வங்கிக்கடன் | ஆடிட் பேலன்ஸ் ஷீட், எக்ஸ்க்ளூசிவ் டீலிங் - ஓர் அடிப்படை விளக்கம் 

வங்கிக்கடன் | ஆடிட் பேலன்ஸ் ஷீட், எக்ஸ்க்ளூசிவ் டீலிங் - ஓர் அடிப்படை விளக்கம் 

Published on

வங்கியில் கடன் கேட்டுச் செல்லும்போது வங்கியாளர்கள் பயன்படுத்தும் பல வங்கியியல் சார்ந்த வார்த்தைகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். அதோடு மட்டும் இல்லாமல் அந்த வார்த்தைகள் சார்ந்து கடைபிடிக்கப்படும் சில நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படுகின்றன என்று யோசிக்கவும் வைக்கும். தனிநபர் கடன், வாகனக்கடன் போன்றவற்றுக்கே இத்தனை கெடுபிடிகள் என்றால் தொழில் தொடங்குவதற்காக வழங்கப்படும் கடன்களுக்கு இன்னும் கூடுதல் நடைமுறைகளை வங்கிகள் பின்பற்றும்.

அப்படியான நடைமுறைகளில் "ஆடிட்டட் பேலன்ஸ் ஷீட்", "எக்ஸ்க்ளூசிவ் டீலிங்" என்பதும் அடக்கம். அப்படி என்றால் என்ன, அவை எந்த சூழ்நிலைகளில், எதற்காக வங்கிகளால் கேட்கப்படுகின்றன?

இது குறித்து விவரிக்கிறார் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொதுமேலாளரும், எழுத்தாளருமான "குறள் இனிது" சோம. வீரப்பன்...

ஆடிட்டட் பேலன்ஸ் ஷீட் ( Audited Balance Sheet): தொழில் நடத்துபவர்கள் வங்கியில் கடன் வாங்கச்செல்லும் போது, அதற்காக அவர்கள் நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு எனப்படும் "பேலன்ஸ் ஷீட்" - ஐ கொடுப்பார்கள். அப்போது வங்கி தரப்பிலிருந்து தணிக்கை செய்யப்பட்ட "ஆடிட்டட் பேலன்ஸ் ஷீட்" வேண்டும் என்று கேட்கப்படுவதுண்டு. தொழில்முனைவோரும், அவருடைய ஆடிட்டரிடம் சென்று ஆடிட்டட் பேலன்ஸ் கேட்பார். அதற்கு ஆடிட்டரும் கணக்கை தணிக்கை செய்யாமல் ஆடிட் பேலன்ஸ் ஷீட் தரமுடியாது என்று சொல்லி, அவகாசம் வேண்டும் என்று கேட்பார்.

இதுவரை எல்லாம் சரியே. ஆனால் கடன் கேட்டு விண்ணப்பிப்பவர், பரவாயில்லை நீங்கள் கையெழுத்து மட்டும் போட்டு கொடுங்கள். மீதியை நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று சொல்லி ஆடிட்டரிடம் கையெழுத்து மட்டும் வாங்கிச் சென்று வங்கியிடம் கொடுப்பார். ஆடிட்டரும், எக்ஸ்ராக்டட் ஃப்ரம் புக்ஸ் ஆப் அக்கவுண்ட் என்று எழுதி கையெழுத்திட்டிருப்பார்.

ஆடிட்டரின் கையெழுத்து மட்டும் இருக்கும் அந்த இருப்புநிலைக் குறிப்பை வங்கி ஆடிட்டட் பேலன்ஸ் ஷீட்டாக ஏற்றுக் கொள்ளாது. ஏனென்றால் ஆடிட்டர் அதில் எழுதியிருப்பதற்கு கணக்குகள் இன்னும் தணிக்கைச் செய்யப்படவில்லை என்று அர்த்தம். அதனால் வங்கி அதனை ஏற்றுக்கொள்ளாது. சரி அப்படியென்றால் தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்பு எப்படி இருக்கும்? உங்கள் நிறுவனத்தின் கணக்குகள் ஆடிட்டரால் முழுமையாக தணிக்கை செய்யப்பட்டிருக்கும்.

என்ன இருக்கும்? - சரி எதற்காக வங்கிகளில் தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்பு கேட்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். `பேலன்ஸ் ஷீட்` எனப்படும் இருப்புநிலைக் குறிப்பில் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விபரங்கள் இருக்கும். ஆடிட்டரால் தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்பில், அந்த நிறுவனத்தில் முதல் எவ்வளவு, இருப்பு எவ்வளவு, எவ்வளவு லாபம் வந்திருக்கிறது என்பவைகள் இருக்கும். எல்லாம் போன ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்து செல்லப்பட்டிருக்கும்.

அதனுடன் "நோட்ஸ் ஆப் அக்கவுண்ட்ஸ்" என்ற ஒன்று இருக்கும். அதில் ஆடிட்டர் கணக்குகள் குறித்த அவருடைய குறிப்புகளை எழுதி இருப்பார். உதாரணமாக இறுதி கையிருப்பு அடக்கவிலையில் கணக்கிடப்பட்டிருக்கிறதா, வேறு எந்த விலையில் கணக்கிடப்பட்டிருக்கிறது போன்றவை விளக்கப்பட்டிருக்கும்.

ஏன் வேண்டும்? - நிறுவனத்தின் உரிமையாளர் கையெழுத்திட்டிருந்தால் அது சாதாரண இருப்புநிலைக் குறிப்பு, ஆடிட்டர் ஒருவர் அதில் கையெழுத்திட்டிருந்தால், அது ஆடிட்டரால் கையெழுத்திடப்பட்ட இருப்புநிலைக் குறிப்பு, இந்த இரண்டும் தொழில் தொடங்குதற்கான வங்கிக் கடனுக்குப் போதுமானதாக இருக்காது. அதற்கு தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்பு தேவைப்படும். கணக்கு விபரங்கள் தெரிந்த ஒரு தொழில்முறை ஆடிட்டர், நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்யும் போது அந்த இருப்புநிலைக் குறிப்பின் நம்பகத்தன்மையும், மதிப்பும் கூடிவிடுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி, சாதாரணமாக ரூ.20 லட்சமோ அதற்கும் அதிகமாக கடன் வாங்குபவர்கள் ஆடிட்டட் பேலன்ஸ் ஷீட் கொடுப்பது அவசியம். அப்படியானால் வாகனக்கடன், வீட்டுக்கடன் வாங்குவதற்கும் நாம் ஆடிட்டட் பேலன்ஸ் ஷீட் கொடுக்க வேண்டுமா என்று கேள்வி வரலாம்.

இதில் முக்கியமானது என்னெவென்றால் சில குறிப்பிட்ட திட்டங்களின் கீழ் கடன் வாங்கப்படும் சில கடன்களுக்கு தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்பு அவசியம் இல்லை. அதாவது, வீட்டுக்கடன் வாங்கும்போது உங்களின் வருமானம் எவ்வளவு, வீட்டின் விலை எவ்வளவு, கடனைத் திருப்பி செலுத்தும் திறன் உங்களுக்கு இருக்கிறதா என்று மட்டுமே வங்கி பார்க்குமே தவிர அங்கு ஆடிட்டட் பேலன்ஸ் ஷீட் முக்கியம் இல்லை.

வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் போன்று சட்டப்படி தணிக்கை செய்யப்பட வேண்டும் என்ற வியாபார நிறுவனங்களின் கணக்குகள் மீது வங்கிக்கடன் வாங்கச் செல்லும்போது ஆடிட்டட் பேலன்ஸ் ஷீட் கட்டாயம் வேண்டும்.

எக்ஸ்க்ளூசிவ் டீலிங் (Exclusive Dealing): வங்கிகளில் புழங்கும் வார்த்தைகளில் ஒன்று எக்ஸ்க்ளூசிவ் டீலிங். சில நேரங்களில் வங்கிகளில் கண்டிஷன் ஆஃப் எக்ஸ்க்ளூசிவ் டீலிங் இருக்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. அதாவது ஒரு கடனாளி ஒரு வங்கி என்பதே இதன் மறைபொருள். அதாவது கடன் பெறுபவர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெறக்கூடாது என்பதில்லை. கணக்கே வைத்துக் கொள்ளக்கூடாது என்பதே இதற்கு அர்த்தம். சேமிப்பு கணக்கு இல்லை, கரண்ட் அக்கவுண்ட் எனப்படும் நடப்பு கணக்கு. அதாவது வியாபாரம் செய்பவர்கள் ஒரே வங்கியில் தனது அனைத்து கணக்குப் பரிமாற்றங்களையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எக்ஸ்க்ளூசிவ் டீலிங்க்.

முதலில் இதற்கான காரணத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் ரூ.10 லட்சத்திற்கு "கேஷ் கிரெடிட்" கடன் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வேம். அவர் மற்றொரு வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் தொடங்கி அனைத்து வரவு செலவுகளையும் அந்த வங்கியிலேயே வைத்திருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய தவறு. அப்படி இருக்கும்போது கடன் கொடுத்த வங்கிக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. அதனால் தான் யார் ஒருவர் கேஷ் கிரெடிட் அல்லது ஓவர் டிராஃப்ட் வாங்குகிறார் என்றால் அந்த வங்கியில் மட்டுமே நடப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. வியாபாரத்தில் வரும் விற்பனையை அந்த கடன் தொகையில் செலுத்த வேண்டும் என்று செல்லப்படுகிறது.

வங்கி கண்காணிக்கும்: வங்கிகள் ஏனோதானோ என்று வங்கிக் கணக்குகளை தொடங்கக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தற்போது கண்டிப்பான முறையில் வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. சில வரிகளை பாரத ஸ்டேட் வங்கி மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்று இருக்கும். அந்த வரிகளுக்கான தொகையினை மட்டும் ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும். வேறு எந்த பணப்பரிமாற்றங்களையும் செய்யக்கூடாது. இதனை கடன் கொடுத்த வங்கி கண்காணிக்கும். இதனைத் தவிர வேறு ஏதாவது பணப் பரிமாற்றத்தில் வங்கிகள் ஈடுபடுமானால் அந்த வங்கி மீது குற்றம் சுமத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஒரே கடனாளி ஒரே வங்கி: தற்போது இணையவழி தொடர்புகளும், பரிமாற்றங்களும் அதிகரித்து விட்டன. கணினி மூலமாக வருமான வரித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி போன்றவைகள் தகவல்களை எடுத்துக் கொள்கின்றன. அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட நடப்பு கணக்கு இருந்தால் அவைத் தெரிந்து விடும். அதனால் கடன் பெறும் போது வங்கி, ரிசர்வ் வங்கி சொல்கிற படி கடன் பெறும் வங்கியிலேயே நடப்பு கணக்கு தொடங்கி எக்ஸ்க்ளூசிவ் டீலிங்களை ஏற்றுக்கொண்டு, ஒரு கடனாளி ஒரே வங்கி என்ற கொள்கையை கடைபிடித்து வியாபரத்தை பெருக்குங்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in