

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 70 லட்சம் டன்னாக இருக்கும் என்று ஐ.நாவின் உணவு, வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா நடப்பு நிதி ஆண்டில் 1 கோடி டன் அளவில் கோதுமை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவந்தது. இந்நிலையில் சென்ற மாதம் உள்நாட்டில் கோதுமை விலை அதிகரிக்கத் தொடங்கியது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவிலும் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையெடுத்து மத்திய அரசு கடந்த மாதம் 13-ம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. எனினும், தடை அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், தடைக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி ஒப்பந்தம், உணவுப் பாதுகாப்பின் பொருட்டு செய்யப்படும் ஏற்றுமதி உள்ளிட்ட ஏற்றுமதியின் மூலம் நடப்பு ஆண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 70 லட்சம் டன்னாக இருக்கும் அவ்வமைப்பு கணித்துள்ளது.