடன் மட்டுமே ஏற்றுமதி செய்கிறது.

இந்தநிலையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாமாயில் வழங்க இந்தோனேசியாவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்தியா முன்னுரிமை அடிப்படையில் இந்தோனேசியாவுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்ய முன் வந்துள்ளது.

கோதுமை தட்டுப்பாடு

உலக அளவில் கோதுமைக்கு தேவை ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து கோதுமை வாங்கும் பல நாடுகள் மற்ற நாடுகளை நாடின. இதனால் இந்தியாவில் இருந்து அதிகஅளவு கோதுமை ஏற்றுமதியாகி உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கோதுமை ஏற்றுமதிக்கு தற்காலிகமாக மத்திய அரசு தடை விதித்தது. எனினும் கட்டுப்பாடுகளுடன் கோதுமை ஏற்றுமதி செய்ய தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

இந்தநிலையில் இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் பெறுவதற்காக பதிலுக்கு இந்தோனேசியாவிற்கு கோதுமையை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாகவும், முக்கிய கோதுமை ஏற்றுமதி நாடுகளான ரஷ்யா- உக்ரைன் நாடுகளில் இருந்து கோதுமை பெற முடியாததால் இந்தோனேசியாவிலும் கோதுமைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவுடன் பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கு தற்போது பாமாயில் தேவை உள்ளது. அதேசமயம் இந்தோனேசியாவுக்கு கோதுமை தேவை உள்ளது. இந்தோனேசியாவின் கட்டுப்பாட்டால் இந்தியாவுக்கு பாமாயில் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

அதேசமயம் இந்தியா விதித்த தடையால் இந்தோனேசியாவுக்கு கோதுமை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே பரஸ்பரம் இரண்டு நாடுகளும் பயன்பெறும் வகையில் விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத இரண்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்தோனேசியா இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்து கொள்ள ஆர்வமாக இருப்பதால் இந்த ஒப்பந்தம் சாத்தியமாகும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசுக்கும் அரசுக்கும் இடையே செய்யப்படும் ஒப்பந்தம் மூலம் இதனை செய்ய முன் வந்துள்ளது. பாமாயில் ஏற்றுமதியை எளிதாக்கியுள்ள இந்தோனேசியா, இந்தியாவுடனான ஜி2ஜி ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், எதிர்காலத்தில் கூட சமையல் எண்ணெய் விநியோகத்தில் திடீர் இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் என மத்திய உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் இருந்து தடையின்றி பாமாயில் கிடைத்தால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x