வருமான வரி | வருமான வரித் துறை எப்போதெல்லாம் வட்டி வசூலிக்கும், வட்டி வழங்கும்? - ஒரு விளக்கம்

வருமான வரி | வருமான வரித் துறை எப்போதெல்லாம் வட்டி வசூலிக்கும், வட்டி வழங்கும்? - ஒரு விளக்கம்
Updated on
3 min read

தாமதமும், முன்னெச்சரிக்கையும் மனித இயல்புகளில் உள்ளடங்கியவை. 'இன்னும் நேரம் இருக்கிறது, இன்னும் நேரம் இருக்கிறது என்று அது தாமத்தில் முடிவதும்; கடைசி நேரத்தில் கஷ்டப்பட முடியாது நேரம் கிடைக்கும் போது ஒரு நடவடிக்கையை முடித்து விட வேண்டும்' என்று முன்கூட்டியே செய்வதும் மனித இயல்பென்னும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன.

தாமதம் திரும்பவும் தொடரக் கூடாது என்று கொஞ்சம் தண்டிக்கப்படுவதும், முன்னெச்சரிக்கையை கைவிட்டுவிடக்கூடாது என்று அது தட்டிக்கொடுக்கப்படுவதும் இயல்பே. இந்த இயல்பு வருமான வரி விஷயத்திலும் நடக்கிறது. பண பரிவர்த்தனை நடவடிக்கையான வரி செலுத்தும் நிகழ்வில் இந்த சுட்டிக்காட்டலும், தட்டிக்கொடுத்தலும் "வட்டி" என்ற பெயரில் நடைபெறுகிறது. வருமான வரித்துறை செலுத்த வேண்டிய வரியை தாமதமாக செலுத்துபவர்களுக்கு வட்டி விதிக்கிறது, முன்னெச்சரிக்கையாக செயல்பட்டவர்களுக்கு வட்டி வழங்குகிறது.

சரி, எப்போது எல்லாம் வருமான வரித்துறை வட்டி வசூலிக்கிறது. எப்போது எல்லாம் வரியை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு வட்டி கொடுக்கிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி...

வருமான வரித் துறையும் வட்டியும்: எப்போது வருமான வரித் துறை வட்டி வசூல் செய்யும், எப்போதெல்லாம் வட்டி கொடுக்கும் என்பதை இப்போது நாம் பார்க்கலாம். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என்றாலும் ஒரு புரிதலுக்காக, வரி செலுத்துபவர் ஒருவர் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்த தவறியிருந்தால் அதனை வட்டியுடன் கட்ட வேண்டியது இருக்கும். அதேபோல வருமான வரித் துறை வரிசெலுத்துபவருக்கு பணம் தரவேண்டியது இருந்தால் அதற்கு குறிப்பிட்ட அளவு வட்டி கணக்கிட்டு மொத்த தொகையை திருப்பிச் செலுத்தும். இது தான் விஷயம் என்றாலும் என்னென்ன வகையில் வட்டி வசூலிக்கப்படுகிறது என்பதை அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.

இரண்டு மூன்று விதங்களில் வருமான வரித்துறையில் வட்டி வசூலிக்கப்படுகின்றது. ஒன்று, வரி செலுத்துபவர் வருமான வரித் தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வரித் தாக்கல் செய்யவில்லை என்ற போது வட்டி வசூலிக்கப்படும். உதாரணமாக, தனிநபர் தனது வருமான வரித் தாக்கலை ஜூலை 31-க்குள் செய்திருக்க வேண்டும். ஆனால் வரிசெலுத்துபவர் டிசம்பர் மாதம் தனது வரித் தாக்கலை செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்நிலையில், நான்கு மாதம் தாமதமாக வரித் தாக்கல் செய்ததற்கு வருமான வரித்துறை வட்டி வசூல் செய்யும். எவ்வளவு வட்டி வசூலிக்கும் என்றால், மாதம் ஒன்றுக்கு 1 சதவீதம் வட்டியாக வசூல் செய்யும்.

234 (A) வட்டி: இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம். வரி செலுத்துபவர் வரித் தாக்கல் செய்யும் போதே அவரது தாமதத்திற்கு வட்டிக் கணக்கிட்டு அந்தத் தொகையையும் சேர்த்து தாக்கல் செய்திருந்தால் சிக்கல் எதுவும் இல்லை. அப்படி இல்லாமல், வருமானத்திற்கான வரியை மட்டும் கட்டியிருந்தால், வருமான வரித் துறை தாமதத்திற்கான வட்டித் தொகையைக் கட்டச் சொல்லி டிமாண்ட் நோட்டீஸ் அனுப்பும். இந்த வட்டிக்கு பெயர் 234 (A),குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரித் தாக்கல் செய்யாமல் தாமதமாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதால் வசூலிக்கப்படுகிறது.

இரண்டாவதாக, 234 (B) மற்றும் (C) இருக்கிறது. அது என்னவென்றால் அட்வான்ஸ் டாக்ஸ் அல்லது முன்கூட்டியே வரி செலுத்துதல் குறித்தது. அதாவது வரி செலுத்தும் தனிநபர் ஒருவர் குறிப்பிட்ட நிதியாண்டில், அவரது வருமானங்கள், வரி விலக்குகள், கழிவுகளைக் கணக்கிட்டு, மீதமுள்ள தொகைதக்கான வரி எவ்வளவு என்று கணக்கிட்டு அதனைச் செலுத்திய பின்னர் தனது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வார். இது ஒரு நடைமுறை.

முன் வரி செலுத்துதல்: ஒருவேளை வரி செலுத்துபவர் ஆண்டுக்கு ரூ.10,000-க்கும் அதிகமாக வரி செலுத்த வேண்டியவராக இருக்கிறார் என்றால், அவர் தனது வரித் தொகையை வரி கணக்கு தாக்கல் செய்யும் போது செலுத்தாமல், வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டும். இதனையே அட்வான்ஸ் டாக்ஸ் என்று கூறுகின்றனர். முன்கூட்டியே செலுத்த வேண்டிய வரித் தொகையையும் மொத்தமாக செலுத்தாமல் தவணை முறையில் செலுத்த வேண்டும். இதற்காக வருமான வரித் துறை நான்கு தவணைத் தேதி மற்றும் வசதிகளை வைத்திருக்கிறது.

வரி செலுத்துபவர் முன்கூட்டி செலுத்தும் வரியினை ஜூன் 15, செப்டம்பர் 15, டிசம்பர் 15 மற்றும் மார்ச் 15 தேதி ஆகிய தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். இதில் முதல் தவணையில் மொத்த வரியில் 15 சதவீத தொகையும், இரண்டாவது தவணையில் வரித்தொகையில் 45 சதவீதமும், மூன்றாவது தவணையில் வரித்தொகையில் 75 சதவீதமும், கடைசி தவணையில் முழுத் தொகையினையும் செலுத்தி இருக்கவேண்டும். இதில் முன்கூட்டியே வரி செலுத்திவிட்டதால் வரி தாக்கல் செய்யும் போது வரி கட்டத் தேவையில்லை.

இதற்கிடையில், முன் கூட்டியே வரி செலுத்த வேண்டியவர் தனது வரியைச் செலுத்த தவறியிருந்தால், செலுத்தப்படாத வருமான வரித் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும். இப்போதும் செலுத்த வேண்டிய மொத்த வரித் தொகையில் 1 சதவீதம் வட்டியாக வசூலிக்கப்படும். முன்கூட்டியே செலுத்த வேண்டிய வரி தாமதமாக செலுத்தப்பட்டால், 234(B) மற்றும் (C) வரி வசூலிக்கப்படும். இதில் 234 (B) மொத்த தவணையும் செலுத்தப்படாததற்கான வட்டி. 234(C) ஏதாவது சில தவணைகள் செலுத்தப்படாததற்கான வட்டியாகும்.

220 (2) வட்டி: வரி செலுத்துபவர் தனது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து அந்தாண்டுக்கான வரி செலுத்தி விட்டார். அவரது கணக்கை மதிப்பீடு செய்யும் போது அந்த நபர் கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என்பது தெரிய வருகிறது. அப்போது வருமான வரித்துறை அவருக்கு, கூடுதல் வரித்தொகையைச் செலுத்தும்படி டிமாண்ட நோட்டீஸ் அனுப்பும். வரி செலுத்துபவர் டிமாண்ட் நோட்டீஸ் கிடைத்த 30 நாட்களுக்கு உள்ளோ அல்லது மதிப்பீட்டு அதிகாரி குறிப்பிட்டிருக்கும் நாளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால் அவருக்கு 220(2) வட்டி விதிக்கப்படும். செலுத்தப்பட வேண்டிய வரித் தொகைக்கு மாதத்திற்கு 1 சதவீதம் வட்டியாக வசூலிக்கப்படும்.

வருமான வரித் துறை தரும் வட்டி: வரி செலுத்துபவர்களிடம் வட்டி வசூலிப்பது போலவே, வருமான வரித்துறையும் வரி செலுத்துபவர்களுக்கு வட்டி வழங்குகிறது. அதாவது வரி செலுத்துபவர் தனது வருமானம் மற்றும் அதற்கான வரியைக் கணக்கிட்டு வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வார்.

அவரது கணக்கு மதிப்பீடு செய்யப்படும் போது அவர் அதிகமாக வரி செலுத்தியது தெரியவந்தால் வருமான வரித்துறை அந்த கூடுதல் தொகையை வரி செலுத்துபவருக்கு திருப்பிக் கொடுத்து விடும். அப்போது கூடுதல் தொகையை மட்டும் ரீ ஃபண்ட் செய்யாமல் அதற்கு வட்டியும் சேர்த்து திருப்பிச் செலுத்தும். இந்த வட்டிக்கு 244(A) என்று பெயர். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது வரி செலுத்துபவர் எந்த தேதியில் கூடுதல் தொகையைச் செலுத்தினாரோ அந்த தேதியில் வட்டி கணக்கிடப்படாது.

மாறாக அவரது தொகை திருப்பி அனுப்பப்படும் நிதியாண்டின் முதல் மாதத்தில் இருந்து தொகை செலுத்தப்படும் மாதம் வரையில் வட்டி கணக்கிடப்பட்டு வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்படும். வரிசெலுத்துபவருக்கு ரீ ஃபண்ட் ஏதாவது இருக்கும் பட்சத்தில் அதை அவர் கேட்க வேண்டிய தேவையே இல்லை, வருமான வரித்துறை அந்த தொகையை கட்டாயம், வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விடும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in