

நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையின்படி இன்ஃபோசிஸில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை சரிந்திருக்கிறது. 2014-15-ம் ஆண்டில் 113 பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் இருந்தது. ஆனால் 2015-16-ம் நிதி ஆண்டில் 54 ஆக சரிந்திருக்கிறது.
2015-ம் ஆண்டில் ஒரு முறை போனஸ் அதிகமாக கொடுக்கப்பட்டதால் அப்போது அதிக கோடீஸ்வரர்கள் இருந்தனர் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.
நடப்பு நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் 6 நபர்கள் வெளியேறி விட்டதாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக தலைமை நிதி அதிகாரி ராஜீவ் பன்சால் வெளியேறி இருக்கிறார்.
கடந்த நிதி ஆண்டில் ஆண்டுக்கு 60 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் பணியாளர்களின் எண் ணிக்கை 260 ஆக உயர்ந்திருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் 200 நபர்கள் ஆண்டுக்கு 60 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினர். மேலும் 60 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கும் 70 பணியாளர்களும் வெளியேறி இருக்கின்றனர்.
மார்ச் 31 நிலவரப்படி 1.94 லட்சம் பணியாளர்கள் உள்ளனர்.
விஷால் சிக்கா சம்பளம் ரூ.48.7 கோடி
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா, கடந்த நிதி ஆண்டில் 48.70 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறார். விஷால் சிக்கா கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். 2014-15-ம் நிதி ஆண்டில் அவரது சம்பளம் 4.56 கோடி ரூபாயாக இருந்தது. அதை விட 10 மடங்கு கூடுதல் சம்பளமாக கடந்த நிதி ஆண்டில் பெற்றிருக்கிறார். இது பங்குகள், போனஸ் மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்ததாகும்.
இவரது அடிப்படை சம்பளம் 5.96 கோடி ரூபாய். 33 லட்ச ரூபாய் ஓய்வுகால நிதி ஆகும். மீதமுள்ள 42.44 கோடி ரூபாயும் போனஸ் மற்றும் ஊக்க தொகை ஆகும். தலைமை செயல்பாட்டு அதி காரி யூபி பிரவீண் ராவின் சம்பளம் 52.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் 9.28 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறார்.
நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் விஷால் சிக்காவின் பதவிக் காலம் இரு வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. வரும் 2021-ம் வரை இந்த பதவியில் சிக்கா இருப்பார். விஷால் சிக்காவுக்கு இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த இலக்குகளை அடையாத பட்சத்தில் அவருக்கு ஆண்டுக்கு 30 லட்சம் டாலர்கள் வரைக்கும் குறைக்கப்படும்.
வரும் 2020-ம் ஆண்டுக்குள் நிறுவனத்தின் வருமானத்தை 2,000 கோடி டாலராக உயர்த்த சிக்கா திட்டமிட்டிருக்கிறார். தற்போது 950 கோடி டாலர் அளவுக்கு நிறுவனத்தின் வருமானம் உள்ளது.