கோதுமைக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு - இந்தியாவிடம் எகிப்து, வங்கதேசம் கோரிக்கை

கோதுமைக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு - இந்தியாவிடம் எகிப்து, வங்கதேசம் கோரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: சர்வதேச அளவில் கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகள் இந்தியாவிடம் கோதுமை சப்ளை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. சுமார் 15 லட்சம் டன் கோதுமை சப்ளை செய்ய கோரிக்கை விடுத்துள்ளன.

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கருங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. மேலும் கோதுமை உற்பத்தி நாடான உக்ரைனில் இருந்தும், ரஷ்யாவில் இருந்தும் கோதுமை சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பல நாடுகளில் கோதுமை பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவிடம் கோதுமை வாங்குவதை விரும்பும். ஏனெனில் சர்வதேச சந்தை விலையை விட இந்தியாவில் 30 சதவீதம் குறைவு. மேலும் இந்தியாவில் ஆர்டர் செய்தால் அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் வங்கதேசத்திற்கு கோதுமை சப்ளையாகிவிடும். கடந்த நிதி ஆண்டில் மட்டும் வங்கதேசம் 40 லட்சம் டன் கோதுமையைஇந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

எகிப்து அதிக இறக்குமதி

கோதுமை இறக்குமதியில் முதலிடத்தில் இருக்கும் எகிப்துக்கு தற்போது உக்ரைனிடமிருந்து கோதுமை இறக்குமதி செய்ய இயலாத சூழல் உள்ளது. இதையடுத்து இந்தியாவிடம் 5 லட்சம் டன் கோதுமை சப்ளை செய்யுமாறு எகிப்து கோரிக்கை வைத்துள்ளது. இந்த இரு நாடுகள் தவிர ஜமைக்கா மற்றும் சில ஆசிய நாடுகளும் இந்தியாவிடம் கோதுமை சப்ளைக்காக கோரிக்கை விடுத்துள்ளன. உலக உணவு திட்டத்துக்கு எத்தியோப்பியா மற்றும் உகாண்டாவுக்கு கோதுமையை சப்ளை செய்யுமாறு இந்தியாவை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

ஆனாலும் உள்நாட்டில் கோதுமை விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நாடுகளின் தேவை அடிப்படையில் வெளிநாடுகளுக்கு கோதுமை சப்ளை செய்யப்படும் என இந்தியா தெரிவித்திருந்தது.

முன்னதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் பலர் பல நாடுகளுக்கு சென்று கோதுமை ஏற்றுமதி குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டனர். இந்நிலையில், சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in