விவசாயம், கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்: தமிழகம் முதலிடம்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் பட்டியலில் அதிக புள்ளிகளுடன் தமிழகம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசு வெளியிட்ட செய்திகுறிப்பு: 2022 ஏப்ரல் மாதத்திற்கான விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (அடிப்படை: 1986 / 87 = 100) 10 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 1,108 மற்றும் 1,119 புள்ளிகளாக உள்ளது. அரிசி, கோதுமை - ஆட்டா, சோளம், கம்பு, கேழ்வரகு, காய்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வே விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான பொதுக்குறியீடு உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இந்தக் குறியீடு உயர்வு - வீழ்ச்சி, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை 19 மாநிலங்களில் 1 முதல் 20 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. அதேவேளையில் தமிழகத்தைப் பொறுத்தவரை 7 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பட்டியலில் 1,275 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இமாச்சலப் பிரதேசம் 880 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

கிராமப்புறத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை 19 மாநிலங்களில் 2 முதல் 19 புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் 7 புள்ளிகள் குறைந்துள்ளது. இந்தக் குறியீட்டில் 1,263 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், 931 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

தமிழகத்தில் அரிசி, மீன், வெங்காயம், காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததே இந்த சாதனைக்குக் காரணமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in