

நமது மின்னஞ்சல் மற்றும் மொபைல் குறுஞ்செய்திகள் போன்ற எல்லா இடங்களிலும் தனிநபர் கடன் பற்றிய விளம்பரங்களைப் பார்க்கலாம். கவர்ச்சிகரமான வார்த்தைகளுடன் இருக்கும் அவைகள் நம் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை. ஆனால், உண்மையில் ஒரு வங்கியில் சென்று விசாரித்து தனிநபர் கடன் பெறுவது, தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பதற்கு சமமான சாகசமாகி விடும்.
தனிநபர் கடன் என்பது எந்தவித உத்தரவாதமும் இல்லாமல், வாடிக்கையாளர்களின் செலவினங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. அதனால் கடனைத் திருப்பி வசூலிப்பதில் வங்கிகள் கவனமாகவும் அதிக எச்சரிக்கையாகவும் செயல்படுகின்றன. தனிநபர் கடன் வழங்கும் போது வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து என்னென்ன எதிர்பார்க்கின்றன. தனிநபர் கடன்களுக்கான வட்டி, தவணைத் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?
- இவை விவரிக்கிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொதுமேலாளருமான 'குறள் இனிது' சோம. வீரப்பன்...
தனிநபர் கடன்கள்: வங்கிகளில் வளர்ச்சி காரணங்களுக்காக கடன் வழங்கப்படுவது நம் அனைவருக்கும் தெரியும். அதாவது விவசாயத் தேவைகளுக்கு, தொழில் தொடங்குவதற்கு, வீடு, வாகனங்கள் வாங்குதற்கு வங்கிகள் கடன் வழங்கின்றன. இந்த வகைக் கடன்களின் மூலமாக புதிதாக ஒரு சொத்துக்கள் உருவாக்கப்படும். ஆனால் தனிநபர் கடன் என்பது முழுவதும் செலவினங்களுக்காக மட்டுமே வாங்கப்படுகிறது. மருத்துவச் செலவு, அவசரத் தேவைக்காக வாங்குவதே பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன். இதில் புதிதாக எந்த சொத்துக்களும் உருவாகாது. செலவுகள் மட்டுமே இருக்கும். வங்கிகளில் நியாயமான வட்டிகளில் தனிநபர் கடன்கள் வழங்கப்படுகின்றன.
வங்கிகளின் எதிர்பார்ப்பு: சரி, வாடிக்கையாளர் ஒருவருக்கு தனிநபர் கடன் வழங்க வங்கிகள் அவரிடமிருந்து என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கின்றன என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கின்றன. தனிநபர் கடன்கள் வழங்குவதற்கு முன்பாக வங்கிகள் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபரின் 'ட்ராக் ரெக்கார்டு' விபரங்களை முதலில் சரிபார்க்கும். அதாவது வாடிக்கையாளர் வேறு ஏதாவது கடன் வாங்கி இருக்கிறாரா? வாங்கியிருந்தால் அதனை தவறாமல் திருப்பிச் செலுத்தியிருக்கிறாரா? என்று சிபில் மூலமாக சரிபார்த்துக் கொள்ளும். இரண்டாவதாக, வாடிக்கையாளருக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நிரந்தர வருமானம் இருக்கிறதா? என்று வங்கிகள் உறுதி செய்து கொள்ளும்.
கடன் கேட்டு விண்ணப்பிப்பவர் மாத ஊதியக்காரர் என்றால் அவருக்கு மாதாமாதம் சம்பளம் வந்து விடும். அவர்கள் மத்திய, மாநில அரசு ஊழியராகவோ, அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுனத்தில் வேலை செய்பவராகவோ, பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவராகவோ இருக்கலாம். மாதச் சம்பளக்காரராக இருந்தால் கடன் பெறுவது கொஞ்சம் எளிது. அதேபோல ஓர் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பதால் கடன் பெறுபவர் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். சாதாரணமாக ஓய்வு பெறுவதற்கு முன்பு கடனை அடைக்க வேண்டும் என்று வங்கிகள் எதிர்பார்க்கும். அதனால், கடனுக்காக விண்ணப்பிப்பவர் பணி ஒய்வு பெற எவ்வளவு நாள் இருக்கிறது என்றும் வங்கிகள் பார்க்கின்றன. சம்பளம் மூலமாக கடன் பெறுவதற்கு Form -16 சம்பள விபரம் கேட்கப்படும்.
திருப்பிச் செலுத்தும் திறன்: இவைகள் தவிர, வாடிக்கையாளரின் சம்பளத்தில் இருந்து வருமான வரி கழிக்கப்படும். இவைகளுடன் சேமநல நிதி போன்ற வழக்கமான பிடித்தங்களை நீக்கிவிட்டு மீதம் எவ்வளவு சம்பளம் கைக்கு வருகிறது. அந்த வருமானம் வாடிக்கையாளரின் குடும்பச் செலவுகளுக்கு போதுமானதாக இருக்கிறதா? அவரது செலவினங்கள் போக மீதித் தொகையில் வங்கிக் கடனுக்கான தவணையைத் திருப்பி செலுத்த முடியுமா போன்ற விபரங்களை வங்கிகள் பார்க்கும். அதேபோல தவணைத் தொகையை எப்படி திருப்பி வாங்குவது என்றும் வங்கிகளில் பார்ப்பார்கள். கடன் வாங்கும் வங்கியிலேயே வாடிக்கையாளருக்கு சம்பளம் வருகிறது என்றால் பிரச்சினை இல்லை.
தவணைத் தொகையை சம்பளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். இதிலும் இரண்டு விஷயங்கள் முக்கியமானது. ஒன்று வங்கி தவணைத் தொகையை தனது வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக எடுத்து கொள்ளலாம் என்று வாடிக்கையாளர் கடிதம் தர வேண்டும். மற்றொன்று வேலை கொடுத்திருக்கும் முதலாளியும் கடன் காலம் முடியும் வரை சம்பளத்தை அந்த வங்கியில் தான் செலுத்துவேன் என்றும் கடிதம் தர வேண்டும்.
வட்டி விகிதம் ( rate of interest): தனிநபர் கடனைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியமானது வட்டி விகிதமும், திருப்பிச் செலுத்தும் தவணைக் காலமும் தான். பொதுவாக வங்கிகளில் வட்டி விகிதம் கணக்கிடும் போது சிபில் ஸ்கோரை பார்த்து தான் வட்டி விகிதத்தை முடிவு செய்வார்கள். `ட்ராக் ரெக்கார்ட்` என்று சொல்லப்படும் முந்தைய வங்கிக் கடன் விபரங்களை வைத்தும் வட்டி விகிதம் முடிவு செய்யப்படும். 'ரிஸ்க் பர்சப்ஷன்' என்று வங்கியில் சொல்வார்கள். கடனை வசூலிப்பதில் அதிக சிரமங்கள் இருக்கும் என்று வங்கி நினைத்தால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.
அதிகமான சிரமம் இருந்தால் அதிகமான வட்டி விதிக்கப்படும். சிரமம் குறைவு என்று நினைத்தால் வட்டியும் குறைவு. உதாரணமாக சம்பளம், கடன் கொடுக்கும் வங்கிக்கே வந்து விடுகிறது என்றால் தவணைத் தொகை வருமா? வராதா? என்ற கவலை வங்கிக்கு வேண்டியது இல்லை. மாறாக செக் ஆஃப் பெசிலிட்டி இல்லை. தவணைத் தொகையை வாடிக்கையாளரே நேராக வங்கியில் சென்று கட்ட வேண்டும் என்றோ, வாடிக்கையாளருக்கு திடீரென வேலை போய் விட்டால் என்ன செய்வது போன்ற சிரமங்கள் அதிகம் இருந்தால் வட்டி விகிதம் கூடும். 9 சதவீத வட்டிக்கு தனிநபர் கடன்கள் தருகிற வங்கிகளும் இருக்கின்றன. அதிகபட்சம் 12 சதவீத வட்டிக்கு கடன் வழங்குகின்றன.
தவணைத் தொகை: அடுத்து மிகவும் முக்கியமானது மாதாந்திரத் தவணைத் தொகை. சில வங்கிகள் கடனைத் திருப்பிச் செலுத்த ஒரு வருடம் அவகாசம் தருகின்றன. சில வங்கிகள் 3 வருடங்கள், சில வங்கிகள் 5 வருடங்கள் திருப்பிச் செலுத்தும் தவணைக் காலம் தருகின்றன. இந்த இஎம்ஐ எப்படி செலுத்தலாம் என்பதற்கு ஒரு உதாரணம் பார்க்கலாம். தனிநபர் கடன் என்பதால் தோராயமாக ரூ.10,000 கணக்கில் எடுத்துக் கொள்வோம். ரூ.10,000-க்கு, 9 சதவீத வட்டியில் 12 மாதங்களில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றால், மாதத் தவணையாக ரூ.874 செலுத்த வேண்டும். அதே 10 சதவீத வட்டி விகிதத்திற்கு ரூ.879 மாதத் தவணையாக செலுத்த வேண்டும். வட்டி விகிதம் 12 சதவீதம் என்றால் ரூ.888 மாதத் தவணையாக திருப்பி செலுத்த வேண்டும்.
வட்டி விகிதங்கள் 9,10,12 சதவீங்களாக கூடும் போது தவணைத் தொகையில் மாதத்திற்கு ரூ.5, ரூ.8 எனக் கூடுகிறது. வாடிக்கையாளர் திருப்பிச் செலுத்தும் காலத்தை 3, 5 வருடங்கள் எனக் கூட்டும் போது மாதத் தவணை வெகுவாக குறைந்து விடும். உதாரணமாக ரூ.10,000-க்கு 9 சதவீதம் வட்டியில் மாதத்தவணைத் தொகை ரூ.207 மட்டும் கட்டினால் போதும். அதனால் மாதாந்திர தவணை அழுத்தமாக இருக்கக் கூடாது என்று வாடிக்கையாளர் நினைத்தார் என்றால் திருப்பிச் செலுத்தும் காலத்தை அதிகரிப்பது நல்லது.
தனிநபர் கடனுக்கும் ப்ராஸசிங் கட்டணம் உண்டு. பொதுவாக 1 சதவீதம் வசூலிக்கப்படும். குறைந்தபட்ச கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. சில வங்கிகளில் கியாரண்டி கேட்கப்படுகிறது.
தனிநபர் கடன் மூலமாக வாடிக்கையாளருக்கு எந்த வருமானமும் கூடப் போவதில்லை. அதனால் அவசியம் இருந்தால் மட்டுமே கடன் வாங்க வேண்டும். தேவைப்படும் அளவிற்கே வாங்க வேண்டும். தவறாமல் திருப்பிச் செலுத்தி விட வேண்டும். இதில் மற்றொரு விஷயம் தனியார் நிதிநிறுவனங்களில் ஃப்ளட் ரேட் என்று கடன் தருவார்கள் ப்ளட் ரேட் என்றால் வட்டி மாறாமல் தொடர்ந்து அப்படியே இருக்கும். வங்கிகளில் தினசரி அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது. அதனால் வட்டியும் குறைந்துகொண்டே வரும். அதனால் வங்கிகளில் தனிநபர் கடன் கிடைத்தால் வாங்கிக் கொள்வது நல்லது.