

வரிமான வரி செலுத்துவதின் ஆரம்பப் புள்ளி வருமானம் குறித்த தகவல்களைத் தாக்கல் செய்வதிலும், பின்னர் அதனை மதிப்பீடு செய்வதில் இருந்தும் தொடங்குகிறது. நிதியாண்டு முடிந்து வருமான வரி தாக்கல் செய்ய மூன்று மாதங்கள் அவகாசம் என்பதால் ஜூலை மாதம் வரி செலுத்துபவர்கள் மிகவும் பரபரப்பாக இருப்பார்கள். அந்த மாதத்தில் சிறப்பு கவுன்டர்கள் எல்லாம் திறக்கப்படும். இந்த சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இப்போது ஆன்லைனில் வருமான வரித் தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல வருமான வரி மதிப்பீட்டிலும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய முறையில் வருமான வரி தொடர்பான விஷயங்களுக்கு, வரி செலுத்துபவர் வருமான வரி அலுவலரை நேரடியாக இனி சந்திக்க வேண்டிய தேவை இல்லை. அதனால் இதற்கு முகமில்லா மதிப்பீட்டு முறை என அழைப்பப்படுகிறது. அது என்ன முகமில்லா மதிப்பீட்டு முறை? இந்த புதிய நடைமுறை ஏன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? இதன் சாதக, பாதகங்களை என்னென்ன? - இவை குறித்து விவரிக்கிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி...
முகமில்லா மதிப்பீடு முறை: கடந்த ஆண்டிலிருந்து வருமான வரித் துறை மதிப்பீட்டில் ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டடுள்ளது. இனிமேல் அதுதான் நடைமுறையில் இருக்கப் போவதாகத் தெரிகிறது. அதனால் அதை புதிய முறை என்று சொல்ல முடியாது. அதாவது, வருமான வரி மதிப்பீட்டின் அந்தப் புதிய முறையை Faceless Assessment என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழில் முகமில்லா மதிப்பீடு என்று நாம் சொல்லலாம். அது என்ன முகமில்லா மதிப்பீடு என்ற சந்தேகம் இப்போது நமக்கு வரலாம். அதற்கு இதுவரை வருமான வரியை மதிப்பீடு செய்வதற்கு என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும். முன்பு ஒருவர் வருமான வரித் தாக்கல் செய்த பின்னர், அந்த தகவல்களை எந்த வருமான வரித் துறை அதிகாரி மதிப்பீடு செய்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
அதிகாரியை அறியலாம்: அதாவது ஒருவருடைய 'பான் எண்' மூலமாக எந்த அதிகாரி அந்த வருமான வரித் தாக்கலை மதிப்பீடு செய்கிறார் என்று அறிந்து கொள்முடியும். உதாரணமாக வருமான வரி தாக்கல் செய்தவர் சென்னை சரகத்தில் சம்பளம் பெறுவராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வருமான வரித் தாக்கல் செய்த பின்னர், அவரது ' பான் எண்' மூலமாக அந்த வருமான வரி தாக்கல் விபரங்கள் சென்னையில் உள்ள எந்த வருமான வரித் துறை அலுவலர் மதிப்பீடு செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஒருவேளை அவருக்கு வருமான வரி தொடர்பாக ஏதாவது குறைகள் இருக்கிறது, அவருக்கு வரவேணடிய ரீ ஃபண்ட் திருப்பி வரவேயில்லை. அவருடைய மதிப்பீடு நிறைவடையவில்லை போன்ற குறைகளை, அந்த அதிகாரியிடம் நேரிடியாகச் சென்று எழுதிக் கொடுத்து விளக்கம் பெற முடியும். இதுதான் பழைய நடைமுறை.
எங்கிருந்தும், யாரும் மதிப்பீடு செய்யலாம்: கடந்த ஆண்டிலிருந்து இந்த நடைமுறை மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது முகமில்லா மதிப்பீடு என்று மாற்றியிருக்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்னவென்றால், ஒருவர் வருமான விபரங்களைத் தாக்கல் செய்த பின்னர், அது யாரிடம் இருக்கும், அதனை யார் மதிப்பீடு செய்வார்கள் என்று விபரங்களை இனி அறிந்து கொள்ள முடியாது. அதனை யாரும், எங்கிருந்தும் மதிப்பீடு செய்யலாம். ஒருவர் தாக்கல் செய்த தகவல்களை கணினி எந்த அதிகாரியிடமும் மதிப்பீட்டிற்கு அனுப்பலாம்.
அதே பழைய உதாரணத்தின்படி சொல்ல வேண்டும் என்றால், சென்னையில் உள்ள ஒருவர், சென்னையில் வருமான வரி தாக்கல் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதனை மும்பை, சண்டிகர், பஞ்சாப் என இந்தியாவின் எந்த இடத்தில் உள்ள வருமான வரித் துறை அதிகாரியும் மதிப்பீடு செய்யலாம். தாக்கல் யாரிடம் போகிறது, யார் மதிப்பீடு செய்யப்போகிறார்கள் என தெரிய வாய்ப்பில்லை. மதிப்பீடு செய்யும் அதிகாரியும், எவ்வளவு வருமானம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு எவ்வளவு வருமான வரி கட்டப்பட்டிருக்கிறது, கூடுதலாக ஏதாவது வரி கட்ட வேண்டியது இருக்கிறதா என்று பார்ப்பார்.
அதில் ஏதாவது தகவல் கேட்க வேண்டியதிருந்தால் அதனை ஆன்லைன் மூலமாக கேட்பார். சம்மந்தப்பட்டவர் அதற்கு ஆன்லைன் மூலம் பதில் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த அதிகாரி தனது மதிப்பீட்டை நிறைவு செய்வார். அதாவது வரி செலுத்துபவர் யார், அதனை மதிப்பீடு செய்பவர் யார் என்று யாருக்கும் தெரியாது. இதனையே முகமில்லா மதிப்பீட்டு முறை என்று பெயர்.
முறைகேடு குறையும்: சரி, ஏன் இப்படி ஒரு நடைமுறை? முன்பு இருந்த வழிமுறையில் முறைகேடுகள் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன. ஊழலுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக சிலர் கருதியதால் இந்த முகமில்லை மதிப்பீட்டு முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒரு காரணமாக இருக்கலாம். இன்று தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து விட்டது, அனைத்து விஷயங்களும் ஆன்லைன் முறையாக மாறி விட்டது. அதனால் வருமான வரி மதிப்பீட்டையும் ஆன்லைன் மூலமாக செய்யலாம். அது எளிதாக இருக்கும், யாரும் யாரையும் நேரில் சென்று பார்க்க வேண்டாம் என்பதற்காக, நடைமுறை வசதி கருதியும் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டிருக்கலாம்.
இதுவே நடைமுறை: தற்போது இந்தியா முழுவதும் முகமில்லா மதிப்பீட்டு முறையே நடைமுறையில் உள்ளது. ஒருவர் வருமான வரி தாக்கல் செய்த பின்னர், அதில் ஒரு மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்திருப்பார். அதன் மூலம்தான், அவருக்கு கடிதமோ, நோட்டீஸ் அனுப்பப்படும். வரி செலுத்துபவரும் அதன் மூலமாக தான் பதில் அனுப்புவார். அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளது.
ஒருவர் ஆன்லைன் மூலமாக வருமான வரி தாக்கல் செய்த பின்னர், அதற்கான மதிப்பீடும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். அதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அதற்கான கேள்வி, பதில் அனைத்து்ம் ஆன்லைன் மூலமாகவே நடக்கும். ஹியரிங்க், மேல்முறையீடு ஏதாவது இருந்தால் அவைகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். எந்த ஒரு அதிகாரியையும் நேரில் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
நேரடித் தொடர்பில்லை: முன்பிருந்த நடைமுறையில் ஒருவருடையை வருமானத்தை மதிப்பீடு செய்யும் அதிகாரி யார் என்பதை வரி செலுத்துபவர் தெரிந்து கொள்ள முடியும். அவரது அவருக்கு விதிக்கப்பட்ட வரிகளில் உள்ள குறைகளை நேரிடியாகப் பேசி சரி செய்துகொள்ள முடியும். முகமில்லா மதிப்பீட்டு முறையில் அது சாத்தியம் இல்லை. வருமான வரி தாக்கல் செய்தவர் ஒரு இடத்திலும், அதனை மதிப்பீடு செய்பவர் வேறு ஒரு இடத்திலும் இருக்கலாம். இதனால் வரி செலுத்துபவருக்கும், மதிப்பீடு செய்யக்கூடிய அலுவலருக்குமான நேரடி தொடர்பு இல்லாமல் செய்திருக்கிறார்கள்.
பேச்சு, எழுத்து மொழிச் சிக்கல்: தாக்கல் செய்யப்பட்டுள்ள வருமானம் தொடர்பான கேள்விகள் பதில்கள் மின்னஞ்சல் மூலமாகவே நடைபெறும். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அனைத்து விஷயங்களையும் எழுத்து மூலமாக சொல்லிவிட முடியாது. ஆனால் அதனை வாய்மொழியாக எளிதில் கடத்தி விடலாம். உதாரணமாக, ஒருவருக்கு அவசரமாக செய்த மருத்துவச் செலவு பற்றிய விபரங்களை எப்படி வரி கணக்கில் காட்டுவது என்று தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதனை தவறுதலாக வரி கணக்கில் காட்டிவிட்டார் என்றால் நிலைமையை வாய்மொழியாக எடுத்துச் சொல்லி, அதற்கான விளக்கத்தை பெறுவது பழைய முறையில் சாத்தியமாக இருந்தது. ஆனால் சொல்ல வந்த விஷயங்கள் அனைத்தையும் மின்னஞ்சல் மூலமாகத்தான் தெரிவிக்க வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.
கடித வடிவம் முக்கியம்: மின்னஞ்சலில் தகவல்களை தெரிவிக்கும்போது அதற்கென ஓர் எழுத்து வடிவம் இருக்கிறது. அது எல்லோருக்கும் எளிதில் சாத்தியமாகி விடுவதில்லை. அதேபோல கடிதம் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காகவே முகமில்லா மதிப்பீட்டு முறை கொண்டுவரப்பட்டிருப்பதாகச் சென்னாலும் இந்த முறையில் வரி செலுத்துபவருக்கு சில பல சிரமங்கள் இருக்கவே செய்கின்றன.