

புதுடெல்லி: யுபிஐ (Unified Payment Interface) பயனர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை யுபிஐ கணக்குகளுடன் லிங்க் செய்து கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ளார். 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது இந்திய ரிசர்வ் வங்கி. மறுபக்கம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும், வணிகர்களுக்கும் டிஜிட்டல் முறையில் பணம் அனுப்பவும், பெறவும் உதவும் யுபிஐ வசதியை வடிவமைத்தது நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா. இது இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு பிரிவு.
போன்பே, கூகுள் பே, அமேசான் பே, பீம் (BHIM) என டிஜிட்டல் முறையில் இன்ஸ்டான்டாக பணம் அனுப்பவும், பெறவும் உதவும் செயலிகள் யுபிஐ மூலமாக இயங்குகின்றன. இந்தியா மட்டுமல்லாது பூட்டான், நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் யுபிஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. யுபிஐ கணக்குகளில் டெபிட் கார்டுகளை லிங்க் செய்துள்ள பயனர்கள் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில், இனி கிரெடிட் கார்டுகளை யுபிஐ கணக்குடன் பயனர்கள் லிங்க் செய்து பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. இருந்தாலும் இப்போதைக்கு ரூபே கார்டுகளை கொண்டிருப்பவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீசா, மாஸ்டர் கார்டு, மேஸ்ட்ரோ போன்ற கார்டுகளை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை இந்தியாவில் பல்வேறு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கார்டுகளை வரும் நாட்களில் இந்த வசதி அறிமுகமாகும் என தெரிகிறது.
கிரெடிட் கார்டுகளை யுபிஐ கணக்குகளுடன் லிங்க் செய்வதன் மூலம் பயனர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கப் பெறும். டிஜிட்டல் வழியில் பணம் செலுத்தும் முறையை மேம்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.