தைரோகேர் ஐபிஓவுக்கு அமோக வரவேற்பு: 73 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை
தைரோகேர் டெக்னாலஜீஸ் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த பங்குகளில் முதலீடு செய்வதற்கான முதலீட்டு காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த பங்குகளுக்கு 73.46 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. முதல் நாளில் 56 சதவீதமும், இரண்டாம் நாளில் 2.24 மடங்கும் பரிந்துரையானது.
ஐபிஓ மூலம் 479.21 கோடி ரூபாயை இந்த நிறுவனம் திரட்ட முடிவெடுத்திருக்கிறது. தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 73.18 மடங்கும், நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 225.30 மடங்கும், சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 8.55 மடங்கும் விண்ணப்பங்கள் குவிந்திருக்கின்றன.
இந்த நிறுவனம் நாடு முழுவதும் பரிசோதனை மையங்களை நடத்தி வருகிறது. 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு ரூ.420 முதல் ரூ.446 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதிக பட்ச விலை நிர்ணயம் செய்யும் போது 479.21 கோடி ரூபாய் திரட்டப்படும். இந்த பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.
கடந்த சில மாதங்களாக ஹெல்த்கேர் துறையை சேர்ந்த சில நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு வருகின்றன. அல்கெம் லேப், டாக்டர் லால்பாத்லேஸ்ம் நாராயண ஹிருதுலயா ஆகிய நிறுவனங்கள் கடந்த வருடத்தில் ஐபிஓ வெளியிட்டன. கடந்த மாதம் ஹெல்த்கேர் குளோபல் என்டர்பிரைசஸ் ஐபிஓ வெளியிட்டது.
