

புதுடெல்லி: நுகர்வோர் நலனை பாதுகாக்கும் வகையில் இ-காமர்ஸ் எனப்படும் மின்னணு வர்த்தக இணையதளங்களில் போலியான விமர்சனங்களை கண்காணிக்க மத்திய அரசு புதிய திட்டத்தை விரைவில் உருவாக்கவுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மின்னணு வர்த்தக இணையதளங்களில் போலியான விமர்சனங்களை கண்காணிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கவுள்ளது.
இந்தியாவில் இயங்கும் மின்னணு வர்த்தக நிறுவனங்களால் பின்பற்றப்படும் நடைமுறைகளையும், சர்வதேச அளவில் சிறப்பாக உள்ள நடைமுறைகளையும் நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆய்வு செய்து இந்தத் திட்டங்களை வகுக்கும்.
இந்திய விளம்பரங்கள் தரநிலை கவுன்சிலுடன் இணைந்து மின்னணு வர்த்தக நிறுவனங்கள், நுகர்வோர் மன்றங்கள், சட்டப் பல்கலைக்கழகங்கள், வழக்கறிஞர்கள், ஃபிக்கி, சி.ஐ.ஐ, நுகர்வோர் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களுடன் இணைந்து நுகர்வோர் விவகாரங்கள் துறை நடத்திய கூட்டத்தில், இணையதளங்களில் போலியாக வெளியிடப்படும் திறனாய்வுகளின் அளவு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
“பொருட்களை நேரடியாக வாங்குவது, ஆய்வு செய்யும் வாய்ப்பு மின்னணு வர்த்தக இணையதளங்களில் இல்லாததால், பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்கெனவே பயன்படுத்திய பயனாளர்கள் இணையதளங்களில் பதிவிடும் அனுபவம் மற்றும் கருத்துக்களையே பொதுமக்கள் பெரிதும் சார்ந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து திறனாய்வாளரின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது மற்றும் சம்பந்தப்பட்ட தளத்தின் பொறுப்புத்தன்மையைக் கண்டறிவது ஆகியவை இரண்டு முக்கிய விஷயங்கள். மேலும், மிகவும் பொருத்தமான திறனாய்வுகளை மின்னணு வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் தேர்வு செய்கிறார்கள் என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்” என்று நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.