Published : 24 May 2022 05:48 PM
Last Updated : 24 May 2022 05:48 PM

ஸ்வீடன் | வீடியோ மெசேஜ் அனுப்பி 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்த Klarna ஸ்டார்ட்-அப் நிறுவனம்

ஸ்டாக்ஹோம்: தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு வீடியோ மெசேஜ் அனுப்பி, சுமார் 700 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது க்ளார்னா (Klarna) என்ற ஸ்வீடன் நாட்டு ஸ்டார்ட்-அப் நிறுவனம்.

ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் இயங்கி வருகிறது க்ளார்னா என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம். நிதி சார்ந்த தொழில்நுட்ப சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம் கடந்த 2005-இல் தொடங்கப்பட்டது. இப்போது தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது. அதாவது மொத்தம் உள்ள 7000 ஊழியர்களில் 10 சதவீதம். இது தொடர்பான அறிவிப்பை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செபாஸ்டியன் சீமியாட்கோவ்ஸ்கி வெளியிட்டுள்ளார்.

வழக்கமாக வேலையிலிருந்து நீக்கப்படும் ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த நடைமுறை உலக அளவில் உள்ளது. தொழிலாளரின் நலனுக்காக இந்த ஏற்பாடு. பொதுவாக வேலை நீக்க அறிவிப்புகள் முறைப்படி மின்னஞ்சல் மூலமாகவே இருக்கும். ஆனால், அதிலிருந்து மாறுபட்டு முன்கூட்டியே ரெக்கார்டு செய்த வீடியோவை ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளது க்ளார்னா.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், பணவீக்கம், பொருளாதார நிலை, வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் போன்றவற்றை இந்த வீடியோவில் மேற்கோள் காட்டி, வேலை நீக்கம் குறித்து அறிவித்துள்ளார் செபாஸ்டியன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x