

இங்கிலாந்தில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இதர சொத்துகளையும் வாங்குவதற் காக அவற்றை மதிப்பீடு செய்து வருவதாக, லிபர்டி ஹவுஸ் தலை வர் சஞ்சீவ் குப்தா தெரிவித்துள் ளார். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஸ்காட்லாந்து ஆலையை சில நாட்களுக்கு முன்பாக இவர் கையகப்படுத்தினார்.
ஸ்காட்லாந்தில் உள்ள இரு டாடா ஸ்டீல் ஆலைகளையும் ஸ்காட்லாந்து அரசு வாங்கியது. அதனை தொடர்ந்து உடனடியாக லிபர்டி குழுமத்துக்கு ஸ்காட்லாந்து அரசு விற்றது. மார்ச் 24-ம் தேதி இந்த இணைப்பு நடந்தது. இன்னும் சில மாதங்களில் இந்த ஆலை செயல்படத்தொடங்கும். இதன் மூலம் புதிதாக 150 நபர்களுக்கு வேலை கிடைக்கும்.
“இந்த ஆலையை வாங்க ஸ்காட்லாந்து அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தன. அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளூர் அரசுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். வரும் காலங்களில் சிறப்பான வியாபாரம் இருக்கும் என்று கணிக்கிறோம். இப்போது எங்களது குழுமம் இங்கிலாந்து டாடா ஸ்டீல் நிறுவனத்தை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது” என்று லிபர்டி ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் குப்தா தெரிவித்தார்.
ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர் நிகோலா ஸ்டர்ஜியோன் கூறும்போது, “ஸ்காட்லாந்து ஆலையை லிபர்டி குழுமம் வாங்கியதற்கு நன்றி. அரசாங்கத்துடன் வேகமாக இணைந்து பணியாற்றினார்கள். இதன் மூலம் பலரின் பணி பாதுகாக்கப்பட்டுள்ளது” என்றார்.
சஞ்சீவ் குப்தா பஞ்சாபில் பிறந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1992-ம் ஆண்டு இந்த குழுமம் தொடங்கப்பட்டது. 100 கோடி டாலர் அளவுக்கு இவரது நிறுவனத்துக்கு சொத்துகள் உள்ளன.