ரூ.100 கோடி டர்ன் ஓவர் கண்ட குடும்பஸ்ரீ கேரளா சிக்கன் - சாத்தியமானது எப்படி?

ரூ.100 கோடி டர்ன் ஓவர் கண்ட குடும்பஸ்ரீ கேரளா சிக்கன் - சாத்தியமானது எப்படி?
Updated on
2 min read

குடும்பஸ்ரீ பிராய்லர் ஃபார்மர்ஸ் புரொட்யூசர்ஸ் கம்பெனி லிமிடெட் (KBFPCL) நிறுவனம் ‘குடும்பஸ்ரீ கேரளா சிக்கன்’ பிராண்டின் மூலமாக ரூ.100 கோடி டர்ன் ஓவரை எட்டியுள்ளது. கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறை மூலம் முன்னெடுக்கப்பட்ட முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

கோழி இறைச்சியை நியாயமான விலையில் மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட திட்டம் இது. மக்களால், மக்களுக்காக இயங்கி வரும் திட்டம் என்றும் இதை சொல்லலாம். அந்த மாநிலத்தை தற்போது ஆட்சி செய்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி திட்டங்களில் இது ஒன்றாகும். வறுமை ஒழிப்பு மற்றும் மகளிர் மேம்பாடு சார்ந்து இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

குடும்பஸ்ரீ கேரளா சிக்கன் - கான்செப்ட்: கேரள மாநிலத்தில் நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் கோழிகள் இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த தேவையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே கேரளாவில் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல். அதனால் மீதமுள்ள 90 சதவீத தேவைக்கு அண்டை மாநிலங்களை நம்பியுள்ளது கேரளா. அந்த சந்தை வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலும், நயமான விலையில் தரமான கோழி இறைச்சியை மக்களுக்கு வழங்குவது போன்றவற்றை உள்ளடக்கியம் தொடங்கப்பட்டதுதான் குடும்பஸ்ரீ கேரளா சிக்கன். இது KBFPCL நிறுவனத்தின் பிராண்டாகும்.

கடந்த 2017 வாக்கில் கேரள அரசு இதனை கொண்டுவந்துள்ளது. இதில் அந்த மாநில அரசின் கால்நடை பராமரிப்புத் துறை, மாநில கோழி வளர்ப்புக் கழகம், கேரள கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் ஆகியவை குடும்பஸ்ரீயுடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

சுமார் 78,90,276 கிலோ கிராம் கோழி இறைச்சியை கேரள சிக்கன் அவுட்லெட் மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக தகவல். அதுவும் சந்தையில் விற்பனையாகும் வழக்கமான விலையை காட்டிலும் மலிவான விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த திட்டம் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

குடும்பஸ்ரீயின் பங்கு: அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே பண்ணை அமைக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதற்காக இந்த நிறுவனம் விவசாயிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்கிறது. பின்னர் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. கோழி வளர்ப்பு சார்ந்த அனைத்து அம்சங்களும் இந்த பயிற்சியில் அடங்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோழி குஞ்சுகள், தீவனம், மருந்து போன்றவை வழங்கப்படுகிறது. அதோடு நின்று விடாமல் கோழி குஞ்சுகளின் வளர்ச்சி மற்றும் அதன் தரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

40-45 நாட்களில் கோழிகள் 1.8 முதல் 2 கிலோ எடையை எட்டியதும் அது கேரள சிக்கன் விற்பனை நிலைய அவுட்லெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதை வளர்க்கும் விவசாயிகளுக்கு அதிகபட்சம் 13 ரூபாய் வளர்ப்பு கட்டணம் வழங்கப்படுகிறது. அந்த தொகை 15 நாட்களுக்குள் செலுத்தப்பட்டு விடுவதும் குறிப்பிடத்தக்கது.

கேரள சிக்கன் விற்பனை நிலைய அவுட்லெட் அமைக்கும் வாய்ப்பும் குடும்பஸ்ரீ உறுப்பினர்களுக்கே வழங்கப்படுகிறது. உரிமம், கழிவு மேலாண்மை போன்ற முறையான ஆய்வுக்கு பிறகே இந்த வாய்ப்பு குடும்பஸ்ரீ உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் குடும்பஸ்ரீயில் அங்கம் வகிக்கும் மகளிர் தொழில்முனைவோர்களாக உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்ணையம் மற்றும் சிக்கன் விற்பனை நிலையத்தின் மூலமாக சுமார் 364 மகளிர் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ணையாளர்கள் சராசரியாக 45 நாட்களுக்கு ஒருமுறை ரூ.50,000 ஈட்டுவதாகவும், சிக்கன் விற்பனை நிலையங்கள் மூலம் மாதத்திற்கு ரூ.87,000 வருமானம் ஈட்டுவதாகவும் KBFPCL நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் பண்ணையாளர்களுக்கு ஒருங்கிணைந்த கட்டணமாக ரூ.9.3 கோடியும், விற்பனை நிலைய பயனாளிகளுக்கு ரூ.11.5 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. அது தவிர கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக பண்ணையாளர்களுக்கு ₹23,52,940 மானியம் வழங்கப்படுகிறது.

ஆக்‌ஷன் திட்டம்: கடினம்குளத்தில் பிராசஸிங் ஆலை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு செயல் திட்டம் ஒன்றையும் அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு 1000 புதிய பண்ணைகளை அமைக்கவும், 500 விற்பனை நிலையங்களை தொடங்கவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

KBFPCL-இன் 2019-2020 நிதியாண்டுக்கான டர்ன் ஓவர் ரூ.6.29 கோடி என்றும், 2020-21 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை ரூ.9.51 கோடி என்றும், 2021-22 நிதியாண்டில் இதன் எண்ணிக்கை ரூ.67.05 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in