

புதுடெல்லி: விமானத்தை தரையிறக்குவதில் விதிமுறைகளை பின்பற்றாததால் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி டெல்லியிலிருந்து இந்தூருக்கு இயக்கப்பட்ட இந்நிறுவன விமானத்தை இணை-பைலட் ஒருவர், பைலட்டின் கண்காணிப்பின் கீழ் இந்தூர் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார். ஆனால் இதற்கு முன்பு அவர் சிமுலேட்டர் பயிற்சியை பெறவில்லை எனத் தெரிகிறது. இந்த செயல் விமானத்தில் பயணித்த அனைவரது உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்க விதிமீறலாகும் என டிஜிசிஏ குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக விஸ்தாரா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘பைலட்டின் மேற்பார்வையில் விமானத்தை மேல் கிளப்புவது மற்றும் தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது அனுபவம் வாய்ந்த கேப்டன் கண்காணிப்பின் கீழ்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பைலட்கள் முன்பு பணிபுரிந்த நிறுவனங்களில் இத்தகைய விமானங்களுக்கான சிமுலேட்டரில் பயிற்சி பெற்றவர்களே. இருப்பினும் விஸ்தாரா நிறுவனம் சிமுலேட்டர் பயிற்சி அளிக்கவில்லை. இது மிகப் பெரிய விதிமீறலுக்கு வழிவகுத்துவிட்டது’’ என குறிப்பிட்டுள்ளது.