

சென்னை: வரும் ஜூலை மாதத்தின் முற்பாதியில் 'நத்திங் போன் (1)' ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்நிலையில், நத்திங் போன் (1) தமிழகத்தில் தயாரிக்கப்படும் என உறுதி செய்துள்ளது அந்த நிறுவனம்.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங் ஹெட்செட்டை விற்பனை செய்து வருகிறது. போன் (1) குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் வாக்கில் வெளியிட்டிருந்தது நத்திங். அப்போது முதலே இந்த போன் எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. அதற்கு காரணம் இதன் நிறுவனர் கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-இல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போன் பிளிப்கார்ட் தளம் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் குறித்த அறிவிப்பை மொபைல் போன் பிரியர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், இந்த போன் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் என உறுதி செய்துள்ளது நத்திங் நிறுவனம். இதனை நத்திங் இந்திய துணைத் தலைவர் மனு சர்மா உறுதி செய்துள்ளார். சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான், பெகட்ரான் மொபைல் போன் தயாரிப்பு கூடங்களில் இந்த போன் தயாரிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
வரும் ஜூலை 12-ஆம் தேதி அன்று இரவு 8.30 மணி அளவில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்து. அதற்கான டீசரை இப்போது பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.