Published : 31 May 2022 07:19 AM
Last Updated : 31 May 2022 07:19 AM
அகமதாபாத்: குஜராத் மாநிலம் சனந்த் நகரில் உள்ள போர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்குவதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
போர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்குவதில் மாநில அரசுக்கு பிரச்சினை இல்லை என்று தடையில்லா சான்றிதழை மாநில அமைச்சரவை அளித்துள்ளது. இதனால் போர்டு ஆலைக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குத் தொடரும். நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக போர்டு - டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
பவர் டிரெய்ன் பிரிவை மட்டும் போர்டு நிறுவனம் வைத்துக் கொள்ள விரும்புகிறது. இப்பிரிவு இயங்கும் கட்டிடம் மற்றும் நிலத்தை டாடா மோட்டார்ஸ் குத்தகைக்கு அளிக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்தி விடப்போவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக தமிழக அரசு மற்றும் குஜராத் மாநில அரசுகளுடன் டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். தற்போது குஜராத் அரசு தடையில்லா சான்றை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சனந்த் நகர் போர்டு ஆலையில் 2,500 பணியாளர்கள் உள்ளனர். கார் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில் சனந்த் நகரில் உள்ள ஊழியர்கள், வாகனத்திற்கான உதிரி பாகங்களை மட்டும் தயாரித்து வந்தனர்.
குஜராத் ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் கார்களைத் தயாரிக்க முடியும். இத்திறனை 4 லட்சம் வரை அதிகரிக்கவும் வாய்ப்பு வசதி உள்ளது. இந்த ஆலை டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு அருகில் அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT