

டோக்கியோ: அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு தலைநகர் டோக்கியோவில் சுசுகி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசுகியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அவர் குவாட் நாடுகளின் தலைவர்களை சந்துத்து பேசுகிறார். இந்த பயணத்தில் ஜப்பானின் தொழில் துறையினரை பிரதமர் மோடி சந்திக்கிறார். அந்த வகையில், சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசுகியை இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார்.
அப்போது, இந்திய வாகனத்துறையில் சுசுகி மோட்டார்ஸ் நிறுவனம் செய்து வரும் பங்களிப்புக்காக பிரதமர் பாராட்டு தெரிவித்தார். நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதற்கு மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளுக்கான உற்பத்தி வசதிகள், மறுசுழற்சி மையங்களை அமைப்பதற்கு இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும், திறன் மேம்பாடு படிப்புகள் மூலம் இந்தியாவில் உள்ளுர் கண்டுபிடிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது.
முன்னதாக, ஜப்பானின் என்இசி தலைவர் நோபுஹிரோ எண்டோவை பிரதமர் மோடி சந்தித்து பேசியிருந்தார்.
ஜப்பான் செல்வதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்டுருந்த அறிக்கையில், "எனது டோக்கியோ பயணத்தின்போது, இந்தியா - ஜப்பான் இடையேயான கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை மேலும் தொடர்வதை எதிர்நோக்கியுள்ளேன். இரு நாடுகள் இடையேயான கூட்டுறவில், பொருளாதார ஒத்துழைப்பு முக்கியமான அம்சமாகும். கடந்த மார்ச் மாதம் இந்தியா - ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு நடந்தது. அப்போது, அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் ஜப்பானின் முதலீடு 5 டிரில்லியன் ஜப்பான் யென் அளவுக்கு இருக்க வேண்டும் என்று நானும், ஜப்பான் பிரதமர் கிஷிடாவும் அறிவித்தோம்.
இரு நாடுகள் இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் தொழில் அதிபர்களை சந்தித்து பேசுவேன். ஜப்பானில், 40 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இரு நாடுகள் இடையேயான உறவில், இவர்கள் முக்கிய அங்கமாக உள்ளனர். அவர்களையும் சந்தித்து பேச உள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த பயணம் குறித்து ஜப்பானுக்கான இந்தியத்தூதர் எஸ்.கே.வர்மா, "குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானில் சுமார் 40 மணி நேரம் தங்குகிறார். இதில் அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பான் பிரதமர்களுடனான சந்திப்பு உட்பட மொத்தம் 23 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். 35 நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.