

சென்னை: உள்நாட்டு சவால்களை வெற்றி கொண்டால் இந்தியாவால் உலகளாவிய பொருளாதார கட்டமைப்பை வடிவமைக்க முடியும் என்று மத்திய அரசின் நிதி செயலாளர் டி.வி.சோமநாதன் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற 16-வது சிட்டி யூனியன் வங்கி வி.நாராயணன் நினைவு சொற்பொழிவை நிகழ்த்திய சோமநாதன், இந்தியா சர்வதேச சூரிய சக்தி கூட்டணிக்கு தலைமையேற்று செயல்படுவதையும், யுபிஐ எனப்படும் வங்கிகளுக்கான அடையாள எண் வழங்கும் முறையை வெற்றிகரமாக செயல்படுத்தியதையும் குறிப்பிட்டார்.
நிதிப் பற்றாக்குறை, பொது செலவினங்களின் தரம், வரி மிதப்புத் தன்மை, மானிய சீர்திருத்தம் போன்ற உள்நாட்டு சவால்களை சரிசெய்தல் அவசியம் என்றும், நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வந்தால், மக்களின் சேமிப்பு உயரும் நிலை உருவாகும் என்றும் கூறினார்.
இந்திய மக்கள் மற்றும் அனைத்து அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு அமெரிக்காவில் உள்ளது போன்ற வணிக மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம், ஜப்பானின் தரம் மற்றும் பணியிட நெறிமுறைகள், ஜெர்மனியின் உற்பத்தித் திறன், ஸ்கான்டிநேவியாவின் தரமான வாழ்க்கை முறை ஆகியவற்றை நம் நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வைத்யசுப்ரமணியம் வரவேற்புரையில், கல்வி நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார கட்டமைப்புக்கு ஆற்றும் பங்கை கருத்தில்கொள்ள வேண்டும் என நிதிச் செயலாளரை கேட்டுக்கொண்டார்.
சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.காமகோடி நன்றி உரையாற்றினார்.