Published : 29 May 2022 05:00 AM
Last Updated : 29 May 2022 05:00 AM

இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு அனுமதித்தால் மட்டுமே உற்பத்தி ஆலை - எலான் மஸ்க் திட்டவட்டம்

எலான் மஸ்க்

புதுடெல்லி: டெஸ்லா கார்கள் விற்பனை செய்ய இந்திய அரசு அனுமதித்தால் மட்டுமே இந்தியாவில் உற்பத்தி ஆலை தொடங்குவது குறித்து தங்கள் நிறுவனம் முடிவு செய்யும் என்று அதன் நிறுவனர் எலான் மஸ்க் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

உலக அளவில் பேட்டரி கார்களில் சிறந்ததாக டெஸ்லா கார்கள் திகழ்கின்றன. இந்த கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய இறக்குமதி வரிச்சலுகை வழங்க வேண்டும் என அந்நிறுவனம் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து உற்பத்தியைத் தொடங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது என்று மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இது தவிர சிஐஎப் காப்பீடு, இறக்குமதி கட்டணம் ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு காரின் விலை 40 ஆயிரம் டாலரைத் தொடுகிறது. இது நிறுவனக் காரின் விலையை விட 60 சதவீதம் அதிகமாகும். இதனால் வரியைக் குறைக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறது.

இதனிடையே இந்தியாவில் ஆலை அமைப்பது தொடர்பாக ட்விட்டரில் ஒருவர் எலான் மஸ்கிடம் கேள்வி எழுப்பியதற்கு, டெஸ்லா நிறுவனம் எந்த ஒருநாட்டிலும் முதலில் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவையை அனுமதிக்க வேண்டும். அதன் பிறகுதான் அங்கு உற்பத்தி ஆலை அமைக்க நிறுவனம் பரிசீலிக்கும் என்று பதிலளித்துள்ளார். இதுவரையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைப்பது தொடர்பாக எழுந்த பல்வேறு யூகங்களுக்கு எலான் மஸ்கின் இந்த பதில் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x