

சென்னை: டாலர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட 50-வதுஆண்டை குறிக்கும் வகையில் புதிய இலச்சினையும், 2025-ம் ஆண்டுக்கான இலக்கும் நேற்று வெளியிடப்பட்டது. டாலர் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் வினோத் குமார் குப்தா முன்னிலையில் நிறுவனர் மற்றும் தலைவர் தீன் தயாள் குப்தா புதிய இலச்சினையை வெளியிட்டார்.
டாலர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1972-ம் ஆண்டு பவானி டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயருடன் தொடங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் நாட்டின் மொத்த உள்ளாடை விற்பனையில் 15 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. நிறுவன விரிவாக்கப் பணிகளுக்காக 2025-ம் ஆண்டுக்குள் ரூ.120 கோடி முதலீடு செய்து புதிய ரகங்களை அறிமுகப்படுத்தவும், திண்டுக்கல்லில் புதிய நூற்பு ஆலை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. விநியோகத்தை எளிதாக்கவும், விரைவுபடுத்தவும் மற்றும் செலவுகளைக் குறைக்கவும் மேற்கு வங்க மாநிலம் ஜகதீஸ்பூர் பகுதியில் கிடங்குடன் கூடிய உள்ளாடை பூங்கா அமைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்தின் 50-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், நிறுவனத்தின் விளம்பரத் தூதரான நடிகர் அக்ஷய்குமார் மூலம் சிறப்பு விளம்பரத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ‘டாலர் மிஸ்ஸி' ரக விளம்பரத்துக்காக பாலிவுட் நடிகை யாமினி குப்தாவை விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது.
டாலர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் மற்றும் தலைவர் தீன் தயாள் குப்தா கூறும்போது, ‘‘ஒரு தெளிவான பார்வையின் அடிப்படையிலான நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சி, டாலர் இண்டஸ்ட்ரீஸை உலகளாவிய பிராண்டாக மாற்ற உதவியது. தரம், சிறப்பு ஆகிய 2 முக்கிய மதிப்பீடுகளை எங்கள் குழு அடிப்படையாக கொண்டுசெயல்படுகிறது. வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்வதை கடந்த 50 ஆண்டுகளாக கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருவதில் மகிழ்கிறோம்’’ என்றார்.
இவ்வாறு டாலர் இண்டஸ்ட்ரீஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.