Published : 28 May 2016 08:17 PM
Last Updated : 28 May 2016 08:17 PM

6 நாள் ஜப்பான் பயணம்: அந்நிய முதலீட்டாளர்களை சந்திக்கிறார் ஜேட்லி

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 6 நாள் பயணமாக நேற்று ஜப்பான் சென்றார். அங்கு முதலீட்டார்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார். ஞாயிறு காலை டோக்கியோ செல்லும் அவர் சாப்ட்பேங்க் தலைவர் மசாயோஷி சானை சந்தித்து இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றி கலந்துரையாடுகிறார்.

இரண்டாம் நாளான திங்கள்கிழமையன்று நிக்கி நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் ஆசியாவின் எதிர்காலம் என்னும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்கிறார். அதே தினத்தில் ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே-யைச் சந்திக்க இருக்கிறார். அதே நிகழ்ச்சியில் ஜப்பானின் பொருளாதாரம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களுடனும் உரையாடுகிறார்.

மே 31-ம் தேதி சுசூகி மோட்டார் கார்ப்பரேஷனின் தலைவர் ஒசாமு சுசூகியை சந்திக்க இருக்கிறார். அன்றைய தினம் ஜப்பானின் பென்ஷன் பண்ட் தலைவர்கள் உள்ளிட்ட நிறுவன முதலீட்டாளர்களை சந்திக்க இருக்கிறார்.

ஜூன் 1-ம் தேதி இந்திய-ஜப்பான் தொழில் கமிட்டி ஏற்பாடு செய்திருக்கும் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் சந்தித்து பேச இருக்கிறார். அன்றைய தினம் ஒசாகா செல்லும் அவர், அடுத்த நாள் ஒசாகா பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியல் பொருளாதார மாற்றங்கள் குறித்து உரையாற்றுகிறார். அன்றைய தினம் `மேக் இன் இந்தியா’ சார்பான கருத்தரங்கில் கலந்துகொள்கிறார். தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்திக்க இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் இந்தியத் தொழிலக கூட்டமைப்பை சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார்.

ஜேட்லியின் ஜப்பான் பயணத்துக்காக உயர் நிலை தலைமைச் செயல் அதிகாரிகளின் குழுவை ஜப்பானுக்கு அனுப்ப உள்ளதாக சி.ஐ.ஐ. தெரிவித்திருக்கிறது.

ஜூன் 3-ம் தேதி மீண்டும் டோக்யோ செல்லும் ஜேட்லி அங்கு சுமிடோமோ மிட்ஷு பேங்கிங்க் கார்ப் மற்றும் ஈஸ்ட் ஸ்பிரிங் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அதிகாரிகளை சந்திக்க இருக்கிறார். ஜூன் 4-ம் தேதி இந்தியாவுக்கு திரும்பும் ஜேட்லி அன்று மாலையே புதுடெல்லி வந்தடைகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x