

வங்கியில் கடன் பெறும் நிகழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று வங்கி அதிகாரியுடன் வாடிக்கையாளர் நடத்தும் சந்திப்பு. திருமணம் ஒன்றை உறுதிபடுத்த மாப்பிள்ளை விசாரிப்புக்கு நிகரானது இந்த வாடிக்கையாளர் - வங்கி அதிகாரி சந்திப்பு.
வாடிக்கையாளருக்கு கடன் பெறுவதற்கு அனைத்து தகுதிகள் இருந்தாலும் கடனை பெற்றதும் வாடிக்கையாளர் கடனை முறையாக திருப்பிச் செலுத்துவாரா இல்லையா என்பதை வங்கிகள் இந்த சந்திப்பின் மூலம் தான் தீர்மானிக்கும். அதேபோல வங்கிக்கடனில் மற்றுமொரு முக்கியமான விஷயம் ஜாமீன் கையெழுத்து. வங்கி அதிகாரி - வாடிக்கையாளர் சந்திப்பு, ஜாமீன் கையெழுத்து என்பவைகள் குறித்து விவரிக்கிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளருமான "குறள் இனிது" சோம. வீரப்பன்.
மீட்டிங் வித் ப்ராசஸிங் ஆபீசர்: வங்கியில் கடன் வாங்கச் செல்லும் போது வங்கி, வாடிக்கையாளர் இரண்டு தரப்புக்கும் இடையில் பல்வேறு கேள்விகள் எழுவது வாடிக்கை. குறைவான வட்டியில் கடன் கிடைக்குமா, இஎம்ஐ எவ்வளவு கட்ட வேண்டும், கேட்கின்ற தொகையை கொடுப்பார்களா அல்லது குறைத்துக் கொடுப்பார்களா, என்ன ஜாமீன் கேட்பார்கள் போன்ற கேள்விகள் வாடிக்கையாளர் முன் வரிசை கட்டி நிற்கும்.
அதேபோல, இந்த வாடிக்கையாளர் முறையாக கடனைத் திரும்ப செலுத்தி விடுவாரா, அதற்கான வருமானம், திறன் அவருக்கு இருக்கிறதா, கடன் வாங்கியப் பின் திரும்ப கட்ட மறுத்தால் என்ன செய்வது போன்ற விஷயங்களை வங்கி யோசிக்கும். வாடிக்கையாளர் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்து, நடைமுறைகள் எல்லாம் சரி பார்க்கப்பட்டவுடன் வங்கி கடன் கொடுத்து விடாது. அதற்கு முன்பாக வங்கி அதிகாரி ஒருவர் வாடிக்கையாளருடன் ஒரு சந்திப்பு நடத்துவார். அதற்கு மீட்டிங் வித் ப்ராஸஸிங் ஆபீசர் என்று பெயர்.
லோன் ப்ராசஸிங்: அது சரி ப்ராசஸிங் என்றால் என்ன என்று கேட்கறீர்களா, உங்களை பற்றி அனைத்து விபரங்களையும் வங்கி விசாரித்த பின்னர் உங்களுக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக உங்கள் கடன் விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும். வாடிக்கையாளர் நல்லவரா, கடனை அவர் திரும்ப செலுத்துவாரா, அவரின் சம்பள விபரங்கள் உண்மையானதா, அவர் அந்த அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாரா போன்ற விவரங்களை விசாரித்து முடிவு செய்யும் நடைமுறைக்கு லோன் ப்ராசஸிங் என்று பெயர். பல வங்கிகளில் இதற்கென தனியாக பிரிவுகள் உள்ளன. யூனியன் வங்கியில் அந்த பிரிவை சரல் என்று அழைக்கின்றனர். பேங்க் ஆஃப் பரோடாவில் பேக்ட்ரி என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு வங்கியும் வேறு வேறு பெயர் வைத்திருக்கின்றன. இங்கு இருப்பவர்களுக்கு கடன் கேட்டுவருபவர் நம்பிக்கைக்கு உரியவர் தானா என்று விசாரிப்பது மட்டும் தான் வேலை.
இதற்காக லோன் ஆஃபிசருடன் வாடிக்கையாளர் நடத்தும் சந்திப்பு மிகவும் முக்கியம். முதலில் வாடிக்கையாளர் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். கடன் வாடிக்கையாளருக்குத் தான் தேவைப்படுகிறது. வங்கியாளருக்கு இல்லை. அதனால் திடீரென சென்று வங்கி அதிகாரியைச் சந்தித்து கடன் குறித்து பேசுவதை விட, முன் அனுமதி வாங்கிச் செல்லவது சிறந்தது. அதேபோல அவர் சொல்லும் நேரத்திற்கு செல்ல வேண்டும். இந்த சந்திப்பின் போது, வங்கி அதிகாரி கடன் வாங்குவதற்காக நீங்கள் வழங்கி இருக்கும் ஆவணங்களில் இருந்து தான் தகவல்கள் கேட்பார்கள். அதனால் அதனை ஒரு முறை நன்றாக பார்த்துவிட்டுச் செல்லுங்கள். கடன் குறித்து கேள்வி கேட்கும் போது ஆவணங்களை பார்த்து சொல்கிறேன் என்று சொன்னால் அது உங்களின் மதிப்பை இழக்கச் செய்து விடும்.
ஜாமீன் வழங்குவதற்கான தகுதிகள்: வங்கியில் கடன் வாங்கச் செல்லும் போது கியாரண்டர் கொடுங்கள் என்று கேட்பார்கள். இப்போது, நான் கடன் வாங்குகிறேன். அதனை ஹைபாதிக்கேட் செய்கிறேன். சில நேரங்களில் கொலாட்ரல் செக்யூரிட்டி கொடுக்கிறேன். இவைகளை தாண்டி கியாரண்டர் எதற்காக என்ற சந்தேகம் வாடிக்கையாளருக்கு வரலாம். சரி கியரண்டி அல்லது ஜாமீன் என்றால் என்ன?. எளிமையாக சொல்வதானால், வாடிக்கையாளர் வாங்கிய கடனை முறையாக திரும்ப செலுத்த தவறும் பட்சத்தில் நான் அந்தக் கடனனை தான் திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என்று வாடிக்கையாளர் சார்பாக வங்கிக்கு ஒருவர் உத்திரவாதம் அளிப்பது என்று பொருள். அப்படியென்றால் யார்வேண்டுமானாலும் ஜாமீன் போட முடியுமா என்று அடுத்த கேள்வி எழும்.
ஒருவேளை வாடிக்கையாளரால் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவிற்கு திறன், வசதி உள்ளவர்கள், கடன் பெற்றவரை திருப்பிச் செலுத்தும் படி சொல்லும் உரிமை உள்ளவர்கள் மட்டுமே ஜாமீன் கையெழுத்து போட முடியும். இரண்டாவதாக ஜாமீன் ஏற்பவர் தகராறு செய்யாதவராக இருக்க வேண்டும். அதனால், கடன்பெறுவபவருக்கு இருக்க வேண்டிய நன்னடத்தை, திருப்பி செலுத்தும் திறன், குணநலன், வேறு ஏதேனும் கடன் இருக்கிறதா, வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்தி விட்டாரா போன்ற விபரங்களை எல்லாம் வங்கி விசாரிக்கும். இதில் முக்கியமான ஒரு விஷயம் ஜாமீன் கையெழுத்து போடுபவர்களுக்கு கடன் தொகைக்கு நிகராக சொத்து இருக்க வேண்டும்.
ஜாமீன்தாரரின் பொறுப்புகள்: வாடிக்கையாளர் வங்கிக் கடனை சரியாக திருப்பிச் செலுத்தவில்லை என்றால் ஜாமீன்தார் மீதும் வங்கிகள் நடவடிக்கை எடுக்க முடியும். சட்டப்படி கடன் பெற்றவர் அந்தக் கடனைத் திருப்பி செலுத்தும் வரையில் ஜாமீன் கையெழுத்திட்டவர்களும் கடன் மீதான பொறுப்புகள் இருந்து கொண்டே இருக்கும். வாடிக்கையாளர் கடனைத் திருப்பி செலுத்தாத பட்சத்தில் அது தொடப்பாக ஜாமீன் கையெழுத்திட்டவருக்கு வங்கி கடன் நிலுவைத் தொடர்பாக ரிமைண்டர் நோட்டீஸ் அனுப்ப முடியும். அதே போல ரீ கால் நோட்டீஸூம் ஜாமீன் கையெழுத்திட்டவருக்கே அனுப்பப்படும்.
தற்போது, கடனைத் திருப்பிச்செலுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஜாமீன் கையெழுத்திட்டவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அதாவது சம்ந்தப்பட்ட நபர் ஒரு கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டிருக்கிறார். அந்த கடன் முறையாக திருப்பிச் செலுத்தப்படவில்லை. அதனால் தவணைத் தொகையை சம்மந்தப்பட்டவரின் சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்ள வழிசெய்யுங்கள் என்று தெரிவிப்பார்கள்.
இந்த சிக்கல்களை தவிர்க்க, கடன் வாங்கியவர், ஜாமீன் கையெழுத்திட்டவர் இருவரும் சேர்ந்து வங்கிக்கு சென்று கடனைத் திருப்பி செலுத்த முடியாததற்கு சரியான காரணத்தை சொல்லி, கடனை எப்படி திருப்பி செலுத்த போகிறோம் என்று எழுத்துப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது வங்கி மேலே சொன்ன கடுமையான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வாய்ப்பு உண்டு.
அதனால் யாருக்காவது ஜாமீன் கையெழுத்து போடும் போதும், யாரிடம் இருந்தாவது ஜாமீன் கையெழுத்து பெறும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.