Last Updated : 15 Jun, 2022 03:22 PM

 

Published : 15 Jun 2022 03:22 PM
Last Updated : 15 Jun 2022 03:22 PM

சவுதியை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தில் ரஷ்யா: தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி பெரும் லாபம் ஈட்டும் இந்திய தனியார் நிறுவனங்கள் 

புதுடெல்லி: இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி ரஷ்யா 2-ம் இடம் வந்துள்ளது. ஆனால் தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து இந்தியாவில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளுககு ஏற்றுமதி செய்து பெரும் லாபம் ஈட்டியுள்ளன. இந்த வாய்ப்பு அதிகமாக இந்தியன் ஆயில் போன்ற இந்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு கிடைக்கவில்லை.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.

ஐரோப்பாவில் போராட்டம்

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகபடியான கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெய் 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா விற்பனை செய்கிறது. டாலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால் மலிவான விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைத்து வருகிறது.

ரஷ்ய கச்சா எண்ணெய்

மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள கச்சா எண்ணெய் சாதனை அளவை எட்டியுள்ளது. மே மாதத்தில் ஒரு நாளைக்கு 840,645 பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது ஏப்ரலில் 388,666 பீப்பாய்களாக இருந்தது.

இதனால் மே மாதத்தில் இந்தியாவுக்கு மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விற்பனை செய்த நாடுகளின் வரிசையில் 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறியுள்ளது. அதிக சப்ளை செய்த நாடுகள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இராக் உள்ளது.

இதுவரை இரண்டாமிடத்தில் இருந்த சவூதி அரேபியா தற்போது மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு போக்குவரத்து செலவு அதிகமாக இருந்ததால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்திய நிறுவனங்கள் வாங்குவது குறைவாக இருந்தது. தற்போது அதிகமான தள்ளுபடி விலையில் கிடைப்பதால் இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிகஅளவில் இறக்குமதி செய்து வருகின்றன.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த மொத்த கச்சா எண்ணெய் அளவு மே மாதத்தில் சுமார் 16.5 சதவீதமாகும். ஜூன் மாதத்தில் இது மேலும் உயரக்கூடும். ஜூன் மாத இறக்குமதி 1.05 மில்லியன் பீப்பாய்கள் என்ற உச்ச எண்ணிக்கையை தொடும் என நம்பப்படுகிறது.

பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 30 டாலர் விலைக்கும் குறைவாகவே ரஷ்யா வழங்குகிறது. இதனால் இந்தியாவின் அரசு எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பெரும் லாபம் ஈட்டி வருகின்றன.

லாபம் ஈட்டும் தனியார் நிறுவனங்கள்

தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 1.2 மில்லியன் பேரல்கள் திறன் கொண்ட சுத்திகரிப்பு வளாகத்தை இயக்குகிறது. வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி அதனை பிரித்தெடுத்து பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலிய பொருட்களாக பெரும்பகுதியை ஏற்றுமதி செய்கிறது.

சிக்கா துறைமுகம் ரிலையன்ஸின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கையாளுகிறது. மே மாதத்தில் 10.81 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் இந்த நிறுவனத்துக்கு வந்துள்ளது. இதனை ரிலையன்ஸ் நிறுவனம் சுத்திகரித்து இதே துறைமுகத்தில் இருந்து 2.0 மில்லியன் பீப்பாய்கள் டீசலை மே மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

மே மாதத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஒட்டுமொத்த கச்சா இறக்குமதியில் ரஷ்ய எண்ணெயின் பங்கு ஐந்தில் ஒரு பங்காக உயர்ந்தது. தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய எண்ணெயை அதிகஅளவில் ரிலையன்ஸ் நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது.

ரிலையன்ஸ், மே மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் 1.4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் இருந்து 9.1 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ரிலையன்ஸ் இறக்குமதி செய்த கச்சா எண்ணெயின் அளவு ஏப்ரல் மாதத்தில் 67% லிருந்து 61% ஆக குறைந்துள்ளது,

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி 13 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. மே மாதத்தில் அமெரிக்க கச்சா எண்ணெய் வாங்குவதை ரிலையன்ஸ் நிறுவனம் முற்றிலுமாக தவிர்த்து விட்டது. அதற்கு பதிலாக தள்ளுபடி விலையில் ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து வாங்கி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரையில் வாங்கிய கச்சா எண்ணெயில் பெருமளவை சுத்திகரித்து ஐரோப்பிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்துள்ளது.

சிக்கா துறைமுகத்தில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் மே மாதத்தில் ஐரோப்பாவிற்கு 2.56 மில்லியன் பீப்பாய்கள் டீசலை ஏற்றுமதி செய்தது. ஏப்ரல் மாதம் 890,000 பீப்பாய்கள் பெட்ரோலை அமெரிக்காவிற்கு அனுப்பியது. இவை ரஷ்யாவில் வாங்கப்பட்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் மட்டுமல்லாமல் இந்தியாவின் இரண்டாவது பெரிய சுத்திகரிப்பு ஆலையை இயக்கும் நயாரா எனர்ஜி நிறுவனமாகும். ரஷ்ய கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஏற்றுமதி செய்வது ரிலையன்ஸ் மட்டுமல்ல நயாரா நிறுவனமும் செய்கிறது.

நயாரா ரஷ்யாவின் ரோஸ் நேபிட்டின் துணை நிறுவனத்திற்கும், சரக்கு வர்த்தகரான ட்ராபிகுராவின் துணை நிறுவனத்திற்கும் சொந்தமானது. இது குஜராத்தின் வாடினாரில் சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வருகிறது.

இந்த துறைமுகம் மே மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு 340,000 பீப்பாய்கள் டீசலை ஏற்றுமதி செய்தது, இது நயாராவால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனால் ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு தடை விதித்ததால் இந்திய நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டி வருவதாக ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளன.
இந்தியாவில் தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் மொத்த ஏற்றுமதியை 2021 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிட்டால் தற்போது 15% அதிகமாக உயர்ந்துள்ளன. ஏற்றுமதி செய்வதால் அதிக லாபம் கிடைப்பதால் தனியார் நிறுவனங்கள் உள்ளூர் விற்பனையை குறைத்துள்ளன.

அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யும் வகையில் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டு எரிபொருள் விற்பனையின் சந்தைப் பங்கை ஏப்ரல் மாதத்தில் 7% ஆகக் குறைத்துள்ளன. மார்ச் மாதத்தில் இது 10% ஆக இருந்தது.

அரசு எண்ணெய் நிறுவனங்கள்

அதேசமயம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற அரசு எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டு விற்பனைக்கு தேவையானவற்றை வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏற்றுமதியை ஒப்பிடுகையில் டீசல் விற்பனையில் லிட்டருக்கு 20 ரூபாய்க்கும் அதிகமாகவும், பெட்ரோல் லிட்டருக்கு 17 ரூபாய்க்கும் மேல் இந்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டரிலும் 200 ரூபாய்க்கு மேல் இழக்கின்றன. இருப்பினும் உள்நாட்டு தேவைக்காக அவை விற்பனை செய்து வருகின்றன. அதேசமயம் தனியார் நிறுவனங்களுக்கு அந்த நிர்பந்தம் இல்லை என்பதால் அவை உள்நாட்டு விற்பனையை குறைத்துக் கொண்டு அதிகஅளவில் ஏற்றுமதி செய்துள்ளன.

பொற்காலம்

இதுகுறித்து ஐசிஐசிஐ சந்தை ஆராய்ச்சி நிறுவனம் கூறுகையில் ‘‘இது இந்திய தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளர்களுக்கு பொற்காலம். ஆனால் இந்தியாவில் அரசு சுத்திகரிப்பு நிறுவனங்களின் நிலை எதிர்மறையாக உள்ளது. இந்திய சந்தையில் எவ்வளவு அதிகமாக விற்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நஷ்டம் ஏற்படும் என்பதை தனியார் நிறுவனங்கள் புரிந்து கொண்டுள்ளன.’’ என தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x