

புதுடெல்லி: கவுதம் அதானியை பின்னுக்குத் தள்ளி மீண்டும் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக ஆகியுள்ளார் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் வரலாறு காணாத வகையில் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருவதே இதற்குக் காரணம்.
உலக பணக்காரர்களில் டாப் 10 இடங்களில் இருப்பவர்களில் இருவர் இந்தியர்கள். அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி ஆகிய இருவரும் ஆசிய அளவிலும் முன்னணி வகிக்கின்றனர். சொல்லப்போனால், ஆசிய கண்டத்தின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பிடிப்பதில் இருவருக்கு இடையிலும் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், முகேஷ் அம்பானி இப்போது ஆசிய அளவில் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பிடித்துள்ளார். கடந்த பிப்ரவரியில் இந்த இடத்தை பிடித்திருந்தார் கவுதம் அதானி. இப்போது அவரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் அம்பானி. ப்ளூம்பெர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் தளத்தில் இது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ப்ளூம்பெர்க் ரியல் டைம் பில்லியனர் பட்டியலில், 99.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பாக கொண்டுள்ளார் அம்பானி. மறுப்பக்கம் 98.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை தன் சொத்து மதிப்பாக கொண்டுள்ளார் அதானி. அதுவே ஃபோர்ப்ஸ் தளத்தில் 104.4 மற்றும் 99.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை முறையே தங்களது சொத்து மதிப்பாக கொண்டுள்ளனர் அம்பானியும் அதானியும்.