

முன்பெல்லாம் ஒரு தொழில் தொடங்குவதோ அல்லது வீடு கட்டுவதோ பெரிய விஷயங்களாக இருந்தன. வசதி உள்ளவர்கள் மட்டுமே தொழில் தொடங்க, வீடுகட்ட முடியும் என்ற நிலை இருந்தது. இந்த எல்லாத் தடைகளையும் "வங்கிக்கடன்" என்ற விஷயம் உடைத்திருக்கிறது. சரியான வழிமுறையில் உரிய ஆவணங்களுடன் கடனுக்காக வங்கியை அணுகினால், அந்த வாடிக்கையாளிரின் தேவையை விதிகளுக்குட்பட்டு நிறைவேற்றித்தர தயாராகவே இருக்கிறது வங்கி.
எல்லாம் சரி தான் கடன் வாங்கப்போகும்போது வங்கி கேட்கும் சில கேள்விகள் புரிவதில்லை என்று சொல்லும் வாடிக்கையாளர்களுக்காக வங்கிகளில் பயன்படுத்தப்படும் மொழிகள் குறித்து விளக்குகிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொதுமேலாளருமான "குறள் இனிது" சோம.வீரப்பன். தொழில் கடன்களின் போது கேட்கப்படும் "ஒர்க்கிங் கேப்பிட்டல்", கொலாட்ரல் செக்யூரிட்டிக்கான "லீகல் ஒப்பீனியன்" குறித்து இங்கே தெளிவுபடுத்துகிறார்...
வங்கிகளில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகளில் ஒன்று பணி மூலதனம் என்று சொல்லப்படும் ஒர்க்கிங் கேப்பிட்டல் (Working Capital). அப்படி என்றால் வேறு ஏதாவது மூலதனம் இருக்கிறதா என்ற கேள்வி இயல்பாகவே வரும். ஆமாம் இருக்கிறது. அது ஃபிக்சட் கேப்பிட்டல் (Fixed Capital) எனப்படும் நிரந்தர மூலதனம். அது என்ன பணி மூலதனம்? நிரந்தர மூலதனம்? இதற்கு என்ன அர்த்தம்? - சரி, பணி மூலதனத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் முதலில் நிரந்தர மூலதனம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவது நல்லது.
இரண்டு மூலதனம்: ஒரு வியாபாரத்தில் போடப்பட்ட மூலதனம் என்னவாகப் போடப்பட்டதோ, அதே நிலையில் மாறாமல் இருந்தால் அதற்கு நிரந்தர மூலதனம் அல்லது ஃபிக்சட் கேப்பிட்டல் என்று பெயர். வியாபாரத்தில் போடப்பட்ட மூலதனம் விற்பனை மூலம் பணமாக மாறுவது பணி மூலதனம் அல்லது ஒர்க்கிங் கேப்பிட்டல் என்று பெயர். உதாரணமாக, துணிக்கடை நடத்தி வரும் ஒருவர், கடையில் விற்பனைக்காக துணிகள் வாங்கி வைத்திருப்பார். அதேபோல, கல்லாப்பெட்டியில் கையிருப்பாக கொஞ்சம் பணமும் வைத்திருக்கலாம். இவை வியாபாரத்திற்கான மூலதனம். அதே நபர், வாடிக்கையாளரின் வசதிக்காக கடையில் ஏசி வசதி செய்திருக்கலாம். வியாபாரத் தேவைக்காக கணினி, மேஜை, நாற்காலி, சரக்குகளை இடம் மாற்றுவதற்கு வாகனம் வாங்கி வைத்திருக்கலாம், இவைகளும் வியாபாரத்திற்கான மூலதனங்களே.
மாறும் மூலதனம்: இவைகளில் துணிகள் விற்பனை செய்யப்பட்டு பணமாக மாறும். அதே போல, கல்லாவில் உள்ள பணம் கொள்முதல் மூலமாக மீண்டும் சரக்குகளாக மாறும். இதில் பொருள்கள் கடனுக்கும் விற்பனை செய்யப்படலாம். அப்போது விற்பனை பொருள் ரொக்கமாக இல்லாமல் கடனாளியாக மாறியிருக்கும். இப்படி வியாபாரத்தில் போடப்பட்ட மூலதனமானது, பொருள் - பணம் - கடனாளி என்று வடிவம் மாறிக்கொண்டிருந்தால் அதனை பணி மூலதனம் அல்லது ஒர்க்கிங் கேப்பிடல் என்று சொல்வர்கள். அப்படி இல்லாமல் மூலதனம் வடிவம் ஏதும் மாறாமல் அப்படியே இருந்தால் அது நிரந்தர மூலதனம் அல்லது ஃபிக்சட் கேப்பிட்டல். கடையில் உள்ள மேஜை, ஏசி, கணினி, வாகனம் போன்றவை விற்பனை செய்யப்பட்டு பணமாகவோ, கடனாளியாகவே மாறப்போவதில்லை அதனால் அவை நிரந்தர மூலதனம்.
கரன்ட் அசட்ஸ்: இந்த வித்தியாசத்தை இன்னும் எளிமையாக புரிந்து கொள்வதற்காக கணக்குபதிவியலில் ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பொருள் ஒரு வருடத்திற்குள் விற்பனை செய்யப்பட்டு பணமாக மாற்றப்படுகிறதோ அவை பணி மூலதனம் எனப்படும். இந்த பணி மூலதனத்தில் முக்கியமாக மூன்று பகுதிகளை நாம் சொல்ல வேண்டும் ஒன்று பங்குகள், கடனாளிகள் மற்றும் ரொக்க கையிருப்பு, தொழிலாளர்களுக்கு கொடுத்த முன்பணம் போன்ற பிற நடப்புச் சொத்துகள் இதில் அடங்கும். இவை எல்லாம் சேர்ந்தது நடப்பு சொத்து அல்லது கரன்ட் அசட்ஸ் (Current Assets) என்று பெயர்.
அதே போல ஒரு வருடத்திற்குள் திருப்பி கொடுக்கப்பட வேண்டிய கடன்கள் அனைத்தும் கரன்ட் லையபிலிட்டி (Current Liability) என்று அழைக்கப்படும். உதாரணமாக ஒருவர் ரூ.10 லட்சத்திற்கு பொருட்கள் இருப்பு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ரூ.7.5 லட்சத்திற்கு கடனாளிகள் இருக்கிறார்கள். அதாவது கடனுக்கு விற்பனை செய்திருக்கிறார். மீதம் ரூ.2.5 லட்சத்திற்கு ரொக்கம் இருக்கிறது. அவரிடம் ரூ.20 லட்சம் கரண்ட் அசட்ஸ் இருக்கிறது. அதே நபர், ரூ.5 லட்சத்திற்கு கடனில் பொருள்கள் வாங்கிருந்தால் அது கரண்ட் லையபிலிட்டி. வங்கியில் ரூ.10 லட்சம் கடனுக்கு வாங்கியிருந்தால் அது கரண்ட் லையபிலிட்டி, கேஷ்கிரெடிட், ஓவர் டிராஃப்ட் எப்போதுமே கரண்ட் லையபிலிட்டி தான்.
இப்போது அவரின் கரன்ட் அசட், ரூ.20 லட்சம், அவரது கரண்ட் லையபிலிட்டி ரூ.15 லட்சம். அவருயை கரண்ட் ரேஷியோ 1 இஸ் டு 3. வங்கிகளில் இதனை ஒர்கிங் கேபிட்டல் என்று சொல்வார்கள். இதில் நெட் ஒர்க்கிங் கேபிட்டல் என்ற ஒன்று உண்டு. அதாவது நடப்பு சொத்துக்கும், நடப்பு கடனுக்கும் உள்ள வித்தியாசமே "நெட் ஒர்க்கிங் கேப்பிடல்" (Net Working Capital). இது எவ்வளவுக்கு எவ்வளவு அதிகாமக இருக்கிறதோ அவ்வளவு நல்லது.
லீகல் ஒப்பீனியன் (Legal Opinion): வங்கியில் கடன் கேட்டுச் செல்லும் போது, கடனுக்கு ஈடாக கொலாட்ரல் செக்யூரிட்டி கேட்பார்கள் என்பது நமக்குத் தெரியும். அப்படி கேட்கும் போது சிலர் தங்களிடமுள்ள விவசாய நிலத்தை கொலாட்ரல் செக்யூரிட்டியாக தருவதாக சொல்லலாம். அதை வங்கிகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் சர்ஃபேசி என்கிற சட்டத்தின் கீழ் அதனை இணைக்க முடியாது என்பதால் விவசாய நிலங்களை வங்கிகள் கொலாட்ரல் செக்யூரிட்டியாக விரும்புவதில்லை.
அதேபோல கிராமங்களில் இருக்கும் வீடுகளையும் வங்கிகள் கொலாட்ரல் செக்யூரிட்டியாக விரும்புவது இல்லை. வங்கிள் கொலாட்ரல் செக்யூரிட்டி கேட்பதன் நோக்கமே, கடன்பெற்றவரால் ஒருவேளை கடனைத் திருப்பி செலுத்த முடியாவிட்டால், கடனுக்கு ஈடாக வைக்கப்பட்ட சொத்தை விற்று பணத்தை கடன் தொகையை வங்கி பெற்றுக்கொள்ளும். அப்படி கொலாட்ரலாக தரப்படும் அசையா சொத்து வில்லங்கம் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்காக வங்கிகள் லீகல் ஒப்பீனியன் கேட்கும். அதாவது கடனுக்கு அடமானமாக வைக்கப்படும் சொத்து கடன் வாங்குபவரின் பெயரில் தான் இருக்கிறதா, அந்த சொத்தை விற்கவேண்டிய சூழல் வரும்போது பிரச்சினை ஏதும் வருமா, அந்த சொத்தை விற்க முடியுமா போன்ற விபரங்களை வங்கி சரிபார்ப்பதற்கு பெயர் தான் லீகல் ஒப்பீனியன்.
இதில் முக்கியமான ஒன்று வங்கிக்கடன் வாங்கும் போது சொந்த சொத்தையோ, சொந்தக்காரர்களின் சொத்தையோ கடனுக்கு ஈடாக தரலாம். சிலர் மூன்றாவது நபரின் சொத்தை அடமானமாக தரும் சம்பவங்களும் நடைபெறுவது உண்டு. இதனால் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம்.
அங்கீகரிக்கப்பட்ட வக்கீல்: வங்கிகள் அசையா சொத்துக்களை அடமானமாக பெரும்போது இரண்டு விஷயங்களை வாடிக்கையாளரிடம் கேட்கும். ஒன்று லீகல் ஒப்பீனியன், இரண்டாவது வேல்யூயேஷன் ரிப்போர்ட். இந்த லீகல் ஒப்பீனியன், டைட்டில் வெரிஃபிகேசன் ரிப்போர்ட், வக்கீல் ரிப்போர்ட் என்று அழைக்கப்படுகிறது. வக்கீல் ரிப்போர்ட்டை பொறுத்தவரையில் வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், வாடிக்கையாளருக்கு தெரிந்த அல்லது வேறு ஏதாவது வக்கீலிடம் ஒப்பீனியன் வாங்கி விட முடியாது. வங்கிளால் அங்கீகரிக்கப்பட்ட வக்கீல்களிடம் தான் ஒப்பீனியன் வாங்க முடியும்.
வில்லங்கச் சான்று: வக்கீல்கள் கேட்பது: லீகல் ஒப்பீனியன் வாங்கச்செல்லும் போது வக்கீல்கள் என்னென்ன எதிர்பார்ப்பார்கள் அல்லது அவர்களுக்கு என்னென்ன ஆவணங்கள் நாம் கொடுக்க வேண்டும். முதலாவதாக, சொத்தினுடைய மூலப்பத்திரம் இருந்தால் அதனைக் கொடுக்க வேண்டும். இவை தவிர, 12-லிருந்து 30 வருடம் வரை சொத்து யாரிடமெல்லாம் கைமாறி வந்திருக்கிறது, உங்களுக்கு முன்பு யாரிடம் இருந்தது. அதற்கு முன்பு யாரிடம் இருந்தது போன்ற விபரங்கள் குறித்த "செயின் ஆஃப் டாக்குமெண்ட்" கேட்பார்கள். அதன் பின்னர் அந்த வக்கீல் சொத்து குறித்து வில்லங்கம் ஏதும் இருக்கிறதா என்று ஆன்லைன் மூலமாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்கச் சான்று போட்டுப் பார்ப்பார்.
ஒருவேளை அடமான சொத்து வீடாகவோ, கட்டடமாகவோ இருந்தால் அதற்கான ப்ளான் அப்ரூவல், கடைசியாக வரி செலுத்தியதற்கான ரசீது மற்றும் சொத்து தொடர்பான இன்னும் பிற ஆவணங்கள் கொடுக்க வேண்டும். இவைகளை எல்லாம் வக்கீல் சரி பார்த்த பின்னர் தனது அறிக்கையை தருவார். தற்போது பல வங்கிகளில், லீகல் ஒப்பீனியன் வழங்கும் வக்கீல் சம்மந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று, அங்கீகரிக்கும் ஆவணங்களுடன் வாடிக்கையாளர் வழங்கிய ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்து அறிக்கை வழங்குவார்.
அந்த அறிக்கையின் இறுதியில், "சோ அண்ட் சோ ஹேஸ் எ க்ளியர் மார்க்கட்டபிள் டைட்டில்" அதாவது வாடிக்கையாளரால் இந்த சொத்தை விற்க வாங்க முடியும். அதனால் இவரால் அந்த சொத்தினை அடமானமாகவும் வைக்க முடியும் என்று எழுதியிருக்கும். 30 வருடங்களுக்கான ஆவணங்களை கேட்கும் போது நமக்கு எரிச்சலாக கூட வரலாம். ஆனால் அது நமது சொத்து குறித்த ஆவணங்களை சேரித்து பாதுக்காக்கவும் உதவும். இதுவும் நம்மைதானே.