Published : 12 Jun 2022 07:28 AM
Last Updated : 12 Jun 2022 07:28 AM
சென்னை: இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.9,860 கோடி முதலீடு செய்வதாக மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.9,860 கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. கொச்சியில் சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் வட்ட மேஜை கூட்டத்தில் மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸின் இந்தியா ஆபரேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் ஓ.ஆஷார் ஆகியோர் இணைந்து இதை அறிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கேரள தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவ் ஆகியோர் உடன் இருந்தனர். மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், கருவூலம் மற்றும் புல்லியன் பிரிவு தலைவர் திலீப் நாராயணனும் பங்கேற்றார்.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம், அதன் ‘மேக் இன் இந்தியா’,‘மார்க்கெட் டு தி வேர்ல்டு’ முயற்சியை அதிகரிப்பதற்காக சமீபகாலமாக அதன் முதலீடுகளை இரட்டிப்பாக்கி வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் 500 புதிய ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் சுமார் 11,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தேசிய தொழில்துறை காரிடார் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக முதலீட்டாளர்களின் வட்ட மேஜை மாநாடு நடத்தப்பட்டது. மத்திய அரசின் லட்சியமான ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிப்பதிலும், அதன் விரிவாக்கத் திட்டங்கள் மூலம் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முன்னுதாரணமான முயற்சிகளை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டினார். இந்த விஷயத்தில் நிறுவனத்தின் புதிய முயற்சிகளுக்கு மத்தியஅரசு முழு ஆதரவளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். இந்நிறுவனம் நடப்பு நிதிஆண்டில் ரூ.45,000 கோடி வர்த்தகத்தை இலக்காக கொண்டுள்ளது. லாபத்தில் 5% சமூக நோக்கங்களுக்காக ஒதுக்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT