

முதலீடு செய்யும் பணத்துக்கு போதிய பாதுகாப்பு இருப்பது அவசியம் என்பது எந்த ஒரு முதலீட்டாளர்களின் அடிப்படையான எண்ணம். இதன் காரணமாக உலகம் முழுவதும் ரிஸ்க் இல்லாத முதலீடுகளில் எப்போதுமே அதிகமோனார் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் முதலில் இருப்து பிக்சட் டெபாசிட் திட்டம் எனப்படும் நிரந்தர வைப்புத் தொகை.
சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கும் வங்கிகள் வட்டி அளிக்கின்றன. எனினும் சேமிப்பு கணக்கில் பணத்தை விரும்பிய நேரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப பெறாலாம் என்பதால் அதற்கான வட்டி என்பது ரிசர்வ் வங்கி முடிவு செய்யும் அடிப்படை வட்டி விகிதமே வழங்கப்படும். அதுமட்டுமின்றி ரிசர்வ் வங்கி காலாண்டு ஒருமுறை வட்டி விகிதங்களை மாற்றும்போது சேமிப்பு கணக்குகளில் உள்ள தொகைக்கு வழங்கப்படும் வட்டியிலும் மாற்றம் ஏற்படும்.
பொதுவாக சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி மிகவும் குறைவாகும். பிக்சட் டெபாசிட் திட்டங்களில் குறிப்பிட்ட காலம் வரை பணத்தை திரும்ப பெற முடியாது என்பதால் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டித் தொகையை வங்கிகள் வழங்குகின்றன.
பிக்சட் டெபாசிட்களில் சந்தை அபாயம் இல்லை. நிரந்தர வருமானம் கிடைக்கும். ரிஸ்க் என்பது இல்லை. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ஏற்ற திட்டமாக இது பார்க்கப்படுகிறது. வயதான காலத்தில், திடீர் பணத் தேவை ஏற்படக்கூடிய நபர்களுக்கு ஏற்ற திட்டமாக பிக்சட் டெபாசிட் கருதப்படுகிறது.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்
நாட்கள் தொடங்கி மாதங்கள், ஆண்டுகள் என விரும்பிய காலத்துக்கு இதில் முதலீடு செய்யலாம். போதுவாக வங்கிகளிலேயே இந்த பிக்சட் டெபாசிட்கள் அதிகஅளவில் செய்யப்படுகிறது. வைப்பு காலத்துக்கு ஏற்ற வட்டி வழங்கப்படுகிறது.
நிலையான வைப்பு தொகை என்பது பண முதலீட்டு திட்டங்களில் ஒரு வகையாகும். இத்திட்டத்தின் கிழ், வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு தொகையாக வைக்க வேண்டும். முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது.
வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளாக நமது விருப்பதற்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம். ஒருவேளை, நிலையான வைப்புத்தொகையில் வைப்பு வைக்கப்பட்ட நிதியை முதிர்வு காலத்திற்கு முன்னரே வங்கியில் இருந்து திரும்ப பெற வேண்டுமென்றால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
முதிர்வு காலம் முடிந்த பின்னர், நாம் வைப்பு வைத்திருந்த நிதி வட்டியுடன் நமக்கு கிடைக்கும். இந்த வட்டியை நாம் முதிர்வு காலத்திற்கு முன்பே மாத மாதமும் பெற முடியும்.
வட்டியை மாதம் தோறும் பெறுவது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெறுவது, 6 மாதங்களுக்கு ஒருமுறை பெறுவது, ஆண்டுக்கு ஒருமுறை பெறுவது மற்றும் முதிர்வு காலம் முடிந்த பின்னர் பெறுவது என நமது விருப்பதற்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.
ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதம் தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டு அதற்கான பத்திரம் உங்களுக்கு வழங்கப்பட்ட பின்பு வட்டி விகிதங்கள் மாறினாலும் வழங்கப்படும் வட்டி மாறாது. எனவே வைப்புத்தொகையில் உத்தரவாதமான வருமானத்தை பெற முடியும். கால அடிப்படையில் அல்லது முதிர்வு காலத்திலும் வட்டியை பெறலாம்.
பிக்சட் டெபாசிட்டுகளுக்கு இன்சூரன்ஸ்
2 கோடி ரூபாய் நிதியை மட்டுமே பிக்சட் டெபாசிட்டில் ஒருவர் முதலீடு செய்ய முடியும். பிக்சட் டெபாசிட்டுகளுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பும் உள்ளது. அதாவது எந்தவொரு வங்கி திவாலானாலும் அதன் பாதகமான விளைவுகளில் இருந்து வைப்புத் தொகையாளர்களைப் பாதுகாப்பதே டெபாசிட் காப்பீடு திட்டத்தின் நோக்கமாகும்.
இதற்காக 1960-ம் ஆண்டு டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற அமைப்பு ரிசர்வ் வங்கியால் நிறுவப்பட்டது. 1962-ம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நடைமுறையில் உள்ளது. முதலில் வைப்புத் தொகை ரூ.1,500 வரையில் காப்பீடு வழங்கப்பட்டது. பின்னர் 1993, மே 1-ம் தேதி முதல் வரம்பு ரூ.1,00,000-ஆக இருந்தது. 2020-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி முதல் வைப்புத் தொகை காப்பீடு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே ஒரு வங்கியில் ஒருவர் எவ்வளவு தொகை பிக்சட் டெபாசிட்டில் வைத்திருந்தாலும் 5 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே இன்சூரன்ஸ் பாதுகாப்பு பெற முடியும். எனவே 5 லட்சத்துக்கு அதிகமான தொகையை பிக்சட் டெபாசிட் செய்பவர்கள் வெவ்வேறு வங்கிகளில் இதனை டெபாசிட் செய்வது சரியான நடவடிக்கை என நிதி ஆலோசகர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
புதுபிக்காவிட்டால் வட்டி குறையும்
நிலையான வைப்பு தொகை நிதியை முதிர்வு காலம் முடிந்த பின்னர் எடுக்காமல், மீண்டும் வைப்பு தொகை திட்டத்தில் வைப்பு வைத்து தொடரவும் செய்யலாம். இதன் மூலம் கூடுதல் வட்டி வருவாய் கிடைக்கும்.
பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டியும் வழங்குகின்றன. அரை சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரை கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. வங்கிகளை பொறுத்து இது மாறுபடுகிறது. சில வங்கிகளில் இந்த சலுகைகள் வழங்கப்படுவதில்லை.
வங்கி வாடிக்கையாளர்கள் வைப்புத் தொகை கணக்கிற்கான அவகாசம் முடியும் நிலையில் தானாகவே வங்கிகளில் புதுப்பித்துக் கொள்ளப்படும். அண்மையில் இந்த நடைமுறையை மாற்றி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி நிரந்தர வைப்புத் தொகை கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதன் அவகாசம் முடியும் தருவாயில் வங்கிகளுக்கு சென்று புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக தனியான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
அப்படி செய்தால் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி வழங்கப்படும். அதேநேரத்தில் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கத் தவறினால் அந்த வைப்புத் தொகைக்கான வட்டி சேமிப்பு கணக்குக்கான வட்டியாக குறைக்கப்படும். எனவே வைப்புத் தொகை முடிவடையும் காலத்தை சரியாக பார்த்து புதுபிக்க வேண்டும்.
வருமான வரி
பிக்சட் டெபாசிட் மூலம் பெறப்படும் வட்டி, வரிகளுக்கு உட்பட்டது. நமது ஆண்டு வருமானம், வருமான வரியின் எந்த வரனுக்குள் உட்பட்டதோ அதனுடன் நிலையான வைப்பு தொகையின் மூலம் பெறப்படும் வட்டியை சேர்த்து கணக்கிட்டு வரி விதிக்கப்படுகிறது. எனவே முன்கூட்டியே பான் கார்டு கணக்குடன் இணைபக்கப்பட வேண்டும். வருமான வரி செலுத்த வேண்டிய நிலையில் இல்லதாவர்கள் அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வங்கியில் செலுத்த வேண்டும்.
அதிக வட்டி தரும் நிறுவன டெபாசிட்
வங்கிகள் வழங்கும் வட்டியை விடவும் லாபம் கொடுக்கக் கூடிய லாபகரமான திட்டங்கள் பல உள்ளன. வங்கிகளில் மட்டுமல்லாமல் நிறுவனங்கள், கார்பரேட் நிறுவனங்களிலும் கூட வைப்புத் தொகை அல்லது பிக்சட் டெபாசிட் செய்ய முடியும்.
இது நிறுவன எப்டி அல்லது கார்ப்பரேட் எப்டி என்று அழைக்கப்படுகிறது. இது நிதி நிறுவனங்கள், வீட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பிற வகையான என்பிஎப்சி நிறுவனங்களில் முதலீடு செய்யும் பிக்சட் டெபாசிட் ஆகும். இதுபோன்ற நிறுவனங்கள் அதிகமான வட்டியை வழங்குகின்றன. வங்கி வட்டியை ஒப்பிட்டால் குறைவான காலத்துக்கே அதிகமான வட்டியை வழங்குகின்றன.
வங்கிகள் வழங்கும் பிக்சட் டெபாசிட் வட்டி, நிறுவனத்தின் நிலையான வைப்பு ஒப்பீட்டளவில் சிறந்தது. வங்கி வட்டியை பொறுத்தவரையில் ரிசர்வ் வங்கி மூலம் தீர்மானிக்கப்பட்ட வட்டி விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டியும் நிர்ணயிக்கப்படுகிறது.
நிறுவனங்களில் செய்யப்படும் பிக்சட் டெபாசிட்களை பொறுத்தவரையில் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்யலாம். எனினும் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஏனெனில் முதலீடு செய்த தொகைக்கு சரியான பாதுகாப்பு அவசியம் என்பதால் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஐசிஆர்ஏ, கிரிசில் போன்ற கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளால் அதிக பாதுகாப்பு மதிப்பீடு, அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான நிறுவனங்களை தேர்வு செய்யலாம். இதுமட்டுமின்றி அந்த நிறுவனங்களின் நிதி செயல்பாடு, வர்த்தகம் போன்றவற்றையும் கவனத்தில் கொண்டு முடிவு செய்யலாம்.
பொதுவாக மிகவும் பாதுகாப்பான முதலீடாக பிக்சட் டெபாசிட் திட்டம் கருதப்படுகிறது. நிலையான வைப்பு தொகை என்பது சேமிப்புகளை மிகவும் பாதுகாப்புடன் வளர்ப்பதற்கான வழி என்பதால் இந்த முதலீடுகளுக்கு எப்போதுமே முதலீட்டாளர்களிடம் ஆர்வம் உள்ளது.